சவூதி அரேபியாவில் ரொனால்டோவுக்கு தங்கத்தால் ஆன பைக் பரிசளித்ததாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி
22 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள், சவுதி அரேபியாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல் நசார் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ரொனால்டோவிற்கு 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட பைக் சவூதி அரேபியாவில் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதாக 26 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Motorcycle made of 22 carat gold, gifted to CR7 (Cristiano Ronaldo) in Saudi Arabia 🤩 #CristianoRonaldo ki toh balle balle 🕺🕺🕺 pic.twitter.com/BFznPXj0H9
— Lotus 🪷🇮🇳 (@LotusBharat) May 7, 2023
உண்மை என்ன ?
சவூதி அரேபியாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளதா என இணையத்தில் தேடினோம். அதிகாரப்பூர்வமான எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
அவ்வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு மேற்கொண்டு தேடியதில் ‘faisal_abu_sara’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இருசக்கர வாகனத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதைக் காண முடிந்தது.
அந்த பக்கத்தின் பயோவில் ‘தி ஸ்டார்ம் பைக்’, ‘தம்மம் பைக்கர்ஸ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்பக்கம் முழுவதும் பரவக் கூடிய இருசக்கர வாகனத்தின் பல படங்கள் உள்ளது.
அப்பதிவுகளில் தன் விருப்பப்படி (custom-made) உருவாக்கப்பட்ட வாகனம், ஸ்போர்ட் பைக் பிரிவில் பரிசுகளை வென்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே முறையில் உருவாக்கப்பட்ட பிற வாகனங்களையும் அவரது பதிவுகளில் பார்க்க முடிந்தது.
பரவக் கூடிய இருசக்கர வாகனம் குறித்த பதிவுகள் 2018ம் ஆண்டு முதலே இன்ஸ்டாகிராமில் உள்ளது. மேலும் அப்பக்கத்தில் 2019ம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ள ஒரு நேர்காணலிலும் ரொனால்டோவுக்கு பரிசளிக்கப்பட்டதாகப் பரவும் வாகனத்தை காண முடிகிறது.
இவ்வாகனம் குறித்துக் கூடுதல் விவரங்கள் அறிய அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடர்பு கொண்டோம். அவரிடமிருந்து பதில் கிடைத்தவுடன் கட்டுரையில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்படும். எனினும், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தங்கத்தால் ஆன மோட்டார் சைக்கிள் பரிசளிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி பொய் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : சவுதி அரேபியா அரசு கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு அளிப்பதாக பரவிய தவறான செய்தி !
இதற்கு முன்பாக, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவுடனான வெற்றியைக் கொண்டாடும் விதமாகச் சவூதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்ததாகதவறான செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், சவூதி அரேபியாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது, சவுதி அரேபியாவில் பைசல் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.