ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடுமை செய்யப்பட்ட காட்சி என பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
சாத்தான் குளத்தில் அப்பாவி வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை எடப்பாடியின் ஏவல்துறை கொடுமை செய்த காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக செய்திகளில் தகவல்கள் வெளியான நிலையில், போலீஸ் கஸ்டடியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கொடுமைப்படுத்தும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
DMK4TN எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோவில், ” தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள நபரை சுற்றி பலரும் இருக்க, ஒருவர் கையில் இருக்கும் குச்சியைக் கொண்டு அவரின் ஆசனவாயில் திணிக்கும் காட்சி பதிவாகி இருக்கிறது. அதைச் சுற்றி இருப்பவர்கள் வீடியோவும் எடுக்கின்றனர் “. DMK4TN ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ சில மணி நேரங்களுக்கு பிறகு நீக்கப்பட்டு உள்ளது. எனினும், சில முகநூல் பக்கங்களில் அவ்வீடியோ பகிரப்பட்டு உள்ளது.
வீடியோவில் கொடுமைப்படுத்தப்படும் நபரின் முகம் மற்றும் உடல் அமைப்பும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல் அமைப்பு பொருந்தாத ஒன்றாக இருப்பதைக் காண முடிகிறது. வீடியோவில் ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை. இது கொரோனாவிற்கு முந்திய பழைய வீடியோவாக இருக்க வாய்ப்புள்ளது. சாத்தான்குளத்திற்கு புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால், வீடியோவில் இருக்கும் கட்டிடம் சிறிது பழையதாக இருக்கிறது.
மேலும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் 19-ம் தேதி இரவு 11.30 க்கு கைது செய்யப்பட்டு 20-ம் தேதி மாலை 2.30 மணிக்கு கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவில் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து சிறையில் அடைக்கலம் எனச் சான்றிதழ் வழங்கி உள்ளார். ஆனால், வீடியோவில் பகல் பொழுதாக இருப்பதை பார்க்கலாம். சிறையில் நிகழ்ந்து இருக்கலாமே என்ற கோணத்தில் யோசிக்கலாம். ஆனால், சிறையில் வீடியோக்களை எடுக்க வாய்ப்புகளே இல்லை.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது இரவெல்லாம் அடித்தார்கள், கைகளை பிடித்துக் கொண்டு அடித்ததை பார்த்ததாக கூறி இருந்தார். கட்டி தொங்கவிட்டு அடித்ததாக கூறவில்லை. அதேபோல், இரவு என அவர் குறிப்பிட்டு இருந்தார், இந்த வீடியோ பகலில் எடுக்கப்பட்டு உள்ளது .
சாத்தான்குளம் சம்பவத்தை நேரில் பார்த்தவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அது குறித்து அளித்த தகவலை ஊடகங்கள், சில இணையதளங்கள் வெளியிட்டு இருந்தனர். அவரைத் தொடர்புக் கொண்டு பேசிய போது, ” அப்படி எந்தவொரு வீடியோவும் இருப்பதாக எங்களுக்கு தகவல் இல்லை ” எனக் கூறி இருந்தார்.
சாத்தான்குளத்தில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை கொடுமைப்படுத்தும் காட்சி என இவ்வீடியோ சமூக வலைதளங்களில் மட்டுமே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அப்படி எந்தவொரு வீடியோவும் கிடைத்ததாக உறுதியான தகவல்கள் இல்லை. நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் வரை ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்பிற்கு நீதிக் கேட்டு குரல்களை எழுப்பி வருகிறார்கள். இந்நேரத்தில் தவறான வீடியோக்களை பரப்புவது ஏற்புடையது அல்ல.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.