வதந்தி பரப்பும் மதுவந்தி.. சமஸ்கிருதத்தில் ஓம் சொல்லி ராணி எலிசபெத் உடலுக்கு மரியாதை எனப் பரவும் பழைய வீடியோ

பரவிய செய்தி

“ஓம் ” உடன் ராணி எலிசபெத் உடலுக்கு பிரியாவிடை இதுவே பண்டையகால சமஸ்கிருத மொழியின் அழகு.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

செப்டம்பர் 8-ம் தேதி உயிரிழந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பிரியாவிடை அளிக்கும் போது ” ஓம் ” எனும் சமஸ்கிருத்தில் மந்திரத்தை ஓதியதாக குழந்தைகள் சமஸ்கிருத ஸ்லோகங்களை படிக்கும் 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவைச் சேர்ந்த மதுவந்தியும் இவ்வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ? 

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோ ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் எடுக்கப்பட்டது இல்லை. ஏனெனில், ராணி எலிசபெத்தின் உடலுக்கு இன்னும் இறுதி சடங்கு நிகழ்ச்சியே நடக்கவில்லை. பிபிசி செய்தியின்படி, ” இறுதி சடங்கானது வரும் செப்டம்பர் 19ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற உள்ளதாக ” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வைரல் செய்யப்படும் வீடியோவில் உள்ள www.wildfilmsindia.com எனும் இணையதள முகவரியை வைத்து தேடிய போது, 3 ஆண்டுகளுக்கு முன்பாக 2019 மே 25ம் தேதி wildfilmsindia எனும் யூடியூப் சேனலில் ” British students perform Sanskrit shlokas at the Queen’s Baton Relay 2010 ” என்ற தலைப்பில் முழுமையான வீடியோ பதிவாகி இருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக 2009 அக்டோபர் 29ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன் நடைபெற்ற குயின்ஸ் பேட்டன் பேரணி 2010 நிகழ்ச்சியின் போது செயின்ட் ஜேம்ஸ் பள்ளி பாடகர் குழுவின் குழந்தைகள் சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் கூறிய போது எடுக்கப்பட்ட வீடியோவே இது.

மேலும் படிக்க : இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு உணவை தூக்கி வீசியதாகப் பரவும் தவறான வீடியோ

மேலும் படிக்க : எலிசபெத் ராணி, சீமான் வைத்துப் பரப்பப்படும் நையாண்டி அறிவிப்பை பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி

இதற்கு முன்பாக, ராணி எலிசபெத் இறப்பிற்கு பிறகு தவறான வீடியோ மற்றும் எடிட் செய்யப்பட்ட அறிவிப்பு உள்ளிட்டவையும் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டன.

முடிவு : 

நம் தேடலில், ராணி எலிசபெத் உடலின் இறுதிச் சடங்கின் போது சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதி அடக்கம் செய்ததாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த 2009ம் ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மணைக்கு முன்பாக குயின்ஸ் பேட்டன் பேரணி 2010 நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது. பழைய வீடியோவை எடுத்து ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் சமஸ்கிருதம் ஒலித்ததாக வதந்தி பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader