சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டதாக சர்க்காரியா கமிஷனிடம் கலைஞர் சொன்னதாகப் பரவும் பொய்

பரவிய செய்தி

சர்க்காரியா கமிஷனிடம் சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது என்றும் சாக்குப் பையைக் கறையான் தின்றுவிட்டது என்றும் கலைஞர் கருணாநிதி சொன்னார். – சீமான்

மதிப்பீடு

விளக்கம்

திமுக மற்றும் கலைஞர் மீது விமர்சனம் வைக்கும் போதெல்லாம் சர்க்காரியா கமிஷனிடம் கலைஞர் சொன்னதாக ஒரு விஷயம் கூறப்படுவதுண்டு. சர்க்காரியா கமிஷன் கலைஞரிடம் சர்க்கரை எங்கே என்று கேட்டதற்கு எறும்பு தின்றுவிட்டது என்றும் அந்த சாக்கு பையை கறையான் தின்றுவிட்டது என்றும் பதில் அளித்ததாகச் சொல்லப்படுவதுண்டு. 

மேலும் இந்த கமிஷன் கலைஞர் செய்ததை விஞ்ஞான ஊழல் எனக் கூறியதாகப் பல அரசியல் தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பேசி இருப்பதைக் காண முடிகிறது. இதே விஷயத்தை நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரச்சார மேடையில் பேசியுள்ளார். 

உண்மை என்ன?

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். விலகி 1972ம் ஆண்டு அதிமுக-வை தொடங்கினார். கட்சியைத் தொடங்கியதும் ஆட்சியிலிருந்த திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு என்கிற பெயரில் பட்டியல் ஒன்றைக் குடியரசுத் தலைவர் வி.வி. கிரியிடம் எம்.ஜி.ஆர். சமர்ப்பித்தார். 

இந்த புகார் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தார். இது குறித்து விளக்கம் அளிக்கத் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த புகார்கள் தொடர்பாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். 

இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என மீண்டும் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். மேலும் விசாரணை கமிஷம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கும் கலைஞர் பதில் அளித்துள்ளார். 

இவையெல்லாம் 1973ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்தாகிவிட்டது. பிறகு ஒன்றிய அரசு இது குறித்து எந்த முன்னெடுப்புகளையும் எடுக்கவில்லை. 1975ம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ஜனநாயகத்திற்கு எதிராக இந்திரா காந்தி செய்த செயல்களுக்கு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு எதிராக இருந்தது. இதன் விளைவு சட்ட ஒழுங்கை காரணம் காட்டி தமிழ்நாடு மாநில அரசு கலைக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக 1972ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கொடுத்த புகார் மற்றும் அதன் பிறகு நாஞ்சில் மனோகர் கொடுத்த புகாரை விசாரிக்க 1976, பிப்ரவரியில் நீதிபதி ரஞ்ஜித் சிங் சர்க்காரியா தலைமையில் தனிநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனே அரசியல் உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டது எனப் பலரும் அன்றே குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த கமிஷன் சர்க்கரை தொடர்பாகக் கேட்ட கேள்விக்குத்தான் எறும்பும் கறையானும் தின்றுவிட்டதாகக் கலைஞர் பதில் சொன்னதாக நீண்டகாலமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மை அல்ல. 

இத்தகைய புகார்களை முன்வைத்த எம்.ஜி.ஆரிடம் கமிஷன் சில கேள்விகளை முன்வைத்துள்ளது. அதற்கு, கருணாநிதி என்னென்ன ஊழல் செய்தார் என்ற விவரம் எனக்குத் தெரியாது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் எனக்குத் தொகுத்துத் தந்த விவரங்களையே குடியரசுத் தலைவரிடம் கொடுத்தேன் என்று அவர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆணையத்திடம் 1976, ஜூலை மாதம் கலைஞர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  சர்க்கரை மூட்டை ஒன்றுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை கமிஷன் பெற்றதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுப் பொய்யானது. சர்க்கரை தொடர்பான எந்த கோப்பும் அவருக்கு அனுப்பப்படவில்லை என்று பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளது. 

எந்த இடத்திலும் சர்க்கரையை எறும்பு தின்றதாகவோ, சாக்குப் பையைக் கறையான் தின்றதாகவோ கூறப்படவில்லை. மேலும் கமிஷன் தனது அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் கலைஞர் விஞ்ஞான ஊழல் செய்ததாகக் குறிப்பிடவும் இல்லை. 

அதுமட்டுமின்றி கமிஷன் என்பது பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்யும். அது நீதி வழங்கும் அமைப்பு கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றம் அதனை விசாரித்து குற்றம் நிரூபணமானால் தண்டனை வழங்கப்படும். இது எதுவும் சர்க்காரியா அறிக்கையின் மூலம் நடக்கவில்லை. இது பெயருக்கு அமைக்கப்பட்ட ஒரு கமிஷனாகவே செயல்பட்டுள்ளது. 

இந்த எறும்பு, கறையான் தொடர்பானக் கதையைப் பல காலமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசுவதும், அது ஊடகங்களில் செய்தியாக வெளியாவதும் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. அவை அனைத்துமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும். அறிக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

முடிவு : 

சர்க்காரியா கமிஷனிடம் சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது என்றும் சாக்குப் பையைக் கறையான் தின்றுவிட்டது என்றும் கலைஞர் சொன்னதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. 

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader