சக்தி மசாலா 10 கோடி நிதி கொடுத்ததை ஊடகங்கள் வெளியிடவில்லையா ?

பரவிய செய்தி
மக்கள் கவனத்திற்கு, கொரோனா நிவாரணமாக தான் உழைத்து சம்பாதித்த ரூ.10 கோடியை சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி கொடுத்ததை பெரிதும் பேசாத ஊடகங்கள், அகரம் பவுண்டேஷன் மூலம் கொடுத்த 25 லட்சம் கொடுத்த சினிமாக்காரர்களை விளம்பரப்படுத்துவது ஏன் ?
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா பாதிப்பிற்காக நிவாரண நிதியாக 10 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி குறித்து பேசாத ஊடகங்கள், அகரம் பவுண்டேஷன் மூலம் 25 லட்சத்தை கொடுத்ததை விளம்பரப்படுத்துவதாக ஓர் தகவல் வலதுசாரி ஆதரவாளர்களால் தீவிரமாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. சக்தி மசாலா நிவாரண நிதி அளித்ததை ஊடகங்கள் பேசவில்லை எனக் கூறுவது தவறான தகவல். அதையும், ஜோதிகா, அகரம் பவுண்டேஷன் அளித்த உதவியை கேள்விக்குள்ளாக்குவது பின்னால் அரசியல் காரணங்களே இருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பாக படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்ற போது அங்குள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்றும், கோவில்களுக்கு செய்வது போல் அரசு மருத்துவமனைக்கும், அரசு பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும் என விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஜோதிகா பேசி இருந்தார். ஜோதிகாவின் இப்பேச்சு ஒரு சிலரால் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகியது.
இந்நிலையில், தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அகரம் அறக்கட்டளை மூலம் ரூ.25 லட்சம் நிதியுதவியை ஜோதிகா வழங்கி இருந்தார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகைப் பணமாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.
ஜோதிகா மற்றும் அகரம் அறக்கட்டளை செய்த உதவி தன்னை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி என ஒரு தரப்பினர் ஆதரவும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போல், அதற்கு எதிரான பதிவுகளை வலதுசாரிகள் பதிவிடத் துவங்கி உள்ளனர். சக்தி மசாலா 10 கோடி கொடுத்ததை பேசாத ஊடகம், ஜோதிகா கொடுத்த 25 லட்சத்தை மட்டும் விளம்பரப்படுத்துவதாக ஓர் ஒப்பீட்டை முன் வைக்கின்றனர்.
சக்தி மசாலா கொரோன நிவாரண நிதி அளித்ததை ஊடகங்கள், செய்திகளில் பேசவில்லை எனக் கூறுவதே தவறானது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல நிறுவனங்கள், அமைப்புகள் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தனர். சக்தி மசாலா உரிமையாளர் துரைசாமி அவர்கள் மார்ச் 30 மற்றும் மே 11 என இரண்டு கட்டங்களாக 10.10 கோடியை நிவாரண நிதியாக அளித்து உள்ளார் என தமிழ் செய்திகள் முதல் ஆங்கில செய்தி இணையதளங்கள் வரை பலவற்றில் வெளியாகி இருக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பல நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை அளித்தனர். அவர்கள் நிதி அளித்தது செய்திகளில் வெளியாகியும் உள்ளது. அதற்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் வெளியாகின.
Defeat #COVID19Pandemic. Join the fight.
Stronger together! Thank you #sakthimasala for your contribution and efforts towards our fight against covid-19.#covidsupport #TamilNadu #TNFightsCorona pic.twitter.com/tcX2OjyeEX— Guidance Tamil Nadu (@Guidance_TN) April 3, 2020
மேலும் படிக்க : அகரம் அறக்கட்டளையின் வரவு செலவு 2 லட்சம் கோடியா ?| கிண்டலுக்கு உள்ளாகும் வதந்தி !
நடிகை ஜோதிகா அளித்த உதவி மட்டும் பெரிதாய் பேசப்படுவதாக கூறுவது ஏற்புடையது அல்ல. எந்த மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை எனக் கூறியதற்காக விமர்சிக்கப்பட்டரோ அந்த மருத்துவமனைக்கு நிதியுதவி அளித்ததால் பாராட்டுக்கு உள்ளாகினார். அதேபோல், சக்தி மசாலா நிறுவனம் செய்த உதவியை ஊடகங்கள் பேசவில்லை எனக் கூறுவது தவறான தகவல்.