சமத்துவபுரத்தில் 70% வீடுகள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படுவதாக ரங்கராஜ் சொன்ன தவறான தகவல் !

பரவிய செய்தி
சமத்துவபுரத்தில் 100 வீடுகளில் 70% பட்டியலின மக்களுக்கும், 30% மற்ற சமூகத்திற்கும் வழங்கப்படுகிறது. – ரங்கராஜ்
மதிப்பீடு
விளக்கம்
பத்திரிக்கையாளர் ரங்கராஜ் அவர்கள் ‘Galatta Voice’ எனும் யூடியூப் சேனலிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில், “சமத்துவபுரம் கணக்கு என்ன? எல்லா ஜாதிக்கும் ஒரு வீடா? கிடையாது. பெரும் பகுதி பட்டியலினம். மிச்சம் மீதி மத்த இனம்.
அந்த கோட்டாவே எப்படி என்றால், 100 வீடு இருக்கிறது எனில் 70 வீடு எஸ்.சி.க்கு. மீதம் இருப்பது மற்ற சமூகத்திற்கு. அவர்களோடு இணைய வேண்டும் என்பதுதான் தத்துவமே. அதுதான் சமத்துவமே” எனப் பேசியுள்ளார்.
உண்மை என்ன ?
கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது 1997ம் ஆண்டு சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி தமிழ்நாட்டில் 50 இடங்களில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து குடியிருக்கும் வகையில் சமத்துவபுரங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடந்த உயர்மட்ட செயல்பாட்டுக் குழுவில் முடிவும் எடுக்கப்பட்டது.
இத்திட்டம் தொடர்பாக 1997, அக்டோபர் 22ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 100 வீடுகளில் ஆதி திராவிடர்களுக்கு 40 வீடுகளும், பிற்பட்டோருக்கு 25 வீடுகளும், மிகவும் பிற்பட்டோருக்கு 25 வீடுகளும், மற்றவர்களுக்கு 10 வீடுகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சமத்துவபுரம் அமைப்பது தொடர்பாக 2010, மே மாதம் 19ம் தேதி வெளியான அரசாணையிலும், மேற்கண்ட இதே ஒதுக்கீடு முறையே வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் வீடுகளின் வரிசை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, அனைத்து வகுப்புக் குடும்பங்களும் அக்கம்பக்கம் கலந்த முறையில் உள்ளவாறு பட்டாவைப் பயனாளிகளுக்கு முதலிலேயே வழங்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் சமத்துவபுரம் குறித்து 2010ல் ‘தினமணி’யில் வெளியான செய்தியிலும் ஆதிதிராவிடர்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கப்படுவதாகவே உள்ளது.
மேலும், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் விருதுநகர் மாவட்டத்தில் சமத்துவபுரத்திற்காக கொடுக்கப்பட்ட தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் புதிய பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பினை அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சமயம் இணையதளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது.
அதில், “தகுதியற்ற பயனாளிகளுக்குப் பதிலாக புதிய பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனங்களின் அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து தரப்பினரும் அதில் உள்ளனர்.
இவற்றிலிருந்து ரங்கராஜ் அவர்கள் சொன்னது ஒரு தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது. இதற்கு முன்னர் அவர் சொன்ன பொய்யான தகவல்கள் பற்றிய உண்மைத் தன்மை குறித்து யூடர்னில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக சிறையில் இருப்பது தமிழ்நாட்டில்தான் எனப் பொய் பரப்பும் ரங்கராஜ் !
மேலும் படிக்க : பிராமணர்கள் வன்முறை, சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டது இல்லையா ?
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள சமத்துவபுரத்தில் 70 சதவீத வீடுகள் பட்டியலின மக்களுக்கு அளிக்கப்படுவதாக ரங்கராஜ் சொன்ன தகவல் உண்மை அல்ல. ஆதிதிராவிடர்களுக்கு 40 சதவீத வீடுகளே சமத்துவபுர திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.