This article is from Jun 27, 2021

மகாராஷ்டிராவின் மிதி நதி என பாஜகவினர் பகிரும் புகைப்படம் உண்மையா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையை சுமார் 1400 கோடி செலவில் குஜராத் அரசாங்கம் தூய்மைப்படுத்தியுள்ளதாகவும், அதே சமயத்தில் மும்பையில் உள்ள மிதி நதியை சுத்தப்படுத்த இதுவரை 1000 கோடிக்கு மேல் மகாராஷ்டிரா அரசால் செலவு செய்யப்பட்டும் மிக மோசமாக நிலையில் உள்ளதையும் ஒப்பீடு செய்யும் வகையில் இரு புகைப்படங்களையும் கோர்த்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் பிஜேபியின் மகளிர் அணியின் சமூக வலைதள நிர்வாகி பிரீத்தி காந்தி.

இந்த பதிவை பாஜகவின் மகளீர் அணியின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ,”ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்” என பதிவிட்டு அதனை ரீடுவீட் செய்துள்ளார்.

உண்மை என்ன ?

மகாராஷ்டிராவின் மிதி நதி எனக் குறிப்பிட்டு பதிவுசெய்யப்பட்ட அந்த புகைப்படத்தை கூகுளின் “ரிவர்ஸ் இமேஜ் சர்ச்” மூலம் தேடுகையில் பிரீத்தி காந்தி குறிப்பிட்டது போல மும்பை மிதி நதி சமந்தமான செய்திகள் வந்தன.

ஆனால் நம் தேடலில் இந்த புகைப்படம் அந்தோனியோ வி. ஓக்வியாஸ் எனப்படும் ஒருவரால் ஷட்டர்ஸ்டாக் , ட்ரீம்ஸ் டைம் போன்ற பிரபல இணைய புகைப்பட நூலகங்களில் (Image libraries) ராயல்டி ஃப்ரீ புகைப்படமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த புகைப்படத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் நீர் மாசுபாடு தொடர்பான செய்திகளில் இதனை பலர் பயன்படுத்தியுள்ளனர். பிரிட்டனில் உள்ள கார்டிப் பல்கலைக்கழக வலைத்தளத்திலும் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இப்புகைப்படத்தை பதிவேற்றம் செய்த அந்தோனியோ ஷட்டர் ஸ்டாக் இணையதளத்தில் ஜனவரி மாதம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா என குறிப்பிட்டு உள்ளார்.

இணையத்தில் மணிலா நதி மாசுபாடு என தேடினால் அந்த புகைப்படம் போன்று பல கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், மணிலா நகரில் இருக்கும் நதிகளின் கடும் மாசுபாடு குறித்தும் ஏராளமான செய்திகள் கிடைக்கின்றன.

முடிவு :

நம் தேடலில், அந்த புகைப்படம் இணையத்தில் பொதுவாக கிடைக்கும் ஒரு புகைப்படமே. வானதி சீனிவாசன் மற்றும் பிரீத்தி காந்தி கூறியது போல் மும்பை மிதி நதி அல்ல. அதனை பதிவேற்றம் செய்தவரே பிலிப்பைன்சில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இது தவறான செய்தியாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader