இந்தியாவில் சொகுசாக வாழும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதியா ?| உண்மை என்ன?

பரவிய செய்தி

கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள் ரோகிங்யா முஸ்லீம், பர்மாவிலிருந்து விரட்டப்பட்டு பங்களாதேஷ் வந்து அங்கு விரட்டப்பட்டு டில்லியில் வந்து இந்திய அகதியாக, இந்திய பணத்தில், உணவில் வாழ்கிறான். இவனுக்கு மூன்று மனைவிகள், அதில் இருவர் கர்பஸ்திரிகள் மற்றும் எட்டு குழந்தைகள்.

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் அகதியாய் வாழும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக முகநூலில் வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் வெளியான மீம் உடன் ஓர் பதிவை காண நேரிட்டது. அந்த பதிவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

Advertisement

ஆங்கில மீம் பதிவில், ” டெல்லியின் சாலையோரத்தில் வாழ்ந்து வரும் உதவியற்ற ஏழை ரோஹிங்கியா, உடுத்த உடை இல்லை மற்றும் உண்ண உணவு இல்லை, அவரின் 3 மனைவிகளில் 2 மனைவிகள் கர்ப்பமாக உள்ளனர், 8 குழந்தைகள் , 29000 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் 7C7 ப்ரோ எனும் விலை குறைந்த செல்போனை வைத்துள்ளார். அவர்களின் வாழ்க்கையை நாம் முன்னேற்ற வேண்டும்.. ஆகையால், சரியான நேரத்திற்கு வரி செலுத்துவோம் ” என வெளியாகி இருக்கிறது. இதை வைத்து, இவர்களுக்கு தான் குடியுரிமை வழங்க வேண்டும் என வெளிப்படையாக அகதிகளை மோசமான வார்த்தைகளை கொண்டு திட்டி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில், 2018 ஏப்ரல் 15-ம் தேதி நியூஸ் 18 ஆங்கில செய்தியின் இணையதளத்தில் ” Rohingya Lose Their Sanctuary in Delhi to Fire, New Life of Six Years Turns to Ashes ” என்ற தலைப்பில், டெல்லியில் வாழ்ந்து வந்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளின் வாழ்விடம் தீக்கிரையாகியதாக வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியில், தற்பொழுது வைரலாகும் படத்தை Debayan Roy என்ற புகைப்படக் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.

Advertisement

நியூஸ் 18 செய்தியில் வெளியான தகவலின்படி, ரோஹிங்கியா அகதியான ஹாரூன் என்பவர் மியான்மரியில் இழைக்கப்பட்ட துன்புறுத்தலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவரது குடும்பமும் , மேலும் 52 ரோஹிங்கியா குடும்பங்களும் 2012 முதல் டெல்லியின் மதன்பூர் காதரில் உள்ள தாருல் ஹிஜ்ராத் எனும் அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்துள்ளனர். 2018 ஏப்ரல் 15-ம் தேதி முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த பொருட்கள் சாம்பலாகி விட்டது. அங்குள்ள மக்களிடம் இருந்த யு.என் அடையாள அட்டைகளை தீக்கிரையாகி உள்ளன. எனினும், புதிய அடையாள அட்டைகள் மற்றும் வசிப்பிடம் அமைத்து தருவதற்கு காவல்துறை உறுதி அளித்தாக ” வெளியாகி இருக்கிறது.

இதேபோல், மூன்று குழந்தைகளுக்கு தந்தையான இப்ராஹிம் ஹபிபுல்லா போன்ற பலரும் சாம்பலான இடத்தில் இருந்து யு.என் அளித்த அடையாள அட்டை மற்றும் குரானை தேடிக் கொண்டிருப்பதாகவும், தன் 2 வயது குழந்தையை காப்பாற்றும் பொழுது அவரின் மனைவி சமீனாவிற்கு கையில் தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் 18 செய்தியில் வெளியான ரோஹிங்கியாக்கள் புகைப்படத்தில் இரு ஆண்கள்களும், அவர்களை சுற்றி 7 குழந்தைகள் உள்ளனர். இப்புகைப்படம் டெல்லி ரோஹிங்கியா முகாமில் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்டவை. புகைப்படத்தில் இருப்பவருக்கு 3 மனைவி, 8 குழந்தை, சொகுசான வாழ்க்கை வாழ்வதாக எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, அவர்கள் தங்களின் உடமைகளை இழந்து வேதனையில் இருக்கும் தகவலே கிடைத்துள்ளது.

டெல்லியில் ரோஹிங்கியாக்கள் வசித்து வந்த இடத்தில் தீ விபத்து நிகழ்ந்தது குறித்து பிபிசி , பிசினஸ் ஸ்டாண்டர்டு உள்ளிட்ட பல முதன்மை செய்தி ஊடங்களும் செய்திகளை வெளியிட்டு இருந்தனர். அங்கு நிகழ்ந்த தீ விபத்தில் 230 ரோஹிங்கியாக்கள் தங்களின் உடமைகளை இழந்ததாக கூறப்படுகிறது.

ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் இந்தியாவில் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக வைரலாகும் மேற்காணும் மீம் பதிவு கடந்த ஜூன் மாதத்திலேயே இந்திய அளவில் பரவி இருந்தன. தற்பொழுது, குடியுரிமை விவகாரம் தீவிரமாகி உள்ளதால் மீண்டும் அந்த பதிவை வெறுப்புணர்வுடன் பகிர்கின்றனர்.

அந்த புகைப்படத்தில் இருப்பவர் கையில் இருக்கும் செல்போன் மற்றும் அவரைச் சுற்றியுள்ள குழந்தைகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்தியாவில் சொகுசான வாழ்க்கையை வாழ்வதாக பரப்பி உள்ளனர்.

முடிவு :  

நம்முடைய தேடலில் இருந்து, டெல்லியில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதி சொகுசான வாழ்க்கையை வாழ்வதாக பகிரப்படும் புகைப்படம் 2018-ல் டெல்லி முகாமில் தீ விபத்து நிகழ்ந்த பிறகு நியூஸ் 18 புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படம். வாழ்விடத்தை இழந்த நிலையில் இருக்கும் மக்களின் புகைப்படத்தை வைத்து சொகுசான வாழ்க்கையை வாழ்வதாக வெறுப்புணர்வை உருவாகின்றனர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close