This article is from Jul 07, 2018

சச்சின் ரசிகர்கள் இதைப் படிக்க வேண்டாம் !

பரவிய செய்தி

சச்சின் டெண்டுல்கர் தன் ராஜ்ய சபா எம்.பியி பதவியில் 6 ஆண்டுகளில் கிடைத்த ஊதியமான ரூ.90 லட்சத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

மதிப்பீடு

சுருக்கம்

6 ஆண்டுகளாக தனது எம்.பி பதவியில் கிடைத்த ஊதியம், சலுகைத் தொகை என ரூ.90 லட்சத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு சமீபத்தில் வழங்கியுள்ளார். எனினும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதிகம் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் சச்சின் டெண்டுல்கர் மீது உள்ளது.

விளக்கம்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரின் சாதனையைக் கருத்தில் கொண்டு 2012 ஆம் ஆண்டின் ராஜ்ய சபையின் எம்.பியாக நியமிக்கப்பட்டார். மேலும், 2014-ல் இந்தியாவின் உயரிய விருதான “ பாரத ரத்னா ” விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

2012-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோர் ராஜ்ய சபையின் எம்.பியாக நியமிக்கப்பட்டனர். எம்.பி பதவிக்கு ஊதியமாக மாதம் ரூ.55,000 , தொகுதி சலுகை  ரூ.45,000 மற்றும் அலுவலகச் செலவிற்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு ராஜ்ய சபையின் எம்.பியாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் எம்.பி பதவியின் மூலம் 6 ஆண்டுகளில் கிடைத்த ஊதியம் மற்றும் மாதச் சலுகை தொகை ரூ.90 லட்சத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். ஏப்ரல் 2018-ல் 6 ஆண்டுகளில் பெற்ற ஊதியம் மற்றும் சலுகை தொகையை தேசிய நிவாரண நிதிக்கு அளித்ததை பெருமைப்படுத்தி பிரதமர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

எனினும்,  2012-ல் எம்.பியாகிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ரேகா ஆகியோர் மாநிலங்களவை கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை மற்றும் கேள்வி விவாதத்தில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை சமாஜ்வாதி கட்சியின் எம்.பி நரேஷ் அகர்வால் எழுப்பினார்.

கூட்டத்தொடருக்கு சரியாக வருகைத் தராதவர்கள் பட்டியிலில் சச்சின் 2-வது இடத்தில் இருந்துள்ளார். இதில், நடிகை ரேகா முதலிடம் வகிக்கிறார். நீண்ட கால இடைவெளிக்கு பிறகு 2017 டிசம்பரில் நடைபெற்ற கூட்டத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் பேசத் தொடங்கிய 10-வது நிமிடத்தில், ” பிஜேபி மற்றும் பிரதமர் மோடிக்கு ” எதிரான கோஷங்கள் காங்கிரஸ் கட்சியால் எழுப்பப்பட்டது. இதை கண்டித்து சச்சின் டெண்டுல்கருக்கு மதிப்பளித்து, பேச அனுமதிக்குமாறு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்ட நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் வருகைப்பதிவு 7.3% ஆக மட்டுமே உள்ளது. ஆவணங்களின் தகவல்படி, 400 மாநிலங்களவை அமர்வுகளில் 29-ல் மட்டுமே சச்சின் பங்கேற்றுள்ளார். மேலும், இதுநாள் வரை 22 கேள்விகள் மட்டும் எழுப்பியுள்ளார் மற்றும் எந்த மசோதாவையும் தாக்கல் செய்யவில்லை. மேலும், எம்.பிக்களின் தொகுதி  மேம்பாட்டிற்கு பயன்படுத்த வழங்கப்படும் 5 கோடியையும்( ஒரு ஆண்டுக்கு) முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

எனினும், சச்சின் டெண்டுல்கர் அலுவலகம் வழங்கிய தகவலில், “ 6 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 30 கோடியில் 7 கோடியை நாட்டின் மாணவர்களுக்கான கல்வி மற்றும் பள்ளிகளின் கட்டுமானச் சார்ந்த வளர்ச்சி பணிகள் தொடர்பான 185 திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக ” கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்காக 7 கோடி ரூபாயை கல்வி சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தியதை அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிகின்றன. எனினும், 2014  ஆம் ஆண்டு வரை எம்.பி நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை, வருகைப்பதிவு குறைவு என தொடர் சர்ச்சையாகி கிண்டல்கள் வெளிவரத் தொடங்கிய பிறகு நாட்டின் நலத் திட்டங்களுக்கு நிதியை செலவிடத் தொடங்கியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் சன்சாத் கிராம் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் புட்டம் ராஜு கந்த்ரிகா மற்றும் தோஞ்சா என்ற இரு கிராமங்களை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் உள்ள தோஞ்சா கிராமத்தில் புதிய பள்ளி கட்டுமானப் பணிகளுக்கு, சாலை அமைக்கும் பணிகள், பள்ளி மற்றும் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு MPLAD நிதியில் இருந்து 4 கோடியை ஒதுக்கியுள்ளார்.

மாஸ்டர் ப்ளாஸ்டர் என்று நம்மால் கொண்டாடப்படுபவர் சச்சின். பல விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரர். எத்தனையோ சாதனையை விளையாட்டுகளில் புரிந்து இருக்கிறார். அனைத்தும் மகிழ்ச்சியே. ஆனால், எம்.பி பதவியை வைத்து அவர் செய்தது என்ன. 120 கோடிக்கு மேல் மக்கள் இருக்கிற தேசத்தில் பாராளுமன்றம் செல்ல எத்தனை பேருக்கு வாய்ப்பு வருகிறது வெகு சிலருக்கு மட்டுமே. அப்படியான வாய்ப்பு கிடைக்கும் போது தேசம் கைகளை தட்டியும், உற்சாகமாய் குரல் எழுப்பியும், டிவி முன்னே அமர்ந்தும், ஏன் சச்சின்காக தற்கொலை செய்து கொண்ட கதைகளும் உண்டு. அப்படி அன்பை பொழிந்த தேசத்தின் மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த அரிய அற்புத வாய்ப்பை பயன்படுத்தி கேள்விகளின் மூலம் மக்களின் பிரச்சனையை பல முறை பேசி இருக்கலாம். பல முக்கிய பிரச்சனைகளில் குரல் கொடுத்திருக்க முடியும்.

தேசத்தின் செல்லப்பிள்ளை அந்தஸ்தில் இருந்தவர் அதை செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் இவர் குரல் அதிரவில்லை. குறைந்தபட்சம் வருகையும் செய்வதில்லை.  தேசத்தின் வறுமையும், தேசத்தின் மக்களின் கண்ணீரும் எத்தனை எத்தனை ! என்பதை உணர்ந்து இந்த நிதி செலவிடப்பட்டு இருக்குமேயானால் எத்தனையோ பேருக்கு உதவியாக இருந்திருக்கும்.

இவர் குரல் எழுப்பி இருந்தால் தேசிய அளவில் மக்களின் ஆதரவும்,  அரசியல் கட்சிகளுக்கு அச்சமும் ஏற்பட்டு இருக்கும். அத்தனையையும் வீணடித்து விட்டார். அட ! அவர் விளையாட்டு வீரர் அவரிடம் ஏன் இதையெல்லாம் கேட்குறீர்கள் என கேட்கும் அதிதீவிர சச்சின் ரசிகர்களே அதை அவருக்கு பதவி வழங்கும் போது அவர் வேண்டாம் என தவிர்த்து இருந்தால் அவர் விளையாட்டு வீரர் என்றே இருந்திருப்பார். இந்த கேள்வியும் எங்களுக்கு எழுந்திருக்காது. இப்போது சம்பளத்தை திருப்பி தந்து விட்டார் சந்தோசம்..

செய்யாத வேலைக்கு சம்பளம் எதற்கு என்று அவரது மனசாட்சி கேள்வி கேட்டிருக்கக்கூடும். இங்கு பல அரசியல்வாதிகள் சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் உறங்குவதற்கும், வேட்டியை கிழிப்பதற்கும், ஏன் ஆபாச  படம் பார்த்த கதையெல்லாம் கூட உண்டு. இப்படி கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில் குறைந்தபட்ச மனசாட்சியுடைய சச்சின் வாழ்க என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader