ரஷ்யாவின் ஆற்றில் கலந்த 20,000 டன் எண்ணெய், மாசடைந்தது நன்னீர் ஏரி !

பரவிய செய்தி
20,000 டன் எண்ணெய் ஆற்றில் கலந்ததால் ரஷ்யா அவசரநிலையை பிறப்பித்துள்ளது. இதனை சுத்தம் செய்ய 10 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
ரஷ்யாவின் நோரில்ஸ்க் நகரத்துக்கு அருகில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் இருக்கும் எரிபொருள் தொட்டி சேதமடைந்த காரணத்தினால் 20,000 டன் டீசல் ஆர்டிக் பகுதியில் உள்ள ஆற்றில் கலந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 12 கி.மீ தொலைவிற்கு கலந்த எண்ணெய் சிவப்பு நிறத்தில் படிந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எண்ணெய் கசிவு சம்பவத்தால் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அவசரநிலையை பிறப்பித்து உள்ளார். ஆர்டிக் பகுதியில் உள்ள அம்பரன்யா ஆற்றில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கலந்த எண்ணெய் அங்குள்ள நன்னீர் ஏரி ஒன்றையும் மாசுபடுத்தி உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, அந்த எண்ணெய் கசிவின் பாதிப்பு ஆர்டிக் பெருங்கடலுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக ரஷ்ய அதிகாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எண்ணெய் கசிவு நிகழ்ந்த மின்னுற்பத்தி ஆலை நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது. ரஷ்ய விசாரணைக் குழு (எஸ்.கே), எண்ணெய் கசிவு நிகழ்ந்த சம்பவத்தை மாஸ்கோ அதிகாரிகளுக்கு தெரிவிக்க 2 நாட்கள் தாமதம் செய்தது, நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்பாக அந்நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த கசிவு 350 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மாசுபடுத்திய உள்ளதாக அம்மாநில செய்தி ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த அவசர நிலைக்குழுக்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது.
ரஷ்யாவின் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் ஓலெக் மிட்வோல், ” ஆர்டிக் மண்டலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடந்தது இல்லை. இதைத் தூய்மைப்படுத்த 100 பில்லியன் ரூபிள் (1.5 பில்லியன் டாலர்) செலவாகும் என்றும், 5 முதல் 10 ஆண்டுகள் வரை எடுக்கலாம் எனக் கூறியதாக பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது.
ஆர்டிக் பகுதியில் பரவிய எண்ணெய் கசிவால் நீர் ஆதாரங்கள் பாதிப்படைவதோடு, அங்கு வாழும் விலங்குகள், கரையில் இருக்கும் செடி, கொடிகள், நுண்ணயிர்கள் ஆகியவை மீதும் பெரும் தாக்கம் உண்டாகும் என சூழலியாளர்கள் கூறியுள்ளதாக வெளியாகி இருக்கிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.