சாத்தான்குளம் சம்பவத்தை கள்ளக்காதல் பிரச்சனையாக மாற்றும் விஷமிகள் !

பரவிய செய்தி
சாத்தான் குளத்தின் உண்மையான கள நிலவரம். அரசு ஏன் மறைக்கிறது ? யாரை காப்பாற்ற முயற்சி
மதிப்பீடு
விளக்கம்
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் இருந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடுமையாகப்பட்ட தாக்கப்பட்டு இறந்த சம்பவம் நாடு முழுவதும் கண்டனத்தை பெற்றது. அதற்கு நீதி கேட்டு கருத்துக்களையும் பதிவிட்டு வந்தனர். இதற்கு மத்தியில் சிலர் சாத்தான்குளம் சம்பவத்தை கள்ளக்காதல் சம்பவமாகவும், மத துவேசத்தை வெளியிடும் விதத்திலும் பதிவிட்டு வருவதை பார்க்க முடிந்தது.
பரப்பப்படும் வதந்தியின் முழுப் பதிவு, ” சாத்தான் குளத்தின் உண்மையான கள நிலவரம்… அரசு ஏன் மறைக்கிறது…..? யாரை காப்பாற்ற முயற்சி?
கள்ளக்காதல் வேண்டாம் என்று சொன்ன தந்தைக்கும் மகனுக்கும் வீட்டில் தகராறு
அதனால் இருவருக்கும் வீட்டுக்குள்ளேயே அடிதடி எதார்த்தமாக அந்த பகுதியில் ஊரடங்கு விஷயமாக போன போலீசார் இதை பார்க்க என்ன விஷயம் என்று விசாரிக்க போலீசாரிடம் இருவரும் எடக்கு மடக்காக பேசியிருக்கிறார்கள். உடனே போலீசார் வாங்க ஸ்டேஷன்ல போய் பேசி பஞ்சாயத்து பண்ணிக்கலாம்னு அழைச்சுட்டுப் போய் பேசினதில்ல முடிவு எட்டவில்லை. மாறாக போலீசாரையே அசிங்க அசிங்கமாக ஸ்டேஷனிலேயே வைத்து திட்டி இருக்குறாங்க ஒரு போலீஸ்காரர் என்னையா எங்களையே இப்படி பேசுறீங்க என்று லேசா லத்தியால் ரெண்டு பேரையும் தட்டி எப்ஐஆர் போட்டு நீதிபதி முன்னால் கொண்டுபோய் நிறுத்தி விசயத்தை சொல்லவும் தூக்கி உள்ள போட்டுட்டாங்க . ஆனா ஏற்கனவே வீட்டுல அப்பனுக்கும் புள்ளைக்கும் பயங்கரமான அடிதடி நடந்தது நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸ் உள்ள போட்டு இருக்கு ஆனால் மாற்றுமத வணிகர்கள் இதையெல்லாம் மறைக்கிறார்கள். போலீஸ் மேலயே முழு பழியை தூக்கிப் போடறாங்க போலீஸ்காரர்களும் மனிதர்கள்தானே என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு இவர்கள் அசிங்கமாக திட்டலாமா இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் போலீஸ்காரர்களை மதிக்க மாட்டார்களாம்.. ஒரு கள்ளக்காதலால் அவர்கள் குடும்பம் நாசமானது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த காவல்துறையையும் அவர்களது குடும்பத்தையும் அலைக்கழிக்க வைத்தது எந்த விதத்தில் நியாயம். இந்த லட்சணத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வேறு. காவல்துறை செய்யும் பணி மகத்தானது யாரோ ஒருவர் இருவர் சூழ்நிலை காரணமாக தீயவர்களாக இருக்கின்றனர் அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையும் எங்களால் மதிப்பை குறைத்துக் கொள்ள முடியாது காவல்துறை என்பது தந்தை ஸ்தானத்தில் உள்ள துறை அவர்கள் அதட்டுவதும் திட்டுவதும் மக்களாகிய நம் நன்மைக்கே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ” எனக் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 25மற்றும் 26-ம் தேதிகளில் முகநூலில் பரப்பப்பட்டு வந்த இந்த வதந்தி வாட்ஸ் அப் குழுக்களுக்கும் பகிரப்பட்டு வருகிறது. மாஜிஸ்திரேட் விசாரணை, மதுரை உயர் நீதிமன்றத்தின் தலையீடு போன்றவற்றால் கடந்த சில நாட்களில் சாத்தான்குளம் சம்பவத்தில் பல்வேறு ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டன. இதற்கு நடுவில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் பேட்டிகள் ஏராளம்.
முதலில் வெளியான சிசிடிவி காட்சிகளில் கடைசியின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த ஜெயராஜ் போலீசாரால் அழைத்து செல்லப்படும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதேபோல், அவரை தேடி பென்னிக்ஸ் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. போலீஸ் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறியது பொய் என அந்த சிசிடிவி காட்சி வைரலாகியது.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணையில் தலைமை பெண் காவலர் ரேவதி சாட்சியாக மாறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தாக்கப்பட்ட தகவல் வெளி வந்தது. இதனால் பெண் போலீஸ் ரேவதிக்கு சமூக வளைதளங்களில் பிரபலங்களும், பொதுமக்களும் நன்றிகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர்.
எத்தனை ஆதாரங்கள் இருந்தாலும் சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தாக்கப்பட்டு இறந்த ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் இறப்பை தவறாக திசை திருப்ப பல வதந்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தனை நடந்தும் அந்த வதந்தி பதிவுகள் நீக்கப்படவில்லை, மேலும் பகிரப்பட்டே வருகிறது. அப்பாவிகளின் இறப்பிற்கு நீதி கேட்கும் தருணத்தில் வதந்திகளையும், மத துவேசத்தையும் முன்னிறுத்தி மக்களிடையே வன்மத்தை உருவாக்க முயல்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.