ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்திய மோடி.. தொடங்கியது பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் !

பரவிய செய்தி

ரஷ்யா உக்ரைன் போரில் 32,000 இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்துள்ளனர். புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரிடம் பேசி பிரதமர் மோடி போரை நிறுத்தினார். உக்ரைனில் சிக்கிய மாணவர்கள் மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டனர்- ஜே.பி. நட்டா

Article Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த போரின் போது உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்க புதின் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரிடமும் பேசி பிரதமர் மோடி போரை நிறுத்தினார். பின்பு உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்கள் மீட்கப்பட்டு இந்திய கொண்டு வரப்பட்டனர் என பாஜக தலைவர் ஜே.பி நட்டா பேசியுள்ளார். இதனைப் பாஜகவின் தேசிய மற்றும் ராஜஸ்தான் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Article Link | Archive Link

இதற்கு முன்பாக, 2022 மார்ச் 5ம் தேதி உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க இரு நாட்டு தலைவர்களிடமும் பேசி போரை 6 மணி நேரம் நிறுத்தியதாகத் தமிழகப் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருந்தார்.

Twitter link 

உண்மை என்ன ?

இந்தியப் பிரதமர் மோடியால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் சுமார் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது எனப் பரவி வரும் செய்தி பொய்யான தகவல் என 2022 மார்ச் 5ம் தேதி அன்றே Youturn தரப்பில் Fact Check செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

படிக்க : ரஷ்யா-உக்ரைன் போரை 6 மணி நேரம் இந்தியா நிறுத்தியதாக வதந்தி!

இருப்பினும், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் என்பதால் பாஜக தலைவர் ஜே.பி நட்டா மீண்டும் இந்தப் பொய்யைப் பேசியுள்ளார்.

போர் நடந்த போது கார்கிவில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்திய மக்களும் தங்களது சொந்த பாதுகாப்புக்காகக் கார்கிவை விட்டு வெளியேறி பாபே மற்றும் பெஸ்லியுவ்டோவ்காவை அடையுமாறு 2022 மார்ச் 2ம் தேதி இந்திய தூதரகம் ஆலோசனை வழங்கி இருந்தது. ஆனால், பிரதமர் மோடி புதின் மற்றும் ஜெலன்ஸ்கியிடம் பேசி போரை நிறுத்தச் சொன்னதாக அதில் ஏதும் குறிப்பிடவில்லை.

Twitter link 

மேலும், கார்கிவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்யா 6 மணி நேரம் போரை நிறுத்தியுள்ளது என வெளியான செய்தியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளதாக என இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் சுஹாசினி மார்ச் 3ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Twitter link 

மார்ச் 3-ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில்(39:30 நிமிடம்), ” போர் நிறுத்தப்பட்டதா, நிறுத்தப்படலையா அல்லது யார் நிறுத்தினார் என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ” இதுதான் செல்லக்கூடிய வகையில் இருக்கும் பாதை எனக் குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தன. ஆகையால், இந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடங்கள் இவை என நாங்கள் மக்களுக்கு தெரிவித்தோம். யாரோ குண்டுவெடிப்பை (இடைநிறுத்துகிறார்கள்) நடத்துகிறார்கள் அல்லது இதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம் எனக் கூறுமளவிற்கு அதை விரிவுப்படுத்துவது என்பது முற்றிலும் தவறானது என்று நான் நினைக்கிறேன் ” எனப் பேசி இருக்கிறார்.

இந்திய மாணவர்களை மீட்கும் பணிக்காக ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துமாறு இந்திய தரப்பில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. எனினும், உக்ரைனுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீட்பு பணிக்காக, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாகப் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

முடிவு :

நம் தேடலில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியே வருவதற்காக இந்தியா 6 மணி நேரம் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தியதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. இந்த பொய்யை அடிப்படையாக வைத்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரிடம் பேசி பிரதமர் மோடி போரை நிறுத்தியதாக பேசி இருக்கிறார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader