பெண்கள் சானிடரி நாப்கின் பயன்படுத்தினால் மலட்டுத்தன்மை ஏற்படும் எனப் பரப்பப்படும் தவறான தகவல் !

பரவிய செய்தி
“சானிடரி நாப்கினில் நான்கு layer இருக்கின்றன. முதல் layer Plastic-ஆல் ஆனது. இரண்டாவது layer Perfume வாசம் கொண்டுள்ள ஒரு கலர் பேப்பர் layer. மூன்றாவது layer-ல் தான் இரத்தத்தை உறிஞ்சக்கூடிய ஒரு ஜெல் உள்ளது, இது ஒரு வகை Petroleum Silicon Gel. இதனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வரும், மேலும் ஒரு பெண்ணும் இல்லாத ஒரு ஆணும் இல்லாத இரண்டு இனத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு இனமா மாறிவிடுவார்கள். கடைசி layer leakage ஆகாமல் இருக்க Plastic-ஆல் செய்யப்பட்டுள்ளது. இதை கிழிக்க முடியாது. இவ்வாறு வண்டிக்கும், Body க்கும் பயன்படுத்தும் பொருட்களை இதில் பயன்படுத்தி இருக்கிறார்கள்” – பரவும் வீடியோ
மதிப்பீடு
விளக்கம்
2021 உலக மக்கள்தொகை ஆய்வின்படி, இந்தியாவில் தற்போது 600 மில்லியன் மக்கள் 18-35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இந்த வயது பெண்களில் பெரும்பாலானோர் மாதவிடாய் சுகாதார மேலாண்மை (Menstrual hygiene management) குறித்த புரிதல்கள் இல்லாமலே உள்ளனர். இதனாலேயே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாக மாதவிடாய் பிரச்சனை தீர்வு காண முடியாததாக உள்ளது.
மேலும் இந்தியாவில் பல பின்தங்கிய கிராமங்களில் நாப்கின் பயன்பாடு மிகவும் குறைந்து காணப்படுவதோடு, அதற்கு மாற்றாக தூய்மையற்ற துணிகளையும், பழைய துணிகளையும், சில இடங்களில் மணலையும் பயன்படுத்தி வருவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். இவ்வாறு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பின்தங்கிய கிராமப்புறங்களில் இன்று வரை பருவ வயது பெண்கள் பள்ளி மட்டும் கல்லூரியை விட்டு வெளியேறி வருவதை காண முடிகிறது.
இந்நிலையில் தற்போது சானிடரி நாப்கின்கள் பயன்படுத்துவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வரும். மேலும், இதில் பயன்படுத்தும் ஜெல்லினால், பெண்ணும் இல்லாத ஆணும் இல்லாத இரண்டு இனத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு இனமா பெண்கள் மாறிவிடுவார்கள் என்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அதில் சானிடரி நாப்கின்களை பயன்படுத்த வேண்டாம் என்பது போன்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொன்னேரி அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் அனுரத்னாவிடம் யூடர்ன் தரப்பில் கேட்டபோது, “சானிடரி நாப்கினுக்கும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் பாலினம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும் எந்த நாப்கின் எடுத்தாலும் அதில் SAP GEL போன்ற preservatives மற்றும் Chemical Coating பயன்படுத்துகிறார்கள். இதனால் Skin Allergy போன்ற Contact Allergy மட்டுமே பெண்களுக்கு இதுவரை ஏற்பட்டிருக்கிறது. அலர்ஜி வந்தாலும் அது மாதக்கணக்கில் நீடிப்பதில்லை. மாதவிடாய் சுழற்சி முடிந்தவுடம் சரியாகி விடுகிறது.
இதேபோன்று இதற்கு முன்பும் சில பேர் நாப்கின் பயன்படுத்துவதால் புற்றுநோய் வருகிறது என்று பரப்பினார்கள். அதற்கு இதுவரை மருத்துவத் துறையில் எந்த ஆதாரங்களும் இல்லை. எந்த இடத்திலும் இது தொடர்பான வழக்கும் பதிவாகவில்லை. இதே போன்று தற்போது சானிடரி நாப்கினால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் பாலின சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது என்று பரப்பியுள்ளனர். இது போலி செய்தி.
ஆய்வு செய்து பார்த்ததில் Female infertily-யை விட Male infertility தான் தற்போது அதிகமாக வருகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் உணவுப் பழக்க வழக்கங்களும், தட்ப வெப்பநிலை மாற்றமும், மன அழுத்தமும் தான்.” என்று அவர் விளக்கமளித்தார். மேலும் பெண்கள் சானிடரி நாப்கின்கள் பயன்படுத்தும் முறை தொடர்ப்பான கேள்விக்கு “பெண்கள் தங்களது மாதவிடாயின் போது நாள் ஒன்றுக்கு 3 நாப்கின்கள் உபயோகிக்குமாறு நான் இதுவரை பரிந்துரைத்து வருகின்றேன். பள்ளிக் குழைந்தைகளாக இருந்தாலும் காலை பள்ளி செல்லும் போது ஒன்றும், பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும் ஒன்றும், தூங்குவதற்கு முன்பு ஒன்றும் பயன்படுத்துமாறு நான் பரிந்துரைப்பேன். எனவே 6 முதல் 8 எட்டுமணிநேரம் வரை ஒரு நாப்கினை உபயோகிக்கலாம். அதற்கு முன்பாகவே ஈரமாகி விட்டால் அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் பாக்டீரியா தொற்று போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும்.” என்று தெரிவித்தார்.
சானிடரி நாப்கின்கள் தவிர Menstrual cups, Tampons போன்றவற்றை பெண்கள் பயன்படுத்தலாமா? என்ற கேள்விக்கு, “தாராளமாக பயன்படுத்தலாம். அதனால் எந்த விளைவுகளும் ஏற்படுவதில்லை. மேலும் நாப்கின்களை மாற்ற முடியாத சூழல் சில இடங்களில் ஏற்படும் போது Menstrual cups மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் நான் இவற்றை திருமணமாகாத பெண்களுக்கு பரிந்துரைப்பதில்லை.” என்று விளக்கமளித்தார்.
மேலும் இது தொடர்பான பாதிப்புகள் குறித்து, மருத்துவர் பிரவீன் அவர்களிடம் கேட்டபோது, “எந்தவித நாப்கின்களாலும் பெண்களின் ஹார்மோன் நிலையை மாற்ற முடியாது. மேலும் இது அவர்களின் உடலுறவிலும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பொதுவாக கருப்பை மற்றும் பிட்யூட்டரி சுரப்பி போன்ற நாளமில்லா சுரப்பிகளில் இருந்தே ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன, மேலும் இந்த நாப்கின்களுக்கும் ஹார்மோன் சுழற்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று விளக்கமளித்தார்.
மரபியல் துறை ஆராய்ச்சியாளர் முனைவர் தேவி அவர்களிடம் கேட்ட போது “மாதவிடாயின் போது ஏற்படும் Blood Flow-வை சிறந்த முறையில் Absorb செய்தால் மட்டுமே பெண்களால் Convenient ஆக எந்த வேலைகளையும் செய்ய முடியும். இதற்கு SAP ஜெல் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். SAP Gel இல்லாத துணி நாப்கின்களை பயன்படுத்தும் போது உறிஞ்சும் திறனே நாப்கின்களுக்கு இருக்காது. இதனால் ஆடைகளில் கறை படிய அதிக வாய்ப்புள்ளது. எனவே SAP Gel பயன்படுத்திய நாப்கின்களே பெண்களுக்கு போதிய பாதுகாப்பைக் கொடுக்கும்.“ என்று தெரிவித்தார்.
சானிடரி நாப்கின்களில் Superabsorbent Polymer Gel பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள்:
சானிட்டரி நாப்கின்கள் மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளவும், உடலில் இருந்து இவற்றை தனிமைப்படுத்தி ஆடைகளில் கசிவு ஏற்படுவதை தடுக்கவும் பயன்படுகின்றன. இதற்காக சானிட்டரி நாப்கினானது 48% பஞ்சு போன்ற கூழ் , 36% PE (Polymerization of ethylene), PP ( polypropylene) மற்றும் PET (Polyethylene terephthalate) வகை பொருட்கள், 7% பசைகள், 6% SAP (Superabsorbent polymer Gel) மற்றும் 3% ரிலீஸ் லைனர் பேப்பர் (Release Paper) ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது என்பதை Science Direct தளத்தில் வெளியிட்டுள்ள ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. இதில் சேர்க்கப்படும் SAP GEL குறித்து தற்போது பார்க்கலாம்.
பொதுவாக SAPகள் எனப்படும் சூப்பர்அப்சார்பண்ட் பாலிமர்கள், சோடியம் பாலிஅக்ரிலேட் (Sodium Polyacrylate) அடிப்படையிலான பாலிமர்கள் ஆகும், அவை திரவங்களுடன் தொடர்பு கொள்ளும்போது அதிக உறிஞ்சுதல் மற்றும் ஜெல்லிங் பண்புகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. இந்த SAP GEL-கள் மிகப்பெரிய அளவில் திரவங்களை தாங்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இதன் மூலம் அதன் எடையின் ஒரு மடங்கிற்கு ஆயிரம் மடங்கு வரையிலான திரவங்களை உறிஞ்சும் திறன் கொண்டவையாக உள்ளன என்பதை Sciencedirect மற்றும் CHEMPOINT போன்ற தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.
இத்தகைய பண்புகளின் காரணமாகவே இவை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயாப்பர்கள், உறிஞ்சக்கூடிய பேண்டேஜ் (Bandages), மருந்து விநியோகம் செய்யும் வாகனங்கள் மற்றும் சூடாக மற்றும் குளிர்ச்சியாக கொண்டுசெல்லும் பொருட்கள் (hot and cool packs) போன்ற மருத்துவம் சார்ந்த பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் தற்போது இந்திய பெண்களில் 40 % பேர் மட்டுமே நாப்கின்களை சுதந்திரமாக பயன்படுத்தும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் நிலையில், நாப்கின்கள் உபயோகிப்பதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்பது போன்று வதந்திகளைப் பரப்புவது, பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவே பார்க்க முடிகிறது.
இதன் மூலம் மிக நீண்ட காலமாகவே, இந்திய சமூகம் மாதவிடாயை ஒரு தடையாக கருதுவதை அறிய முடிகிறது.
முடிவு:
ஆதாரம்
An Overview on Sanitary Napkins – Research Paper by Anuradha Barman, SD Asagekar and Pooja Katkar
A sanitary pad DOESN’T disclose ingredients: Know what goes inside it!
Is India’s rapidly growing youth population?
What are Superabsorbent Polymers?
6 – Superabsorbent polymers and their medical applications