சபரிமலை ஐயப்பன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியதா ?

பரவிய செய்தி
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலை ஐயப்பன் கோவில் முழுவதுமாக மூழ்கிய படம் . கடவுளுக்கு மீறிய சட்டம் ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என கூறிய நீதிபதிகள் இதை பார்க்கவும்.
மதிப்பீடு
விளக்கம்
தென்மேற்கு பருவ மழையால் கேரளாவில் கனமழை பொழிந்து அணைகள் நிரம்பி மாநிலத்தில் வெள்ளம் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேரளா வெள்ளம் பற்றிய தேவையற்ற வதந்திகள் கூட சமூக வலைத்தளங்களில் அதிகமாக பதிவிடப்படுகிறது.
கனமழை பொழிந்து உருவான வெள்ளத்தால் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் முழுவதுமாக மூழ்கியுள்ளதாக ஓர் படத்தை பதிவிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர். இன்னும், சிலர் ஒருபடி மேல் சென்று ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்வதால் தான் மணிக்கண்டனின் கோபத்திற்கு ஆளாகி இந்நிலை உருவானதாக பதிவிட்டு வருகின்றனர்.
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் மேற்கூறியது போன்று ஒருவரின் பதிவை மீண்டும் ட்வீட் செய்து, சபரிமலையின் இந்நிலைக்கும் வழக்கிற்கும் சம்பந்தம் உள்ளதா என்று ட்விட்டரில் பதிவிட்டு வீண் வதந்தியை பரப்பியுள்ளார்.
” இணையத்தில் பரவும் படத்தில் இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் அல்ல. பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பாதையில் மலையின் அடிவாரத்தில் உள்ள பம்பை மணல்புரத்தில் உள்ள பி.சி ராமமூர்த்தி மண்டபம். பம்பையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியில் உள்ள பி.சி ராமமூர்த்தி மண்டபம் மூழ்கியுள்ளதை படத்தில் காணலாம் ”
கனமழையால் சபரிமலை கோவில் பாதிக்கப்பட்டு இருக்கும் என்றாலும் வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்றும், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் முயற்சியால் நடைபெற்றதாக கூறுபவர்கள் பகிரும் படம் கோவில் அல்ல, மண்டபம் அதுவும் பம்பை அடிவாரத்தில்..!
ஆன்மிக சிந்தனை வழியாக பார்த்தால் ஐயப்பன் வரலாறுபடி, அவரை வளர்த்த தாய் மணிகண்டனுக்கு எது நிகழ்ந்தாலும் பரவாயில்லை தன் உயிரை காப்பாற்ற புலி பால் தேவை புலி பால் தேவை என பொய் கூறினார். கடவுளாக நினைத்து வழிப்படும் மணிகண்டன் உண்மை அறிந்தும் அப்படிப்பட்ட தாய்க்காக கூட தன் உயிரை பணையம் வைத்து புலியின் மீதே ஏறி வந்ததாக வரலாறுகள் கூறுகின்றனர்.
” தன்னை வளர்த்த தாய்க்காக உயிரை பணையம் வைக்கவும் துணிந்த ஐயப்பன், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முயல்வதால் இவ்வாறு செய்தார் என்பது நிச்சயம் ஏற்க முடியாத ஒன்று. இப்படியான தரக்குறைவான எண்ணங்கள் இருக்க ஐயப்பன் மனிதர்களை போன்றவர் இல்லையே…! ”
இந்து மதத்தை பின்பற்றுவதாக சிலர் கூறிக் கொண்டு மீண்டும் மீண்டும் இந்து மதத்தையும், கடவுள்களையும் அவமானப்படுத்தும் செயலையே தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதே நிதர்சனம்..