செயற்கைகோளின் துல்லிய ஏவுதலுக்கு பஞ்சாங்கம் கணிப்பு மிக அவசியம் என்றாரா மயில்சாமி அண்ணாதுரை ?

பரவிய செய்தி

செயற்கைகோள் துல்லிய ஏவுதலுக்கு பஞ்சாங்கம் கணிப்பு மிக அவசியம் – இஸ்ரோ மயில்சாமி பளிச் பதில்

மதிப்பீடு

விளக்கம்

” ராக்கெட்ரி ” திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது ராக்கெட்ரி மற்றும் பஞ்சாங்கம் இடையிலான தொடர்பு பற்றி ஏதும் இருக்கிறதா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் மாதவன், ” கண்டிப்பாக, பயங்கர தொடர்பு இருக்கிறது. 2014-ம் ஆண்டு இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோளை அனுப்பியது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த செலஸ்டியல் என்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரகங்களை தட்டிவிட்டு நேரடியாக அனுப்பினார்கள். நம்பி நாராயணின் மருமகன் அருணன் மங்கல்யான் திட்டத்தின் இயக்குநராக இருந்தார்.

அப்போது செயற்கைகோள் செவ்வாய் கிரகம் பாதையில் சென்றதா எனத் தெரியாது, இங்கிருந்து அனுப்பட்ட சிக்னல் 48 நிமிடங்களுக்கு பிறகே அங்கு போகிறது. மின்சாரம் இல்லாமல் சின்ன பட்ஜெட்டில் வெற்றிகரமாக செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் நம்முடையே பஞ்சாங்கம் தான் ” எனப் பேசி இருந்தார்.

நடிகர் மாதவன் செயற்கைகோள் ஏவுதல், செவ்வாய் கிரகப் பயணத்தை 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பஞ்சாங்கத்துடன் தொடர்புப்படுத்தி பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகினார்.

இதையடுத்து, நடிகர் மாதவனின் பேச்சுக் குறித்து இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, “செயற்கைகோள் துல்லிய ஏவுதலுக்கு பஞ்சாங்கம் கணிப்பு மிக அவசியம் ” என பதில் அளித்து உள்ளதாக செய்தித்தாள் பக்கத்தின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது .

Archive link 

செய்தியில், ” ஒரு குறிப்பிட்ட கோளுக்கு செயற்கைகோளை விண்ணில் அனுப்ப வேண்டும் என்றால், அந்தக் கோள் எங்கு நிற்கிறது என்பதை பஞ்சாங்கம்(Almanac) வழியாகவே கணிக்க முடியும். மாதவன் கூறியதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் என்ற வார்த்தை மட்டும் தான் தவறு. மற்றப்படி பஞ்சாங்கத்தின் உதவியுடன் தான் செயற்கைகோள்கள் துல்லியமாக ஏவப்படுகின்றன ” எனக் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ? 

நடிகர் மாதவனின் பேச்சுக் குறித்து தந்திடிவி சேனலுக்கு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அளித்த பேட்டியில், ” இதுமாதிரியான விண்வெளி பயணங்களுக்கு பஞ்சாங்கம் (Almanac) உலகம் முழுவதும் பயன்படுத்துவது தான். இங்கிருந்து பார்ப்பதற்கு ஆரியப்பட்டா காலத்தில் இருந்து பண்ணதுதான். ஆனால், அந்த பஞ்சாங்கம் என்பது ஆண்டாண்டு காலங்களாக இருக்கக்கூடிய ஒரே பஞ்சாங்கம் இல்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் என்ற வார்த்தை பிழையாக இருக்கிறது என நினைக்கிறேன்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்து இன்று நாம் செவ்வாய்க்கு போவது என்பது முடியாத காரியம். ஏனென்றால், அவ்வபோது இருக்கக்கூடிய கிரகங்கள் உடைய இடங்களை கணித்து வைத்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் உலகளவில் எங்களுக்குள் இருக்கக்கூடிய பஞ்சாங்கம் அவ்வபோது மாறுதல் அடைகிறது. அந்த மாறுதலுக்கு உட்பட்டுதான் சமீபத்திய எங்களுடைய பஞ்சாங்கம்(almanac) இருக்கிறது.

அதை வைத்து தான் எந்த நேரத்தில் இருந்து நாம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க வேண்டும், அந்த பயணம் ஆரம்பித்தால் எவ்வளவு வேகத்தில் எப்படி போனால் அந்த இடத்தை அடைவோம் என இப்போது அறிவியல்பூர்வமாக கோள்கள் இருக்கக்கூடிய இடங்கள், கோள்களின் பயணங்கள், நாம் பூமியில் இருக்கக்கூடிய இடம், நாம் அனுப்பக்கூடிய பிஎஸ்எல்வி எப்படி போகும், அதில் இருந்து சந்திரயான் எப்படி போகும் இப்படி எல்லாத்தையும் கணித்து பார்த்து விட்டு, பல பல கம்யூட்டர் சிமுலேஷன் பண்ண பிறகு, பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு தான் அந்த நேரம் கணிக்கப்படுகிறது. அது பஞ்சாங்கத்தை பார்த்து கணிக்கப்படுவது அல்ல ” எனத் தெரிவித்து இருந்தார்.

Twitter link 

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் பற்றி நடிகர் மாதவன், ” அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என அழைத்த நான் இதற்கெல்லாம் (விமர்சனங்கள்) தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன். அதேநேரத்தில், இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து நாம் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், செயற்கைகோள் துல்லிய ஏவுதலுக்கு பஞ்சாங்கம் கணிப்பு மிக அவசியம் என  இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாக வெளியான செய்தி தவறானது. விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்காக உள்ள அல்மனாக் என்பதை வைத்தும், பல்வேறு கம்யூட்டர் சிமுலேஷன் மற்றும் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு செயற்கைகோள் ஏவப்படும் நேரம் கணிக்கப்படுவது என்றே தெரிவித்து இருக்கிறார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader