மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உதவியாளர் மதுபான ஊழல் வழக்கில் கைது எனப் பரவும் பொய் தகவல் !

பரவிய செய்தி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் அபிஷேக் என்பவரை பல்லாயிரம் கோடி டெல்லி சாராய ஊழலில் சி.பி.ஐ கைது செய்துள்ளது. ஸ்டாலினுக்கு நிரந்தர தூக்கமின்மை வரும்போல் உள்ளது. இரண்டு தி.மு.க மந்திரிகளும் கைது செய்யப்பட உள்ளனர் என்று தகவல்.

மதிப்பீடு

விளக்கம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் அபிஷேக் என்பவரை மதுபான ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்ததாகப் பாஜக, அதிமுக மற்றும் வலதுசாரிகளால் சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், இரண்டு திமுக அமைச்சர்களும் கைது செய்யப்படப் போவதாகப் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

டெல்லியில் புதிய மதுபான கொள்கையின்படி(தற்போது திரும்பப் பெறப்பட்டது), மது விற்பனையை முழுமையாக தனியாருக்கு ஒப்படைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் டெண்டர் செய்யப்பட்ட உரிமக் கட்டணத்தில் மதுக்கடைகளுக்கு ரூ.144.36 கோடி தள்ளுப்படி செய்ய அனுமதித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

2022 ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி டெல்லி அரசில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு டெல்லியின் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா உட்பட 13 நபர்கள் மீது சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை(FIR) பதியப்பட்டது. இவ்வழக்கின் முதல் கைது செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்றது. இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

News Link

இந்நிலையில், ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் போய்ன்பல்லி(Abhishek Boinpally) எனும் தொழிலதிபருக்கு இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என 2022 அக்டோபர் 10ம் தேதி சிபிஐ தரப்பிலிருந்து 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இவரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறாவிட்டாலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்து அருண் ராமச்சந்திர பிள்ளை என்பவருடன் இவருக்குத் தொடர்பு இருந்தமையால் அபிஷேக்கை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

News Link

கைது செய்யப்பட்ட அபிஷேக், டிஆர்எஸ்(TRS) கட்சியின் நிறுவன உறுப்பினர் போய்ன்பல்லி ஹனுமந்த் ராவ்(Boinpally Hanumanth Rao) என்பவரின் மகன் ஆவார். இவர் தற்போது டி.ஆர்.எஸ்(தற்போது பி.ஆர்.எஸ் என மாற்றப்பட்டது) கட்சியில் இல்லை.

இதையடுத்து, பெனின்சுலா நிறுவனத்தை நாம் தொடர்பு கொண்டு பேசியதில், ” அபிஷேக் என்ற பெயரில் சபரீசன் அவர்களுக்கு உதவியாளர் யாரும் இல்லை ” என விளக்கம் அளித்து இருந்தனர்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அபிஷேக் என்பவர் தமிழக முதல்வர்  ஸ்டாலினுடைய மருமகன் சபரீசனின் உதவியாளர் என்பதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அதுதொடர்பாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர்.

முடிவு:

நம் தேடலில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் உதவியாளர் டெல்லி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பரவும் செய்தி பொய் எனத் தெரியவருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader