This article is from Mar 01, 2021

சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடி, ஆனால் தமிழ் தெரியவில்லை என வருந்தும் பிரதமர் !

பரவிய செய்தி

சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு! 2017-18ம் ஆண்டில் ரூ.198.31 கோடி. 2018-19ம் ஆண்டில் ரூ.214.38 கோடி. 2019-20ம் ஆண்டில் ரூ.231.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேவேளையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல்தமிழ் (சி.ஐ.சி.டி) மூலம் வழங்கப்படும் தமிழுக்கான மையத்தின் செலவு  கணிசமாகக் குறைந்துள்ளது.
இவர்கள் இன்றைக்கு கண்ணீர் வடிக்கும் தமிழின் மேம்பாட்டிற்கு 2017-18ம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19ம் ஆண்டில் ரூ.4.65 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.7.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது!.

மதிப்பீடு

விளக்கம்

சமீப காலங்களாக, பட்ஜெட் தொடங்கி அரசு விழாக்கள் என பாஜக தேசியத் தலைவர்கள் தமிழ் மொழி மீது காட்டும் ஆர்வம், தமிழ் பேச தெரியவில்லை என்பதற்கு மன்னிப்பு கேட்பதும், தமிழ் மொழி தொன்மையான என புகழாரம் சூட்டுவதையும் அதிகம் காண முடிகிறது. தற்போதைய தமிழக தேர்தல் சமயத்தில் அது அதிகரிக்கவும் செய்துள்ளது.

இதற்கிடையில், 2017-20 ஆகிய 3 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு சமஸ்கிருத மொழியை பிரபலப்படுத்த ஒதுக்கிய நிதியையும், தமிழ் மொழிக்கு அளித்த நிதியை ஒப்பிட்டு பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. இது குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அளித்த தகவலில், ” மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்(HRD) ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தானத்தை நிறுவியதாகவும், அதற்காக கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடி நிதியை ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது. சன்ஸ்தானுக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ231.13 கோடியும், 2018-19-ல் ரூ214.28 கோடியும், 2017-18ல் ரூ198.31 கோடியும் ஒதுக்கப்பட்டன ” எனக் கூறப்பட்டது.

அதேநேரத்தில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிளாசிக்கல் தமிழ்(சிஐசிடி) மூலம் தமிழுக்கான மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைந்து உள்ளது. 2017-18ம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19ல் ரூ4.56 கோடியும், 2019-20ல் ரூ7.7 கோடியும் ஒதுக்கப்பட்டன.

அடுத்ததாக, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கு 2017-18ல் ரூ.1 கோடியும், 2018-19ல் ரூ.99 லட்சமும், 2019-20ல் ரூ.1.07 கோடியும் என ஒரே மாதிரியாக ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒடியா மற்றும் மலையாளம் ஆகியவற்றிற்கு வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை. அதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக 2020-ல் கூறப்பட்டது.

சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்கு மட்டும் 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடியை செலவிட்டு உள்ளது மத்திய அரசு. இது மற்ற 5 செம்மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிக்கு செலவிட்ட மொத்த தொகையான ரூ.29 கோடியை விட 22 மடங்கு அதிகம் என மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி அறிய முடிந்தது.

இந்தியாவில் பெரிதும் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு அதிக அளவில் மத்திய அரசு செலவு செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்களின் எண்ணிக்கை 24,821 பேர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்சா ஆகிய பாஜக தலைவர்கள் தமிழ் மொழியின் தொன்மை குறித்து பேசி வருகையில் சமூக வலைதளங்களில் 2017-20ல் சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு ஒதுக்கிய 643 கோடியைக் குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader