This article is from Jul 06, 2019

சாய்பாபா பாட்டு பாடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளை அடிப்பதாக வதந்தி !

பரவிய செய்தி

எச்சரிக்கை – அவசரம் அவசரம் !

யாராவது உங்கள் தெருவில் விட்டு வாசலில் சாய்பாபா அல்லது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படம் வைத்து சிறிய சைக்கிளில் பாட்டு பாடிக் கொண்டு ஆண், பெண் இருவர் வந்து திருநீறு கொடுத்தால் உடனடியாக விரட்டுங்கள் அல்லது போலீசில் பிடித்துக் கொடுங்கள்.

கடவுளைக் காண்பித்து திருநீறில் மயக்கபொருள் கலந்து கொடுத்து நம் வீட்டை கொள்ளையடித்து, மார்வாடிகளிடம் கொண்டு சேர்க்க பஜ்ரங் தல் எனும் வடநாட்டு தீவிரவாத அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.

வீட்டில் உள்ளவர்கள் அன்பர்கள், நண்பர்கள் அனைவர்க்கும் வந்தபடியே பகிர்ந்து கொள்ளுங்கள். சென்னை வேளச்சேரியில் கடந்த வாரம் 5 வீடுகளில் இந்த கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. இப்படிக்கு : தமிழ்நாடு காவல்துறை.

மதிப்பீடு

விளக்கம்

வட இந்திய மாநிலங்களில் இருந்து வருபவர்களில் சிலர் ஆன்மீகம் சார்ந்து சைக்கிள் ரிக்ஸா போன்ற வாகனங்களில் சாய் பாபா அல்லது பிற ஹிந்து கடவுள்களின் புகைப்படங்களை வைத்து கொண்டு பாடல்களை பாடச் செய்து வீட்டிற்கு சென்று திருநீறு வழங்கி தட்சணை பெறுவதை சில காலமாக தமிழகத்தில் அதிகம் காண முடியும்.

அப்படி வருபவர்கள் திருநீறில் மயக்க மருந்துகளை கொடுத்து வீட்டில் இருந்து கொள்ளை அடிப்பதாகவும், சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் 5 வீடுகளில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து இருப்பதை தமிழ்நாடு காவல்துறை எச்சரித்து உள்ளதாக ஃபார்வர்டு செய்தியானது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், 2019 மார்ச் 7-ம் தேதி சினிமாபேட்டை எனும் இணையதளத்தில் ” எச்சரிக்கை அவசரம்….சென்னை வேளச்சேரியில் கடந்த வாரம் 4 வீடுகளில் கும்பல் கொள்ளையடித்து உள்ளனர் ” என்ற தலைப்பில் இதே செய்தி வெளியாகி இருந்தது.

சாய் பாபா பெயரைக் கூறி வீடுகளில் கொள்ளை அடிப்பதாக பரவிய செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பொழுது, வேளச்சேரியில் திருநீறில் மயக்க மருந்து கொடுத்து வீடுகளில் கொள்ளை என முதன்மை ஊடகங்களில் அப்படியான எந்தவொரு செய்திகளும் வெளியாகி இருக்கவில்லை.

செய்தி குறித்து வலுவான ஆதாரத்திற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் திரு.அரவிந்தன் ஐ.பிஎஸ் அவர்களை youturn தொடர்பு கொண்டு பேசியதில், பரவிய செய்திகளில் உண்மை இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

அடுத்ததாக, கொள்ளையர்கள் பஜ்ரங் தல் எனும் வடநாட்டு தீவிரவாத அமைப்பினால் அனுப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். இன்றைய அரசியல் நிலையில், தமிழக காவல்துறை பஜ்ரங் தல் அமைப்பை தீவிரவாத அமைப்பு என நேரிடையாக கூறி இருந்தால், பிஜேபி கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் அதனை பெரிய பிரச்சனையாக கையில் எடுத்து இருப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல், அப்படியான அமைப்பால் கொள்ளை சம்பவம் நடந்து இருந்தால் மக்களுக்கான எச்சரிக்கையை ஊடகங்களில் நேரடியாக காவல்துறை தெரிவித்து இருந்திருப்பர். ஏற்கனவே, வட நாட்டில் இருந்து வந்தவர்கள் வீடுகளில் கொள்ளை அடிக்க நோட்டம் விடுவதாக செய்திகள் பரவி கிடக்கின்றன. மேலும், வடநாட்டு குழந்தை கடத்தல் கும்பல் என வதந்திகள் பரவியது போன்று, தற்பொழுது சாய் பாபா சைக்கிளில் வருபவர்களை கொள்ளையர்கள் என வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

தவறான செய்திகளை பகிர்வது தெருக்களில் செல்லும் வட இந்தியர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்து விடலாம். ஆகையால், உண்மையான செய்தியை மக்களுக்கு பகிரச் செய்யுங்கள்.

Please complete the required fields.




Back to top button
loader