This article is from Nov 12, 2021

சிறுமிக்கு தன்னார்வலர் செய்த உதவியை ஆர்எஸ்எஸ் உதவி எனப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி

நேற்று வைரல் ஆன வீடியோவை பார்த்து விட்டு ஆர்எஸ்எஸ் சேவா பாரதி அமைப்பினர் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று வீட்டுக்கு வேண்டிய எல்லாப் பொருட்கள் மற்றும் சாப்பாட்டு பொட்டலங்களையும் கொண்டு போய் சேர்த்துள்ளது.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

வைரலான வீடியோவை பார்த்து சிறுமியின் குடும்பத்திற்கு ஆர்எஸ்எஸ் சேவா பாரதி அமைப்பினர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கியதாக சிறுமியின் செய்தி புகைப்படம் மற்றும் வீடு தேடி சென்று உதவி செய்பவரின் புகைப்படங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Facebook link 

உண்மை என்ன ?

நவம்பர் 11-ம் தேதி சத்தியம் செய்தியில், சென்னையின் கணேசன் தோட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறுமியை எடுத்த பேட்டியில் சாப்பிட ஏதுமில்லை என பேசிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையடுத்து, ஆர்எஸ்எஸ் சேவா பாரதியைச் சேர்ந்தவர் அந்த குழந்தைக்கு வீடு தேடி சென்று உதவியதாக பரப்பப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர் ஆனந்த் வாசு எனும் தன்னார்வலர். நவம்பர் 11-ம் தேதி அந்த குழந்தைக்கு தேவையான உதவியை வழங்கியதாக சில புகைப்படங்களையும், அந்த குழந்தை தொலைக்காட்சியில் பேசிய வீடியோவின் லிங்கையும் இணைத்து முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.

Facebook link  

சிறுமிக்கு உதவிய ஆனந்த் வாசுவிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், அவர் உதவி செய்த புகைப்படங்களை ஆர்எஸ்எஸ் சேவா பாரதி அமைப்பைச் சேர்ந்தவர் என மயிலை ரமா என்பவர் பதிவிட்ட படத்தை எடுத்து ஆனந்த் வாசு பக்கத்தை பலரும் டக் செய்து வருகின்றனர்.

தன்னுடைய புகைப்படங்களை வைத்து ஆர்எஸ்எஸ் என பரப்புவது குறித்து ஆனந்த் வாசு முகநூலில் விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். மேலும், இதற்கு முந்தைய பதிவு ஒன்றில், எந்த கட்சியின் ஆதரவு நிலைப்பாடு இல்லை என்பதை அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி, அமைப்புகள் மட்டுமின்றி தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். இப்படி தன்னார்வலர் ஒருவர் உதவி செய்த புகைப்படத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்ததாக பொய்யான தகவலை பகிர்ந்தது கண்டதையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், சென்னையில் உணவு இல்லை என பேசி சிறுமியின் வைரல் வீடியோவை பார்த்து ஆர்எஸ்எஸ் சேவா பாரதி அமைப்பினர் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று உதவியதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் தன்னார்வலர் ஆனந்த் வாசு என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader