மல்யுத்த வீராங்கனை ‘சங்கீதா போகத்’ 0-10 என்ற கணக்கில் தோல்வி எனப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் ஒரு மல்யுத்த போட்டியில் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். ஆனால் ஒலிம்பிக்கில் நேரடியாக நுழைய வேண்டுமாம். மோடிஜி தயவு செய்து இதற்கு ஏதாவது பண்ணுங்கள்..
மதிப்பீடு
விளக்கம்
இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் (Wrestling Federation of India) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த மே 28 அன்று ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான சங்கீதா போகத் ஹங்கேரி நாட்டில் நடந்த போட்டியில் 0-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதில் அவர் நேரடியாக ஒலிம்பிக்கில் வேறு பங்கேற்க வேண்டுமாம். இதனால் தான் தலீத் மற்றும் OBC வீராங்கனைகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று கூறி அவர் மைதானத்தில் தோல்வியடைந்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Sangeeta Phogat lost a wrestling match 0-10.
No wonder these wrestlers wanted direct entry to the Olympics…..! pic.twitter.com/NM18lAGMoX
— 🦋Anjna🦋🇮🇳 (@SaffronQueen_) July 15, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அவர் ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற மல்யுத்த போட்டியின் முதல் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் பேஜ் ரோஜர்ஸிடம் தோல்வியடைந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து, ஹிந்துஸ்தான் ஹப் இணையதளத்தில், “சங்கீதா போகத்தின் உள்ளே இருக்கும் நெருப்பு குறையவில்லை, பதக்கம் வென்று பெண்களுக்கு சிறப்பு செய்தி கொடுத்திருக்கிறார்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில் “ஹங்கேரியில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த ரேங்கிங் தொடர் நிகழ்வின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஒலிம்பிக் அல்லாத 59 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற சங்கீதா போகத் தன்னுடைய திறமை மற்றும் உறுதியின் மூலம் வெற்றி பெற்றார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஜூலை 16 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில், “சங்கீதா ஒரு மோசமான தோல்வியுடன் தொடங்கினார், ஆனால் தனது இரண்டாவது போட்டியில் வெற்றியுடன் மீண்டார். அவர் தனது அரையிறுதியில் தோற்றாலும், U-20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் ஹங்கேரிய விக்டோரியா போர்சோஸுக்கு எதிராக 6-2 என்ற கணக்கில் போராடி வெண்கல பதக்கத்தை வென்றார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சங்கீதா போகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில், கடந்த ஜூலை 15 அன்று இந்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது குறித்து நன்றி தெரிவித்து தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
आप सभी के बधाई के संदेश मुझ तक पहुँच रहे हैं इस पल पर बहुत भावुक हूँ।
आप सभी का बहुत बहुत शुक्रिया। यह मेडल सिर्फ़ मेरा नहीं है। सब आप सभी का मेडल है
मैं इस मेडल को दुनिया की उन सभी संघर्षशील महिलाओं को समर्पित करती हूँ जो महिलाओं के विरुद्ध हुए अपराधों के ख़िलाफ़ संघर्षरत हैं।… pic.twitter.com/FyJnqhaHVZ
— Sangeeta Phogat (@sangeeta_phogat) July 15, 2023
ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற ரேங்க் சீரிஸ் மல்யுத்தப் போட்டியில் சங்கீதா போகத் விளையாடிய காட்சிகளின் முழு வீடியோ தொகுப்பை United World Wrestling (UWW) இணையதளத்திலும் காணலாம். இதில் 59 கிலோ பெண்களுக்கான மல்யுத்த பிரிவில் அவர் வெண்கலப்பதக்கம் வென்றதற்கான முடிவுகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: மல்யுத்த வீரர்கள் கைதுக்கு பின் சிரித்து செல்ஃபி எடுத்ததாக பாஜகவினர் பரப்பிய எடிட் படம்.. வீடியோவில் என்ன பேசினார் ?
இதற்கு முன்பும் மல்யுத்த வீராங்கனைகள் குறித்து ஊடகங்களில் தவறாக செய்திகள் பரப்பப்பட்டன. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: மல்யுத்த வீராங்கனைகள் பற்றி குஷ்பு பேசியதாகப் பரவும் தினமலரின் போலி நியூஸ் கார்டு.. அதையே பகிர்ந்து விமர்சித்த குஷ்பு !
முடிவு:
நம் தேடலில், ஹங்கேரி நாட்டில் நடந்த மல்யுத்த போட்டியில் சங்கீதா போகத் தோல்வி அடைந்துவிட்டு, ஒலிம்பிக்கில் நேரடியாக நுழைய ஆசைப்படுகிறார் எனக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை. அவர் தோல்வி அடைந்தது போல சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம், முதல் போட்டியில் மட்டுமே, அந்த தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.