அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி கேமராவை பார்க்காமல் பாடகி ரிஹானாவைப் பார்ப்பதாகப் பரவும் ஃபோட்டோஷாப் படம் !

பரவிய செய்தி
ஜி கேமராவை பார்க்காத அரிய புகைப்படம். US இலிருந்து.
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கேமராவை பார்க்காமல் நடிகையும் பாடகியுமான ரிஹானாவை பார்த்துக்கொண்டு இருப்பதாகப் புகைப்படம் ஒன்றை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஜி கேமராவை பார்க்காத
📷அரிய புகைப்படம்.🎥#US இலிருந்து.😀😂 pic.twitter.com/LbP6Q7aE9Y— JCB.க.Mohan. (@MohanKArulz) June 21, 2023
உண்மை என்ன ?
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அங்கு ஏதேனும் நிகழ்ச்சியில் ரிஹானாவுடன் கலந்து கொண்டாரா என இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
மேற்கொண்டு பரவக் கூடிய படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி ‘Mirror’ இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்று கிடைக்கப் பெற்றது. 2017ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மனிதாபிமானத்திற்கான விருதை ரிஹானா பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு அக்கட்டுரையில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த தொகுப்பில் உள்ள ரிஹானாவின் படம் ஒன்றும், பரவக் கூடிய படத்தில் உள்ள ரிஹானாவின் படமும் ஒன்றாக இருப்பதைக் காண முடிகிறது. இதனைத் தொடர்ந்து மோடியின் படத்தினையும் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடினோம்.
அதனை ‘சித்தேஷ் டெர்வான்கர்’ எனும் பேஸ்புக் பக்கத்தில் 2021 ஜனவரி மாதம் பதிவிடப்பட்டுள்ளது. அப்படத்தில் மோடிக்கு அருகில் உள்ள இருக்கையில் ரிஹானா அமர்ந்திருக்கவில்லை. அந்த இருக்கை காலியாக உள்ளது. அந்த காலி இருக்கையில் ரிஹானா அமர்ந்திருப்பது போல் எடிட் செய்துள்ளனர்.
ஆனால், மோடியின் அந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என எந்த தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் ரிஹானா மற்றும் மோடி வெவ்வேறு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட படத்தை ஒன்றாக எடிட் செய்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : கேமராவை மறைத்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி தள்ளி விட்டாரா ?
இதற்கு முன்னர் மோடி மற்றும் கேமராவை தொடர்புப்படுத்திப் பல போலி செய்திகள் பரப்பப்பட்டன. அவற்றின் உண்மைத் தன்மைகளையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : பிரதமர் மோடி தன் தாயின் அஸ்தியை கரைக்க கேமராமேன் உடன் சென்றதாகப் பரவும் பழைய வீடியோ
முடிவு :
நம் தேடலில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி கேமராவை பார்க்காமல் அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணை பார்த்துக் கொண்டு இருப்பதாகப் பரவும் படம் உண்மை அல்ல. இரண்டு வெவ்வேறு படங்களை ஒன்றாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.