This article is from Sep 10, 2018

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: ஆசியாவிலேயே இந்தியாவின் நிலை மோசம்.

பரவிய செய்தி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக சரிந்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே இந்திய ரூபாயின் மதிப்பே அதிகளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து ரூ.68.14 ஆக உயர்ந்துள்ளது.

விளக்கம்

சர்வதேச பொருளாதார சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு என்றும் சரிவை நோக்கியே இருந்து வந்துள்ளது. பல ஆண்டுகளாக அமெரிக்காவின் 1 டாலருக்கு இந்திய மதிப்பில் ரூ.60-ஐ தாண்டியே இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக சரிந்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சர்வதேச பொருளாதார காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு விரைவில் 70-ஐ தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

2017 ஜனவரி 24-ல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 68-ஐ தொட்டது. அதன் பிறகு 2018-ல் மீண்டும் ரூ.68-ஐ தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. ஜனவரி 2017-க்கு பிறகு ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிவை காணவில்லை என்றாலும் கடந்த ஓராண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6.22% வீழ்ச்சி அடைந்து 2018-ல் ஆசிய கண்டத்திலேயே மிகவும் மோசமான செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது.

கடந்த மே 16-ம் தேதியன்று கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து ரூ.68.14 ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் ” 56 ” பைசாக்கள் குறைந்து சரிவை கண்டது, அன்றைய நேர முடிவில் டாலர் மதிப்பு 68.07 ஆக இருந்தது. இது ஒரே நாளில் மிகப்பெரிய சரிவை கண்ட இரண்டாவது முறை ஆகும். 2017-க்கு பிறகு இந்திய ரூபாய் மதிப்பு உயர்வை கண்டதால் பல பாராட்டுக்களை பெற்றன. ஆனால், ஒரே ஆண்டில் 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆகையால், விரைவில் இந்திய ரூபாய் மதிப்பு 70-ஐ தாண்ட வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்கள் :

  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைக்கப்பட்ட நிலையில் தேவை அதிகமாகியுள்ளது. கச்சா எண்ணெய் மதிப்பு அமெரிக்க டாலர்களில் நிகழ்வதால், இறக்குமதி அதிகம் செய்யும் இந்தியாவிற்கே பாதிப்பு அதிகம்.
  • கடந்த சில மாதங்களில் நாட்டின் மொத்தம் மற்றும் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் எரிபொருள் விலை மற்றும் உணவு பொருள் விலை உயர்ந்ததே. இது ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
  • நாட்டின் வணிகப் பற்றாக்குறை கடந்த ஆண்டில் 13.25 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் தற்போது 13.72 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இவை நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இந்திய கடன் பத்திரத்தில் இருந்து ரூ.22,336 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். மேலும், உள்நாட்டு மூலதனமும் ரூபாய் வீழ்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக சில தருணங்களில் உயர்வு, சரிவில் மாற்றம் ஏற்பட்டாலும், தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் தேசம் செல்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader