This article is from Sep 30, 2018

குப்பை வண்டியாகிய ரோல்ஸ் ராய்ஸ்.. ஆதாரம் உண்டா ?

பரவிய செய்தி

1912-ல் இந்திய மகாராஜாக்களில் ஒருவரான ஹைதராபாத் நிஜாம் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விலைக்கு வாங்கி நகரில் குப்பை அள்ளும் வாகனமாக பயன்படுத்தி உள்ளார். உலகின் தலை சிறந்த கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் விற்பனையை ஆட்டம் காண வைத்தவர் ஹைதராபாத் நிஜம்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்திய மகாராஜாக்கள் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன வாகனங்களை நகரில் குப்பை அள்ளும் வாகனமாக பயன்படுத்தினார்கள் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை.

விளக்கம்

1900-க்கு பிந்தைய காலக்கட்டத்தில் தயாராகி பந்தைய கார்கள் போட்டியின் மூலம் பிரபலமடைந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உலகின் பிற பகுதிகள் மட்டுமின்றி சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவில் அனைவரையும் ஈர்த்தவை.

குறிப்பாக, ஆடம்பர வாழ்க்கைக்கு ஏற்றதாக கருதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அதிகளவில் இந்தியாவில் இருந்த மகாராஜாக்களால் வாங்கப்பட்டன.  ராஜாக்கள், வெல்வந்தர்கள் என ஒவ்வொருவரிடமும் 3 முதல் 5 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன.

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் என்றாலே இந்திய மகாராஜா ஒருவரால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நினைவிற்கு வரும். இந்தியத்தில் அது தொடர்பான கதை ஒன்றை கண்டிருக்கக்கூடும்.

லண்டன் நகரில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோ ரூமிற்கு சென்ற ஹைரதராபாத் நிஜாம் அவர்களின் எளிமையானத் தோற்றத்தை கண்டு அங்கிருந்த பணியாட்கள் கார் பற்றிய விவரங்கள் தெரிவிக்க மறுத்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த நிஜாம் ஒரே நேரத்தில் 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விலைக்கு வாங்கி இந்தியாவில் தன் சமஸ்தானத்தின் நகர் பகுதிகளில் சுத்தம் செய்யும் வாகனமாக பயன்படுத்திய வரலாறு உள்ளது என நீண்ட காலமாக ஓர் கதையை படித்து இருப்போம்.

” ராஜஸ்தானின் ஆல்வார் சமஸ்தானத்தின் மகாராஜா ஜெய்சிங் ஒருமுறை லண்டனில் உள்ள  ரோல்ஸ் ராய்ஸ் ஷோ ரூமிற்கு சென்ற போது அவமதிக்கப்பட்ட காரணத்தினால் 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விலைக்கு வாங்கி தன் சமஸ்தான நகரில் குப்பை வண்டியாக பயன்படுத்தி தக்க பதிலலடி கொடுத்தார். இதனால் அந்நிறுவனத்தின் விற்பனை சரிந்ததாகவும் ஓர் கதை மிகவும் பிரபலம் ”

கதைக்கு ஆதாரம் உண்டா ? 

இரு கதையிலும் ராஜாக்களின் பெயர் மட்டுமே மாற்றம், ஆனால் கதைக்கரு ஒன்றே…!! மேலும், அதனுடன் பகிரப்படும் புகைப்படங்களும் ஒன்றே..

ஒரு காரின் சக்கரத்திற்கு முன்னால் குப்பை அள்ளும் துடைப்பம் போன்று இணைக்கப்பட்ட படங்களே இக்கதைக்கு வலு சேர்கின்றன.

வாகனத்தில் குப்பையை சுத்தம் செய்யும் துடைப்பம் இணைக்கப்பட்டு இருக்கும் கார் உண்மையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல, அது ford நிறுவனத்தின் V8 Rodster வாகனம். ford அதிகம் பிரெஞ்சு கட்டமைப்பு. லைட்கள், இடப்பக்க ஸ்டேரிங், நம்பர் பிளேட் போன்றவை பிரெஞ்சு என தோற்றுவிக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வந்த யுத்த காலத்தில் வீதிகளில் சிதறி இருக்கும் கண்ணாடி துண்டுகளால் வாகனத்தின் டயர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அன்றைய காலத்தில் வாகனங்களுடன் சுத்தம் செய்யும் துடைப்பம் போன்றவை இணைக்கப்பட்டன.

ரோல்ஸ் ராய்ஸ் எனக் கூறும் அப்படத்தில் அதனை ஆச்சரியமாக பார்க்கும் அனைவரும் மேற்கத்திய உடையில் இருப்பதை காண முடிகிறது. இந்திய நகரங்களில் பயன்படுத்தப்பட்டவை என்பதற்கு முற்றிலும் மாறுபட்டதாக அவை காண்பிக்கின்றன.

ஹைதராபாத் நிஜாம் பயன்படுத்திய 100 ஆண்டுகள் பழமையான ரோல்ஸ் ராய்ஸ் கார் காட்சிப்படுத்தபட்ட போது..

இந்தியாவில் அதிகம் நம்பப்படும் ஜெய்சிங் மற்றும் நிஜாமின் குப்பை கார் கதை பற்றி முழு விவரம் அறிந்து கொள்ள YOUTURN சார்பில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு  ஈமெயில்  அனுப்பப்பட்டது. அதற்கு ரோல்ஸ் ராய்ஸ் பதிலும் அளித்து உள்ளது.

” இந்த கதை உண்மை என்று ஆதாரம் எதுவுமில்லை ” என தெரிவித்துள்ளனர்.

மிகவும் அழகான கற்பனைக் கதையை இரு மகாராஜாவிற்கு கூறியதோடு ஒரே படத்தை அதும் ford வாகன படத்தை பயன்படுத்தி உள்ளனர். ரோல்ஸ் ராய்ஸ் பற்றி பரவும் கதைகளுக்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை..!!!

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader