தூய்மைப் பணியாளரிடம் தீண்டாமை எனப் பரவும் 2020ல் கர்நாடகாவில் எடுத்த விழிப்புணர்வு வீடியோ !

பரவிய செய்தி
இது பெரியார் மண் அதனாலா ? நாம தண்ணியை மண்ணில தான் வைப்போம்.Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
குடிக்க தண்ணீர் கேட்ட பெண் தூய்மைப் பணியாளர் பெண்ணை தள்ளிப் போக சொல்லி வீட்டில் இருந்து வெளியே வரும் பெண் சாலையில் தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு செல்லும் 40 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தமிழ்நாட்டில் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டு விமர்சித்து பதிவுகள் வெளியாகி வருகிறது.
திராவிடம் டா திராவிட நாடு டா.. https://t.co/PzRP3Dh7qi
— விஜய் தமிழன் (@AK179010) August 16, 2023
இது 2020 கொரோனா டைம்ல கர்நாடகல நடந்த சம்பவம்… கொரோனா பயம்னாலும் இதெல்லாம் ரொம்ப தவறு… https://t.co/JL1UZL8bWB
— பாக்டீரியா (@Bacteria_Offl) August 16, 2023
மேலும், வீடியோவில் வருபவர்கள் மாஸ்க் அணிந்து இருப்பதால், இது கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது, கர்நாடகாவில் எடுக்கப்பட்டது எனப் பதிவுகளில் கமெண்ட்கள் வெளியான பிறகு, இதைப் பதிவிட்ட பாக்டீரியா ட்விட்டர் பக்கத்தில், ‘இது 2020 கொரோனா டைம்ல கர்நாடகல நடந்த சம்பவம். கொரோனா பயம்னாலும் இதெல்லாம் ரொம்ப தவறு’ என்றும் பதிவிடப்பட்டு உள்ளது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ கர்நாடாகாவில் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடுகையில், 2020 ஜூன் 24ம் தேதி Asianet Newsable எனும் யூடியூப் சேனலில் ” House owner ‘refuses’ to give drinking water to pourakarmikas; viral video brings awareness ” என்ற தலைப்பில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் வீடியோவின் நிலைத்தகவலில், ‘ பெங்களூர் மாநகர(BBMP) தூய்மைப் பணியாளர்கள் நகரை சுத்தமாக வைத்திருப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை, சிலர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளையும் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.
வைரலான வீடியோவில் இரண்டு தூய்மைப் பணியாளர் பெண்கள் நிற்க, தலைகனம் கொண்ட வீட்டு உரிமையாளர் வேடத்தில் ஒருவர் தனது வீட்டிற்குள் வைத்து குடிநீர் வழங்க மறுக்கிறார். இதையடுத்து, அவர் வெளியே வந்து சாலையில் தண்ணீர் பாட்டிலை வைத்து எடுத்துக் கொள்ள சொல்கிறார்.
இந்த வீடியோ வைரலானதும் அதிகாரிகள் கூட இதை உண்மை என்று நம்பியதால் கோபமடைந்தனர். இதற்கு அடுத்த நாள் வெளியான வீடியோவில், இது ஒரு விழிப்புணர்வு வீடியோ மட்டுமே என்றும், அந்த வீடியோவில் உள்ளவர்கள் அனைவருமே பெங்களூர் சிங்கசந்திரா வார்டைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் என வெளியாகியது.
இதுகுறித்து, BBMPன் திடக்கழிவு மேலாண்மை சிறப்பு ஆணையர் சர்ஃபராஸ் கான், இப்பணியை பாராட்டியுள்ளார். மேலும், இந்த வீடியோ மூலம் தூய்மைப் பணியாளர்களிடம் தவறாக நடந்துக் கொள்ளும் சிலரிடம் சில மாற்றங்களை கொண்டு வரும் எனக் கூறியுள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் வீடியோவில் தண்ணீர் கேட்டவரும், வீட்டின் உரிமையாளராக நடித்தவரின் தூய்மைப் பணியாளர்களே. இவர்கள் இருவரும் பேசும் வீடியோ மற்றும் இந்த விழிப்புணர்வு வீடியோவை BBMPன் திடக்கழிவு மேலாண்மை சிறப்பு ஆணையர் ஆடியோ உள்ளிட்டவை மேற்காணும் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் பிராமணர்களைத் தூய்மை பணியாளர்களாகச் சித்தரிப்பு எனப் பரவும் பழைய வீடியோ !
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளரிடம் வீட்டின் உரிமையாளர் தீண்டாமை கடைப்பிடித்ததாகப் பரவும் வீடியோ உண்மையானது அல்ல. அந்த வீடியோ 2020ம் ஆண்டு கர்நாடகாவில் கொரோனா சமயத்தின் போது தூய்மைப் பணியாளர்களால் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு வீடியோ என்பதை அறிய முடிகிறது.