ஆர்எஸ்எஸ் 15,000 பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுகிறதா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

இந்தியா முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையில் இயங்கும் 15,000 கல்வி நிறுவனங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படுகிறது. ஆர்எஸ்எஸ்-யின் சேவைக்கு மத்திய, மாநில அரசுகள் நன்றி தெரிவித்துள்ளது.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் ஏற்படும் இடப் பற்றாக்குறையை சமாளிக்கவும், குறைவான பாதிப்பு கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் கொரோனா பராமரிப்பு மையங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அவ்வாறான கொரோனா பராமரிப்பு மையங்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் இயங்கும் 15,000 பள்ளிகள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரே தகவல் சுற்றி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் மீம் பதிவில் இருக்கும் கொரோனா பராமரிப்பு மையத்தின் புகைப்படத்தை பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அதே மையத்தில் எடுக்கப்பட்ட அதை ஒத்த மற்றொரு புகைப்படத்தை 2020 ஏப்ரல் 4-ம் தேதி தி கார்டியன் செய்தியில் ஈரான் நாட்டின் டெஹ்ரானில் உள்ள தற்காலிக மருத்துவமனை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

கோப்புப் புகைப்படமாக பயன்படுத்தினார்களா எனத் தெரியவில்லை. அடுத்ததாக, ஆர்எஸ்எஸ் 15,000 பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதாக எனக் கூறவரும் தகவல் குறித்து தேடுகையில் அவ்வாறான எந்தவொரு செய்தியும், அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. ஆர்எஸ்எஸ் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர், இணையதளத்தில் கூட எந்த தகவலும் வெளியாகவில்லை.

Advertisement

ஆர்எஸ்எஸ் இயக்கும் பள்ளிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டதா எனத் தேடுகையில், ”  மத்தியப் பிரதேசத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி மையங்களுக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் அது தொடர்புடைய அமைப்புகள் 211 பள்ளிகளை வழங்கி உள்ளதாக ” ஏப்ரல் 19-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் ஆர்எஸ்எஸ் இயக்கும் சரஸ்வதி ஷிஷு மந்திர் எனும் பள்ளியில் கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தை அமைத்து உள்ளதாக ஏப்ரல் 26-ம் தேதி இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

ஏப்ரல் 24-ம் தேதி வலதுசாரி ஆதரவு தளமான Organiser வெளியிட்ட கட்டுரையில், ”  கோவிட்-19 நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தும் மையங்களாக தனது பள்ளிகளை மாற்ற ஆர்எஸ்எஸ் முடிவு செய்து உள்ளது. இதுபோன்ற சில தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்கனவே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வருகின்றன. நாட்டில் ஆர்எஸ்எஸ் நடத்தும் 15,000 பள்ளிகள் உள்ளன. இந்த மையங்கள் நெருக்கடி கொண்ட மருத்துவ உள்கட்டமைப்பிற்கு கூடுதலாக பயன்படுத்தலாம் என உணரப்பட்டது ” என இடம்பெற்று உள்ளது.

ஆர்எஸ்எஸ் நாட்டில் 15,000 பள்ளிகளை கொண்டுள்ளதாக கூறிய இதன் அடிப்படையிலேயே, ஆர்எஸ்எஸ் உடைய 15,000 பள்ளிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்படுகிறது எனப் பரவி இருக்கக்கூடும். நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்படுவது போன்று ஆர்எஸ்எஸ் கீழ் இயங்கும் பள்ளிகளும் மாற்றப்பட்டு வருகிறது.

முடிவு :

நம் தேடலில், இந்தியா முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையில் இயங்கும் 15,000 கல்வி நிறுவனங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படுகிறது எனப் பரவும் தகவல் தவறானது. அவ்வாறான எந்த தகவலும் வெளியாகவில்லை.

சில மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் மற்றும் அது தொடர்புடைய அமைப்புகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை கொரோனா தனிமைப்படுத்துதல், தடுப்பூசி மையங்களாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை மிகைப்படுத்தி ஈரான் நாட்டில் எடுக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனையின் புகைப்படத்துடன் தவறான தகவலை பகிர்ந்து வருகிறார்கள் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button