RJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ ?| உண்மை என்ன?

பரவிய செய்தி
#RJvignesh மிரட்டல். யாரா இருக்கும் ? சங்கியா அல்லது உபியா ?
மதிப்பீடு
விளக்கம்
யூடியூப் மூலம் பிரபலமடைந்து பின்னர் திரைப்படங்களில் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் நடித்து வரும் RJ விக்னேஷ் அரசியல் கட்சிகளின் சார்பில் மிரட்டப்பட்டதாக ஓர் வீடியோ காட்சி முகநூலில் வைரலாகி வருகிறது.
புங்குடுதீவு என்ற முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ நூற்றுக்கணக்கான ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. அவரை மிரட்டியது யார் என்ற கேள்வியும் பகிரப்படும் பதிவுகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது.
வைரல் செய்யப்படும் வீடியோ லோ குவாலிட்டியாக இருப்பதையும், சமீபத்தில் நிகழ்ந்தவை போல் இல்லை என்பதை அறிய முடிகிறது. மேலும், வீடியோவில் ஸ்மைல் சேட்டை சேனலின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாகவே RJவிக்னேஷ் குழுவினர் ப்ளாக் ஷீப் எனும் யூடியூப் சேனலை இயக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக Dude விக்கியிடம் யூடர்ன் ஆசிரியர் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” இந்த வீடியோ 3 வருடங்களுக்கு முன்பாக நாங்கள் ஸ்மைல் சேட்டையில் இருந்த பொழுது எடுத்த பிராங்க் வீடியோ. ஸ்மைல் சேட்டையில் இருந்து வெளியே வந்ததால் அந்த வீடியோவை பதிவிடாமல் இருந்து வந்தோம். இதில், விக்னேஷை வைத்து எடுக்கவில்லை, சுற்றியுள்ளவர்களை வைத்து பிராங்க் செய்த பெரிய வீடியோ. ஆனால், விக்னேஷ் சார்ந்த வீடியோ காட்சி மட்டும் எடுத்து பகிரப்பட்டு உள்ளது. யாரிடம் இருந்து வெளியே வந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சில கட்சிகளில் இருந்து இப்படி மிரட்டியதாக தவறாகப் பரப்பி வருகிறார்கள். ஆனால், பிராங்க் வீடியோ என்பது தான் உண்மை ” எனக் கூறியுள்ளார்.
மேலும், RJவிக்னேஷ் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” நாங்களே எங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களை பிராங்க் செய்வதற்காக ஃபன் பன்றோம் டீமும், நாங்களும் செய்தது. நாங்கள் ஸ்மைல் சேட்டையில் இருந்த பொழுது செய்த வீடியோ. ஆனால் அதை வெளியிடவில்லை. அந்த வீடியோ எடுத்து சில ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், சரியாக என் காட்சியை மட்டும் கட் செய்து பரப்பி உள்ளார்கள். அதில் உள்ளவர்களுடன் விளக்கம் அளிக்கும் வகையில் ஓர் வீடியோவை நாங்கள் வெளியிடலாம் என இருக்கிறோம் ” எனக் கூறி இருந்தார்.
வைரலாகும் வீடியோவில் தினகுரல் செய்தி எனும் பெயரும், லோகோவும் இடம்பெற்று உள்ளது. எனினும், 3 ஆண்டுகளுக்கு முன்பாக அலுவலகத்தில் உள்ளவர்களை பிராங்க் செய்வதற்காக எடுக்கப்பட்ட வீடியோவை சமீபத்தில் கட்சிகள் சார்பில் RJ விக்னேஷ் மிரட்டப்பட்டதாக தவறாக பகிரப்படுகிறது.