சேலத்தில் குழந்தைகளை கடத்த வந்த நபர் சிக்கியதாக பரவும் பழைய தவறான வீடியோ !

பரவிய செய்தி
சேலத்தில் திடீரென நேற்று பகலில் 400 பேர் வெளிநாட்டில் இருந்து இறங்கி இருக்கிறார்கள். அதுவும் மெய்னா 7 வயசு, 8 வயசு பொண்ணுகளை தான் அதிகமாக கடத்துறாங்க. சின்ன சின்ன பசங்களையும் கடத்துறாங்க. குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கோங்க. அதில் ஒருத்தன் பெண் வேஷத்தில் குழந்தையை தூக்கிட்டு போகும் போது ஊர்க்காரங்க பிடிச்சுட்டாங்க. சேலத்தில் நேற்று நடந்தது. அவனை பிடிச்சு அடிச்சப்போ நாங்க 400 பேர் இறங்கியிருக்கோம்னு தைரியமான பத்திரிகைகாரங்ககிட்ட சொல்றான்.
மதிப்பீடு
விளக்கம்
சேலத்தில் குழந்தைகளை கடத்த வெளிநாட்டில் இருந்து 400 பேர் வந்துள்ளதாகவும், குழந்தையை கடத்த முயன்ற போது ஒருவனை பிடித்து உள்ளதாகவும் எச்சரிக்கை செய்யும் ஆடியோ உடன் கூடிய 1.15 நிமிட வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சேலத்தில் பேருந்து நிலையத்தில் வைத்து சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் குறித்து தேடிப் பார்க்கையில், வைரலாகும் வீடியோ உடன் தொடர்புடைய செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
ஆகையால், பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் தர்மஅடி என சில கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிப் பார்த்தபோது, 2019 பிப்ரவரி 21-ம் தேதி ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் ” தஞ்சாவூரில் சிறுமியை கடத்த முயன்ற ஒருவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம்-வீடியோ ” என வைரல் செய்யப்படும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
” தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல காத்திருந்த போது 7ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் போதையில் ஒருவர் என் கூட வா, வீட்டுக்குப் போகலாம் என அழைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளான். அப்போது மாணவி காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டார். பெண்கள் உள்பட பொதுமக்கள் பலரும் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஒரத்தநாடு அருகே உள்ள நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரிய வந்தது. ஆனால், அந்த வாலிபரை காவல்துறை கைது செய்யவில்லை ” என 2019 பிப்ரவரி 20-ம் தேதி விகடனில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக வாட்ஸ் அப் வதந்தி !
இதேபோல், 2019ல் சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாக பிற மாநில புகைப்படங்களை இணைத்து வதந்தி பரப்பியது குறித்தும் நாம் பதிவிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், சேலத்தில் குழந்தைகளை கடத்த 400 பேர் வந்துள்ளதாகவும், பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்தும் போது ஒருவர் சிக்கியதாக பரவும் வாட்ஸ் அப் வீடியோ வதந்தியே. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரில் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து வதந்தி பரப்புகிறார்கள் என அறிய முடிகிறது.