சரவணா ஸ்டோரில் பிள்ளையார் கோவிலை எடுக்கவே அநியாய விலை நாடகமா ?| ஆதாரம் இருக்கா ?

பரவிய செய்தி
குரோம்பேட்டை சரவணாஸ்டோர் வாசலில் இருக்கின்ற பிள்ளையார் சிலையை அகற்ற சொன்னவர்களுக்கு சரவணா ஸ்டோர் ஓனர் அளித்த பதிலடி .
மதிப்பீடு
விளக்கம்
சென்னையில் பிரபல சரவணா ஸ்டோரின் கிளையான குரோம்பேட்டை-பல்லாவரம் பகுதியில் அமைந்து இருக்கும் கடையில் பிள்ளையார் கோவில் இருப்பது பிடிக்கவில்லை என்றும், அதனை அகற்றக்கோரி சரவணா ஸ்டோர் தரப்பிற்கு மிரட்டல்கள் வந்ததாகவும், அதற்கு சரவணா ஸ்டோர் உரிமையாளர் அளித்த நெத்தியடி பதில் என ஓர் செய்தி முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதன் உண்மைத்தன்மை குறித்து தெளிப்படுத்த கூறி யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது. இவ்வாறு பரவும் செய்தியை tnnews24 வெளியிட்டதாக சில பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதையடுத்து, ஆராய்ந்த பொழுது அக்டோபர் 23-ம் தேதி tnnews24 இணையதளத்தில் இடம்பெற்ற செய்தியை காண முடிந்தது.
அதில் , ” வழக்கமான பகுதியை காட்டிலும் பல்லாவரம் பகுதியில் எங்கள் மதத்தினர் அதிகம் வசித்து வருகிறோம். அப்படி இருக்கையில் , பலரும் உங்கள் கடையை தேடி வந்து துணிகள் முதல் அனைத்து பொருள்களையும் வாங்குகிறோம். ஆனால் , உங்கள் குரோம்பேட்டை கடையின் வாசலில் பிள்ளையார் கோயில் அமைத்து இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை, அதை எடுத்து விடுங்கள் இல்லையென்றால் கடைக்கு யாரையும் விடமாட்டோம் என்று முதலில் பணிவுடனும் , பின்பு எச்சரிக்கையாகவும் தெரிவித்தனர்
இதற்கு நெத்தியடி பதில் தந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர் . நாங்கள் இவ்வளவு உயரம் வந்ததற்கு காரணமே எங்கள் கடவுள் பக்தி தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிள்ளையார் கோயிலை அகற்றித்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால்
அப்படிப்பட்ட வியாபாரமே எங்களுக்கு தேவையில்லை என்று நெத்தியடி பதில் தந்துள்ளார் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
இதை மையமாக வைத்தே மீம்ஸ் மற்றும் முகநூலில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், இந்த தகவலை இவர்களுக்கு தெரிவித்தது ஊழியரா அல்லது நிறுவனத்தின் உரிமையாளரா எனக் குறிப்பிடவில்லை. மேலும், ஊடக செய்தியோ அல்லது பிற ஆதாரங்களோ இணைக்கவில்லை. ஒரு கதை வடிவில் இடம்பெற்று இருக்கிறது.
அநியாய விலை வைத்ததாக குற்றச்சாட்டு :
அக்டோபர் 9-ம் தேதி வெளியான செய்தியில் சென்னையில் பாடி பகுதியில் அமைந்து இருக்கும் சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர் பிஸ்கெட் பாக்கெட்டின் விலை 95 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால், அந்த பிஸ்கெட் பாக்கெடில் இருந்த விலை 80 ரூபாய் என சரவணா ஸ்டோர் பெயர் பொறித்த ஸ்டிக்கரில் ஒட்டி இருக்கிறது.
இதையடுத்து, வாடிக்கையாளர் கேள்விகளை கேட்க அங்கு வாக்குவாதம் உருவாகி கடை தரப்பினருக்கும் , வாடிக்கையாளர்கள் பலரும் ஒன்றுக்கூடி கேள்வி எழுப்பியது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
இந்த பிரச்சனைக்கு பின்னர் வாடிக்கையாளர் உமர் பாருக் எழுத்து வடிவில் எழுதிக் கொடுத்த புகாரை செய்தி வீடியோவில் காண்பித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் , புகார் கூறிய வாடிக்கையாளர் பெயர் உமர் பாருக் என்பதாலும் , அவருக்கு துணையாக இருப்பேன் எனக் கூறிய அவரின் நண்பர் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த ஷேக் முகமது அலி என்பதாலும் மதம் சார்ந்த பிரச்சனையாக மாற்றியுள்ளனர்.
இத்தனை ஆண்டுகளாக குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் பிள்ளையார் கோவில் இருப்பது இன்று ஏன் பிரச்சனை ஆக வேண்டும் . ஒரு பிஸ்கெட் பாக்கெட் விலை விவகாரம் ஊடகத்தில் பெரிதாக பேசும் பொழுது, நகரத்தின் முக்கியமான பகுதியில் இருக்கும் பிரபல கடைக்கு யாரெனும் மிரட்டல் விட்டால் வெளி வராமல் இருக்குமா அல்லது அவர்களே கருத்து தெரிவிக்காமல் தான் இருப்பார்களா என்ன.
சரவணா ஸ்டோர் பெயரில் பல கிளைகள் உள்ளன. அந்த கடைகளில், தள்ளுபடி எனும் பெயரில் அதே விலைக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும், கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அவற்றில் சில சம்பவங்கள் மட்டுமே வெளியே வருகின்றன.
2017-ல் மதுரையில் புதிதாக திறந்த சரவணா செல்வரத்தினம் MRP விலையை விட அதிக விலைக்கு விற்று வாடிக்கையாளரை ஏமாற்றியதாக அந்த நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் 73 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. வேறு கிளையாக இருந்தாலும், கூடுதல் விலை வைத்து விற்கும் செயலுக்கு உதாரணமாக இந்த செய்தியை காண்பித்து உள்ளோம்.
முடிவு :
நம்முடைய தேடலில் , குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் கடையில் வாசலில் இருக்கும் பிள்ளையார் கோவிலை நீக்க சொல்லி குறிப்பிட்ட மதத்தினர் எச்சரிக்கை விடுத்ததாகவும், அதற்காக அநியாய விலை வைத்து விற்பனை செய்வதாக பிரச்சனைகள் நிகழ்வதாக வெளியான tnnews24 செய்திக்கு அடிப்படை ஆதாரமே இல்லை.
சில இணையதளங்கள் அடிப்படை ஆதரமில்லாத கருத்தை ஒரு சம்பவத்துடன் இணைத்து மதம் சார்ந்த வன்மத்தை உருவாக்க பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
UPDATE :
யூடர்ன் தரப்பில் சரவணா ஸ்டோர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு இணைக்கப்படாமல் இருந்தது. அது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட முயற்சியில், சென்னை பாடியில் உள்ள நியூ சரவணா ஸ்டோருக்கு தொடர்பு கொண்ட பொழுது நீதிமன்ற வழக்கு தொடர்பாக முறையான பதில் இல்லை. அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் வெளியிட தயார்.
அடுத்ததாக , குரோம்பேட்டை எஸ்13 காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய பொழுது, குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் இருந்து புகார்கள் ஏதும் வரவில்லை என மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து, குரோம்பேட்டை சரவணா ஸ்டோருக்கு தொடர்பு கொண்டு ” பிள்ளையார் கோவிலை அகற்றக்கோரி ” மதம் சார்ந்த மிரட்டல்கள் வந்ததாக எனக் கேட்டோம். அதற்கு , அப்படியான சம்பவம் ஏதும் நடக்கவில்லை, பொய்யான தகவல்கள் என யூடர்ன் குழுவிற்கு பதில் அளித்து இருந்தனர். நம்முடைய ஆய்வில் இருந்து கிடைத்த தகவல்களை இணைத்து உள்ளோம்.