This article is from Sep 30, 2018

சேலம் 8 வழிச் சாலைக்கு உயர்நீதிமன்றம் தடையா ?

பரவிய செய்தி

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச் சாலைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானங்கள், வழக்குகளால் அந்த திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

8 வழிச் சாலை திட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. அடுத்த ஆணை வரும் வரை நிலம் கையகப்படுத்தி நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விளக்கம்

சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலை திட்டம் ரூ.10,000 கோடியில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், சாலை அமையும் பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்கள், வீடுகள், தோப்புகள், வனப்பகுதிகள் பாதிக்கப்படுவதால் மக்கள் திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

பசுமை வழிச் சாலை திட்டத்திற்காக குடிமக்களின் நிலங்கள் கையகப்படுத்துவதை போலீஸ் உதவியுடன் அரசு செய்து வந்துள்ளது. நிலங்களை இழக்கும் பலரும் திட்டத்திற்காக நிலங்களை வழங்க முடியாது என்றுக் கூறினாலும் அரசு தரப்பில் நிலம் கையகப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றே வந்தது.

salem road

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பசுமை வழிச் சாலை திட்டம் தொடர்பாக இடைக்கால தடை ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால தடை பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிரானது என்று சமூக வலைத்தளங்களில் நம்பப்படுகிறது. ஆகையால், இந்த தடை பற்றிய முழு விவரத்தை அறிய வேண்டியது அவசியம்.

பசுமை வழிச் சாலை திட்டத்திற்காக நில உரிமையாளர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தி அவர்களை வெளியேற்றி வருவதால் மக்களிடையே அதிகளவில் அச்சம் சூழ்ந்துள்ளது. அந்த அச்சத்தை கருத்தில் கொண்டு அதனை தணிக்க இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். நில உரிமையாளர்கள், விவசாயிகள் என பலரது சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசிற்கும், National highway authority of india-விற்கும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் உள்ள முக்கிய அம்சம், “ அடுத்த ஆணை வரும் வரை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது ” என்று தெரிவித்துள்ளனர்.

பசுமை வழிச் சாலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறுகையில், ”  முதலில் திட்டத்திற்கு தடை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிலங்களை கையகப்படுத்துவதற்கும், திட்டத்திற்காக உடனடியாக நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது  என்றே உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவும் இடைக்கால தடை மட்டுமே ” என  தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால தடை திட்டத்திற்கு எதிரானதோ ? அல்லது திட்டத்தை தடை செய்யவோ பிறப்பிக்கப்பட்டது அல்ல. இன்னும் சிலர் கிராமசபை தீர்மானத்தால் இந்த தடை கிடைத்துள்ளதாகவும் தவறாக நினைத்து கருத்து பதிவிடுகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader