This article is from Sep 30, 2018

இஸ்லாமியர்களால் இந்து சன்னியாசி தாக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி

இந்து சன்னியாசி இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்ற காரணத்திற்காக இஸ்லாமிய இளைஞர்கள் விரட்டி விரட்டி அடித்துள்ளனர். சன்னியாசியை அடித்து விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

சன்னியாசி தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ மற்றும் புகைப்படத்தில் இருப்பவர் சன்னியாசி(சாது) அல்ல.. அடிப்பவர்கள் இஸ்லாமியர்களும் அல்ல..!!

விளக்கம்

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் வட இந்திய மக்கள், இஸ்லாமிய சமூக மக்களால் இந்து மத சன்னியாசி(நாக சாது) ஒருவர் தாக்கப்பட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்கள் ஆயிரக்கணக்கில் பதிவிடப்பட்டு வைரலாகியது.

இஸ்லாமிய சமூகம் வசிக்கும் பகுதிக்குள் இந்து மத சன்னியாசி நுழைந்த காரணத்தினாலேயே அவர் கடுமையாக தாக்கப்பட்டார் என தமிழ்நாடு வரை செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. இந்து-முஸ்லிம் மத கலவரம் உருவாகும் அளவிற்கு பரவி வரும் இச்சம்பவம் எங்கே எப்பொழுது நடந்தது என்பதை பற்றி அனைவரும் அறிய வேண்டியது அவசியம்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனின் படேல் நகரின் போலீஸ் அதிகாரிகள் சோசியல் மீடியாவில் தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருவதாக ட்விட்டரில் ஆகஸ்ட் 30-ம் தேதி தெரிவித்து உள்ளனர்.

டேராடூனின் போலீஸ் ட்விட்டரில் கூறியதாவது, “ சுசில் நாத் மீது முன்பிருந்தே சில வழக்குகள் இருந்துள்ளன. 24.08.18-ல் அவன் ஒரு வீட்டில் நுழைந்து பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதால், அப்பெண்ணின் சகோதரர் சுபாம் மற்றும் தெருவாசிகளால் தாக்கப்பட்டுள்ளான் “ என பதிவிட்டு உள்ளனர்.

” இந்து மத சன்னியாசி என கூறப்படும் நபர் சன்னியாசியே அல்ல, சன்னியாசி தோற்றத்தில் பிச்சை எடுப்பவர் “. அவருக்கு திருமணம் ஆகி 6 குழந்தைகள் உள்ளனர். ஒரு வீட்டிற்கு சென்றவர் அங்கிருந்த பெண்ணிடம் உணவு கேட்டதோடு டீ மற்றும் பிஸ்கட் கொண்டு வா என அடாவடித்தனம் செய்து அப்பெண்ணை மயக்கமடைய செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பெண்ணின் சகோதரர் மற்றும் தெருவாசிகள் அனைவரும் பிச்சைக்காரரை தாக்கியுள்ளனர். தாக்கியவர்களும் இந்து சமூகத்தினரே..!!

இது தொடர்பாக பிச்சைக்காரரின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியைக் கொண்டு இந்து-இஸ்லாமிய வன்முறை  உருவாக்க எண்ணியுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவத்தின் பின்னணி பற்றி ஏதுமறியாமல் இஸ்லாமிய மக்களால் சன்னியாசி தாக்கப்பட்டார் என தவறான தகவலை பகிர்ந்ததால் இந்து மக்கள் மத்தியில் மதம் சார்ந்த வேற்றுமை உருவாக வாய்ப்புள்ளது. ஆகையால், பதிவுகளை மேலோட்டமாக பார்க்காமல் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி உறுதி செய்தல் நலம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader