இந்துப்பு செயலிழந்த சிறுநீரகத்தை இரண்டே வாரத்தில் சரிசெய்யுமா ?| மருத்துவரின் பதில்.

பரவிய செய்தி

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து! நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும். இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள். 15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும், அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இந்துப்பு (Rock Salt) என அழைக்கப்படும் ஒருவகையான உப்பை பயன்படுத்துவதன் மூலம் செயலிழந்த சிறுநீரகத்தை 2 வாரத்தில் சரிசெய்ய முடியும் என நீண்ட விளக்கம் கொடுத்த பதிவு ஒன்று முகநூல் குழுக்களில் சுற்றி வருகிறது. இந்த பதிவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட யூடியூப் வீடியோக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி அதிக பார்வைகளை பெற்று உள்ளது என்பதையும் அறிய முடிந்தது.

Advertisement

Archive link 

இந்துப்பு என்றால் என்ன, அது உண்மையில் சிறுநீரகப் பிரச்சனையை சரி செய்யுமா என்கிற விவரங்களையும், மருத்துவர் அளித்த தகவலையும் இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

உண்மை என்ன ? 

தமிழில் பாறை உப்பு, இமயமலை உப்பு என்றும்(பேச்சு வழக்கில் இந்துப்பு), ஆங்கிலத்தில் ராக் சால்ட், ஹிமாலயன் சால்ட் என அழைக்கப்படும் இந்துப்பு சித்த மருத்துவத்திலும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பஞ்சாப், இமயமலை அடிவாரத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து இந்துப்பு அதிக அளவில் கிடைக்கிறது. பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு வெவ்வேறு வண்ணங்களில் காணப்படும்.

Advertisement

இந்துப்பு சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய உதவுவதாக பரவும் தகவல் குறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ”  சிறுநீரக நோயால் பாதித்தவர்களுக்கு சாதாரண உப்புக்கு மாற்றாக ஹிமாலயன் ராக் சால்ட் அல்லது இந்துப்பு என அழைக்கப்படும் உப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். சிறுநீரக செயலிழப்பில் ஏன் சாதாரண உப்பு பரிந்துரைக்கப்படவில்லை என்றால், சாதாரண உப்பு சோடியம் குளோரைடு. சிறுநீரக செயலிழப்பில் சோடியம் எடுத்துக் கொள்வது சிறுநீரக செயல்பாட்டை மேலும் மோசமாகி பிபி-யை அதிகரிக்கும்.

சுவைக்காக கிட்டத்தட்ட அனைத்து உணவு பொருட்களில் உப்பு சேர்க்கப்படுவதால் நமது இந்திய உணவே சோடியம் நிறைந்துள்ளது. சோடியம் உட்கொள்வதை குறைக்க வேண்டும் என்பதே அடிப்படையான யோசனை என்பதால் உப்பு மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், சுவைக்கு பழகிய நோயாளிகளில் உப்பு இல்லாத உணவை எடுத்துக் கொள்ள இயலாது, அது கடினமாக இருக்கும். எனினும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த சோடியம் கட்டுப்பாடு அவசியம்.

இந்த இடத்தில் தான் போலியான தயாரிப்பு விற்பனை குழுக்கள் நுழைகின்றன. அவர்கள் ஹிமாலயன் ராக் சால்ட்டை(இந்துப்பு) கொண்டு வந்து சாதாரண உப்புக்கு மாற்றாக விளம்பரம் செய்கிறார்கள். அது பாறையில் இருந்து எடுக்கப்படுவதால் தோற்றத்தில் சாதாரண உப்பிடம் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.

ஆனால், உண்மை அதுவல்ல. இதிலும் சோடியத்துடன் பிற தாதுக்களும் அதிகம் உள்ளன. அயோடிஸ் செய்யப்பட்ட உப்பு மற்றும் ஹிமாலயன் ராக் சால்ட் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இளஞ்சிவப்பு உப்பான இந்துப்பில் தாதுக்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். எனவே, இந்த தாதுக்களின் நன்மையைப் பெற விரும்பினால் இந்த உப்பில் கிட்டத்தட்ட 30 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் 30 கிராம் எடுத்துக் கொண்டால் உங்களின் சோடியம் அளவானது சாதாரண பரிந்துரையை விட 500% அதிகம் செல்லும். இதுதொடர்பான எந்தவொரு இந்திய ஆய்வு தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  1. ஹிமாலயன் ராக் சால்ட்(இந்துப்பு) மற்றும் அயோடைஸ் உப்பு இரண்டிலும் சோடியம் உள்ளது.
  2. சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களுக்கு இரண்டையும் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படவில்லை.
  3.  இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தாது மற்றும் கிரியேட்டின் குறைப்பது தெடர்பாக எதுவும் இல்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.

2019-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி இந்துப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் குறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமார் அளித்த தகவல் விகடனில் சிறப்பு கட்டுரையாக வெளியாகி இருந்தது.

அதில், ” இந்துப்புக்கென பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அளவுக்கு மீறி பயன்படுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தும். இந்துப்பு பயன்படுத்துவதால், செயலழிந்த சிறுநீரகம் பழைய நிலைக்குத் திரும்பி புத்துயிர் பெரும் என்று சொல்வதெல்லாம் பொய். சிறுநீரகத்தில் பிரச்சனையை வைத்துக் கொண்டு இந்துப்பை மட்டுமே கொண்டு சரி செய்துவிடலாம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு ” எனக் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, இந்துப்பை பயன்படுத்தி இரண்டே வாரத்தில் செயலிழந்த சிறுநீரகத்தைச் சரிசெய்து விடலாம் எனக் கூறி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என அறிய முடிந்தது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button