சேலம் விவசாயியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனரா ?

பரவிய செய்தி
சேலம் 8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி ஒருவரை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார். இதை தயவு செய்து அனைவருடைய குருப்க்கும் அனுப்பவும். அனுப்பியவருக்கு கோடி நன்றிகள்.
மதிப்பீடு
சுருக்கம்
காட்டு யானைத் தாக்கி உயிரிழந்தவரை போலீசார் சுட்டு கொன்றாக வதந்தியைப் பரப்பி உள்ளனர்.
விளக்கம்
சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழிச் சாலைக்கு விவசாயிகள், பொதுமக்கள் என பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகையில் வீண் வதந்தி ஒன்று பரவி உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல்வேறு வதந்திகள் எவ்வாறு பரவியதோ அதே போன்று சேலம் பிரச்சனையிலும் வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன.
8 வழிச் சாலை அமைந்தால் விவசாய நிலங்கள் அழியும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கையில், திட்டத்திற்கு எதிராக பேசிய விவசாயி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாக வீடியோ உடன் ஓர் செய்தி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆஃப்களில் பரவி வருகிறது.
தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தென்னந்தோப்பில் 55 வயதுடைய சேகர் என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
” 2018 ஜூன் 11-ம் தேதி இரவில் தோப்பில் காவல் பணியின் போது மோட்டார் அறைக்கு அருகில் படுத்து இருந்த போது திடீரென அருகே வந்த காட்டு யானை சேகரை கடுமையாக தாக்கி உள்ளது. தப்பிக்க முயற்சி செய்தும் பயனின்றி யானை தாக்கியும், மிதித்தும் கொன்றுள்ளது “.
இதன்பின்னர் காலையில் அங்கே வந்த தொழிலாளர்கள் சேகர் இறந்து கிடப்பதை கண்டு போலீஸ் மற்றும் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். காட்டு யானை தாக்குதல் நடத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இருந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று நேரில் வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் மக்கள் அதிகாரிகளிடம் பேசுவதை உன்னிப்பாக பார்த்தாலே புரியும், விவசாயிகள் யானையால் தாக்கி இறப்பதை பற்றி பேசி இருப்பர்.
சமீபத்தில் தேனியில் நடந்த நிகழ்வை சேலம் பிரச்சனையோடு இணைத்துள்ளனர். இதை 8 வழிச் சாலைக்கு எதிராக போராடியதால் விவசாயியை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று வீண் வதந்தியைப் பரப்பியுள்ளனர்