சேலம் மாவட்டத்தில் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் !

பரவிய செய்தி
நாமக்கல் அருகே சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் கிடைப்பதாக கடந்த சில ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மண் சந்திராயன்-2 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் ரோவர் வாகனத்தை பரிசோதிக்கப் பயன்படுகிறது. இதற்கு 60-70 டன் நிலவு மண் தேவைப்படுகிறது.
மதிப்பீடு
விளக்கம்
ஜூலை 15-ம் தேதி விண்ணில் ஏவ இருந்த சந்திராயன்-2 விண்கலம் தொழில்நுட்ப காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிலவிற்கு சந்திராயன்-2 விண்கலம் அனுப்பும் தேதி பிறகு அறிவிக்கப்படும் என இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலத்தில் உள்ள ரோவர் பயன்பாட்டிற்கு தேவையான நிலவு மண் தமிழகத்தில் உள்ள சித்தம்பூண்டி கிராமத்தில் கிடைத்து இருப்பதாக செய்திகளில், சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
சன் நியூஸ் தமிழின் முகநூல் பதிவில் தமிழகத்தில் கிடைத்த நிலவு மண் குறித்த பிரத்யேக செய்தியை பதிவிட்டு இருக்கின்றனர். ஆனால், 2014-ல் மே 11-ம் தேதி சேலம் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் குறித்த செய்தியை ஹிந்து ஆங்கில பிரிவு செய்தியில் வெளியிட்டு உள்ளனர். சந்திராயன்-2 திட்டமானது 2009-ல் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக தொடர்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சந்திராயன்-2 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் 27 கிலோ எடைக் கொண்ட ரோவர் வாகனம், நிலவின் மேற்பரப்பை அடைந்த பிறகு முன்னோக்கி, பின்னோக்கி உள்ளிட்ட நகர்வில் எப்படி இயங்கும் என்பதை அறிந்து கொள்ள நிலவில் இருக்கும் மண்ணை போன்ற ஒற்றுமைக் கொண்ட மண் சோதனைக்கு தேவைப்படும்.
இதற்கு தேவையான மண்ணை அமெரிக்காவில் இருந்து விலை கொடுத்து இறக்குமதி செய்யலாம் என்றால், அதன் விலை ஒரு கிலோ 150 டாலர்கள். சோதனைக்கு 60 முதல் 70 டன் நிலவு மண் தேவைப்படுகிறது. சிறிய அளவிலான மண் என்றால் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் தேவை அதிகம் என்பதால் சுய தீர்வை இஸ்ரோ எடுக்க வேண்டி இருந்தது.
சேலத்தில் இருந்து 65 கி.மீ தொலைவில் சேலம்-திருச்செங்கோடு நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சித்தம்பூண்டி மற்றும் குன்னாமலை எனும் கிராமப் பகுதிகளில் நிலவு மண்ணுடன் ஒத்த மண் இருப்பது பல ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்டது. அங்கு கிடைக்கும் Anorthosite பாறை, நிலவில் உள்ள மண்ணுடன் ஒத்து இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.
25 கோடி மதிப்பிலான திட்டத்தில், National Institute of Technology in Trichy, Periyar University in salem மற்றும் Indian Institute of science(bengaluru) ஆகிய பல்கலைக்கழத்தின் வல்லுநர்கள் இணைந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்றி உள்ளனர். இஸ்ரோ தலைமையிலான குழு மூலம் Anorthosite பாறை மற்றும் மண்ணை தேவையான மைக்ரோ அளவிற்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் கூறுகையில், நாங்கள் நிலவு மண் குறித்த ஆய்வுகளை நடத்தினோம். நான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி, பம்பாயில் பணியாற்றிய பொழுது 2004-ம் ஆண்டில் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவில் உள்ள மண்ணுடன் ஒத்த மண்ணினை நாங்கள் கண்டறிந்தோம். இந்த திட்டத்தில் இஸ்ரோவின் மண் சார்ந்த விஞ்ஞானிகள் எங்களுடன் இணைந்து செயலாற்றினார்கள் ” என தெரிவித்து இருக்கிறார்.