This article is from Aug 29, 2019

சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக வாட்ஸ் அப் வதந்தி !

பரவிய செய்தி

சேலம் அருகே குழந்தைகளை கடத்த வந்த வெளிமாநில கும்பலை பிடித்துள்ளனர். பிடிபட்டவர் கூறுகையில், ஒருவரை பிடித்து விடலாம் மீதமுள்ள 399 பேரை உங்களால் பிடிக்க முடியுமா என கடத்தல்காரர்கள் சவால் விட்டுள்ளனர் – வாட்ஸ் அப் ஆடியோ

மதிப்பீடு

விளக்கம்

குழந்தைகளை கடத்திச் செல்ல வெளிமாநிலத்தில் இருந்து கும்பல் வந்து இருப்பதாக வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்திகளை கேட்காமல் இருக்க முடியாது. சமீபத்தில் சில புகைப்படங்கள் உடன் குழந்தை கடத்தல் கும்பல் வந்து உள்ளதாக பரவும் ஆடியோ ஒன்றை காண நேரிட்டது.

உண்மை என்ன ?

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தை கடத்தல் கும்பல் 400 பேர் இறங்கி உள்ளார்களா என செய்திகளில் முதலில் தேடிப் பார்த்தோம். ஆனால், பரவும் செய்திகள் போன்று செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப் ஃபார்வர்டு ஆடியோ உடன் 4 புகைப்படங்களில் காரில் சன்னியாசி வேடத்தில் ஒருவர் அமர்ந்து இருப்பது, மற்றொன்றில் அதே நபர் நடந்து செல்வது, காரின் டிக்கி பகுதியில் குழந்தைகள் இருப்பது, காரை சுற்றி மக்கள் சூழ்ந்து இருப்பது ஆகிய காட்சிகள் உள்ளன.

ஆனால், அதில் காண்பிக்கப்பட்ட கார்களின் வடிவம் வெவ்வேறாக இருப்பதை மேலோட்டமாக பார்த்தாலே அறிந்து கொள்ள முடிகிறது. சரி, இறுதியாக புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்க்கையில் பெங்களூர் நகர போலீஸின் ட்விட்டர் பக்கத்தில் கோலார் பகுதிகளில் குழந்தை கடத்தல் கும்பல் என இதே புகைப்படங்களை ஒருவர் பகிர்ந்து கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அதற்கு ஒருவர் தவறான தகவல் என பதிவிட்டு இருந்தார்.

காரின் பின்புறத்தில் குழந்தைகள் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வைத்து தேடிய பொழுது ஆகஸ்ட் 14-ம் தேதி bhaskar.com என்ற இணையதளத்தில் வெளியிட்ட செய்தியை காண நேரிட்டது. அதில், ஹரித்துவார் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த கும்பத்தினரின் காரை சந்தேகமடைந்து பிடித்து பார்த்ததில், காரின் பின்புறத்தில் குழந்தைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், போலீஸ் விசாரணையில் அவர்கள் மீது என்ற குற்றமும் இல்லை, காரில் இடமில்லை என குழந்தைகளை டிக்கியில் அமர வைத்து இருந்தாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

முடிவு :

இப்படி தவறான புகைப்படங்களை இணைத்துக் கொண்டு எதோ ஒரு பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் இறங்கி உள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகின்றனர். இது இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இது போன்ற குழந்தை கடத்தல் வதந்திகளை முடிந்தவரை பகிராமல் இருந்தல் நல்லது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader