This article is from Nov 26, 2021

சபரிமலை அரவணப் பிரசாதம் தயாரிப்பை இஸ்லாமிய நிறுவனத்திற்கு அளித்ததாக வதந்தி !

பரவிய செய்தி

அரேபியர் தயாரிப்பில் அரவண பிரசாதம் ? அரவானைப் பாயசத்தை தயாரித்து அளிக்கும் உரிமையை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அஜ்மான் & கோ நிறுவனத்தின் துணை நிறுவனமான அல் ஜஹாவுக்கு அளித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

மதிப்பீடு

விளக்கம்

கேரளா சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் அரவணப் பிரசாதத்தை தயாரித்து அளிக்கும் பணியை அரபு அமீரகத்தைச் சேர்ந்த அஜ்மான் & கோ நிறுவனத்தின் துணை நிறுவனமான அல் ஜஹாவுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அளித்துள்ளதாக அரபிக் மொழியில் விற்பனை செய்யப்படும் ” அரவணப் பாயசம் ” எனும் தயாரிப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் கண்டனத்துடன் வைரலாகி வருகிறது.

 

Archive link 

உண்மை என்ன ? 

சபரிமலை கோவிலில் அளிக்கப்படும் பாரம்பரிய பிரசாதங்களின் பட்டியல் கேரள அரசின் இணையதளத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில், அரவணப் பிரசாதம் விலை ரூ. 80 எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா போஸ்ட் உடைய இணையதளத்தில், ” சபரிமலை கோவிலின் பிரசாதங்கள் ” போஸ்ட் மூலம் அனுப்பப்படுவதாக புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது.

இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பப்படும் சபரிமலை பிரசாதத்தில், ” அரவணப் பிரசாதம் ” என ஐயப்பன் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், வைரல் செய்யப்படும் புகைப்படத்தில், ” அரவணப் பாயசம் ” என்று இருக்கிறது, ஐயப்பன் புகைப்படமும் இல்லை.

வைரல் செய்யப்படும் அல் ஜஹா நிறுவனம் ஆனது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அஜ்மானை அடிப்படையாகக் கொண்டு 2020-ல் நிறுவப்பட்டது. 2021 அக்டோபரில் துபாயில் அல் ஜஹா தயாரிப்பான அரவணப் பாயசத்தை சாப்பிடுவதாக கேரளாவைச் சேர்ந்த பெண் யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையர் பி.எஸ்.பிரகாஷ், ” இது தவறான தகவல். பிரசாதம் கோவில் தரப்பில் தயாரிக்கப்படுகிறது. எந்தவொரு நிறுவனமோ அல்லது அமைப்போ தயாரிப்பதில்லை ” என தி குயின்ட் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், சபரிமலை கோவிலில் அளிக்கப்படும் அரவணப் பிரசாதத்தை தயாரித்து வழங்கும் பணியை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அல் ஜஹாவுக்கு என்ற இஸ்லாமிய நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. இதை திருவிதாங்கூர் தேவசம் போர்டு மறுத்து உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் ஜஹா என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் அரவணப் பாயசம் உடைய புகைப்படம் இங்கு தவறாக பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader