This article is from Feb 24, 2018

அர்ஜுன் டெண்டுல்கர்க்கு இடம்.. பிரணவ் தனவதேக்கு அணியில் ஏன் இடமில்லை ?

பரவிய செய்தி

327 பந்துகளில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவதே, 16 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. ஆனால், அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வாகியுள்ளார். காரணம் அவரின் தந்தை சச்சின் டெண்டுல்கர் என்பதனால்.

மதிப்பீடு

சுருக்கம்

பிரணவ் தனவதே-வின் 1009 ரன்கள் சாதனையானது 16 வயதுக்குட்பட்ட மும்பை அணி வீரர்களின் தேர்வுக்கு பிறகே நிகழ்த்தப்பட்டது. எனினும், பிரணவ் தனவதே-விற்கு 19 வயதுக்குட்பட்டவர்களின் கிரிக்கெட் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விளக்கம்

2016 ஆம் ஆண்டு மும்பையில் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்படும் எச்.டி.பண்டாரி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், 327 பந்துகளில் 59 சிக்சர்களும், 127 பௌண்டரிகளும் என மொத்தம் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார் 15 வயதே ஆன பிரணவ் தனவதே.

மும்பையில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் கடினமானவை என்று பலரும் அறிந்திருப்பர். இங்கு நடைபெறும் போட்டிகள் தான் பல திறமைமிக்க கிரிக்கெட் வீரர்களை உருவாகி வருகிறது. அத்தகைய போட்டியில் இமாலய சாதனையை நிகழ்த்தினார் பிரணவ்.

எனினும், 327 பந்துகளில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவதே 16 வயதுக்குட்பட்ட மும்பை மாநிலக் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. ஆனால், எத்தகைய சாதனையும் புரியாத அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் அணியில் இடம்பெற்றுள்ளது. அதற்கு காரணம் பிரணவ் ஆட்டோ ஓட்டுனரின் மகன், அர்ஜுன் “ God of Cricket “ என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்ற காரணத்தினால் தான் என்று கூறி வெளியாகிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரணவ் மற்றும் அர்ஜுன் தேர்வு குறித்த உண்மையாதெனில், மும்பை அணியின் தேர்வின் போது பிரணவ் தனவதே-க்கு 16 வயதாகியதால் தகுதி பெறவில்லை. மேலும், இந்த தேர்வானது மண்டலம் சார்ந்த கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடக் கூடியவர்கள். எதிர்பாராதவிதமாக, பிரணவ் தனவதேவின் உலக சாதனையானது 16 வயதுக்குட்பட்ட மும்பை அணி வீரர்களின் தேர்வு முடிந்த பிறகு சில போட்டிகள் கழித்து நிகழ்த்தப்பட்டது. 

அணியில் தேர்வு குறித்து பிரணவ் தனவதேவின் தந்தை விளக்கம் அளிக்கையில், பிரணவின் சாதனைக்கு முன்பே அணியின் தேர்வானது முடிந்து விட்டது. அதன் பின் பிரணவ் பல ஆட்டங்கள் ஆடியுள்ளார். அர்ஜுன் மற்றும் பிரணவ் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் இருவரும் எப்போதும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். பிரணவ் தற்போது 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவுக்கு முன்னேறி உள்ளார்.

எனினும், பிசிசிஐ விதிமுறைப்படி 16 வயதுக்குட்பட்ட மும்பை அணியில் சில ஆட்டங்கள் ஆடியப் பிறகே 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது என்று 2016-ல் ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் சிறுவர்கள் ஆவர், அவர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும். தவறான செய்திகளால் இருவரின் திறமையும் பாதிக்கப்படலாம். எனவே, அவர்களை தவறான எண்ணமின்றியும், மன அழுத்தமின்றியும் விளையாட விடுங்கள் என்று பிரணவின் பயிற்சியாளர் ஷேக் கூறியுள்ளார்.

ஆக, உண்மையான காரணங்கள் ஏதுமறியாமல் சச்சின் டெண்டுல்கரால் தான் பிரணவ் அணியில் தேர்வாகவில்லை என்று வதந்திகள் பரவியுள்ளன.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader