குஜராத் ஆர்எஸ்எஸ் பெண் செளமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா ?

பரவிய செய்தி
குஜராத் மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் மகளிர் அணியில் தீவிர களப்பணி செய்தவர் சவுமியா தேசய் இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு உள்ளார்..
மதிப்பீடு
விளக்கம்
” குஜராத்தைச் சேர்ந்த செளமியா தேசாய் என்ற பெண் சிறு வயது முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர், அவர் ஆர்எஸ்எஸ் பெண்கள் அணியில் முக்கிய தலைவராகவும் இருந்தவர். அவர் சமீபத்தில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாகவும், அதற்கான காரணத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ” என ட்வீட் பதிவு மற்றும் பயிற்சியில் இருக்கும் பெண்ணின் புகைப்படமும், ஹிஜாப் அணிந்த பெண்ணின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
குஜராத் ஆர்எஸ்எஸ் பெண் செளமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா எனத் தேடுகையில், 2020 செப்டம்பர் 5-ம் தேதி republicofbuzz எனும் இணையதளம் ஒன்றில் செளமியா தேசாய் பெயரில் இயங்கிய ட்விட்டர் பக்கத்தில் வெளியான புகைப்படம் மற்றும் பதிவுகளை வரிசையாக பதிவிட்டு விரிவான கட்டுரையாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஆனால், அந்த கட்டுரையில் செளமியா தேசாய் உடைய ட்விட்டர் பக்க லிங்க் அளிக்கப்பட்டு இருந்தது. அதனுள் சென்று பார்க்கையில், செளமியா தேசாய் என்ற பெயரில் ட்விட்டர் பக்கம் இல்லை.
மேலும், @smileforpeace என்ற ஐடி 2021 அக்டோபரில் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் செளமியா தேசாய் எனும் பெயரில் ட்வீட் வெளியான ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிய முடிந்தது.
வைரல் செய்யப்படும் இரு புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017 ஜூலை 7-ம் தேதி ஜம்முவின் தற்காப்பு பயிற்சி முகாமில், விஷ்வ ஹிந்து பரிஷத்தின்(விஎச்பி) காவி படை மகளிர் பிரிவின் துர்கா வாஹினியைச் சேர்ந்த இந்துப் பெண்கள் பங்கேற்கின்றனர் ” என புகைப்பட விற்பனை தளமான Getty images இணையதளத்தில் பயிற்சி பெறும் பெண்ணின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
2017-ல் ஜம்முவில் நடைபெற்ற பெண்கள் தற்காப்பு பயிற்சி முகாம் குறித்து ஏஎன்ஐ செய்தி முகாமை செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஹிஜாப் அணிந்த பெண்ணின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017 டிசம்பர் 1-ம் தேதி இந்தியன் முஸ்லீம் கேர்ள்ஸ் எனும் முகநூல் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது. இந்த பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதைத் தவிர்த்து, குஜராத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பரவும் ட்வீட் குறித்து முன்னணி செய்தி தளங்களிலும் எந்த செய்தியும் வெளியாகவில்லை.
முடிவு :
நம் தேடலில், குஜராத் மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் மகளிர் அணியில் பணியாற்றிய செளமியா தேசாய் என்ற பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பரப்பப்படும் தகவல் மற்றும் புகைப்படம் தவறானது.
முதல் புகைப்படத்தில் இருக்கும் பெண் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். அது 2017 விஎச்பி அமைப்பின் தற்காப்பு பயிற்சி முகாமில் எடுக்கப்பட்டது. இரண்டாம் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட புகைப்படமாக இருக்கிறது. அதேபோல், 2020ல் செளமியா தேசாய் பெயரில் ட்வீட்கள் வெளியான ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.