This article is from Jul 01, 2020

சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சி சொல்லிய போலீஸ் ரேவதி இவரா ?

பரவிய செய்தி

ரேவதீ  இருட்டு அறையில் ஒளி பாய்ச்சிய தைரியமான சிங்கப்பெண் வாழ்த்தலாமே #JusticeforJayarajAndFenix

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் போலீஸ் காவலில் உயிரிழந்தது குறித்து சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியின் செயல் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் பெண் காவலர் ரேவதி என குடும்பத்துடன் இருக்கும் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகிறது.

இதேபோல், ரேவதி பெயரை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தியில் வெளியான கட்டுரையிலும் காவலர் ரேவதி எனக் கூறி இப்புகைப்படம் வெளியான ட்வீட் ஒன்றை இணைத்து உள்ளனர்.

Twitter link | archive link 

உண்மை என்ன ? 

சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சிக் கூறிய தலைமை பெண் காவலர் ரேவதி விகடனுக்கு அளித்த பேட்டியில், கடந்த 15 வருடங்களாக இந்த சர்வீஸில் இருப்பதாகவும், தன்னுடைய உயிருக்கும் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் எனக் கூறியதாக வெளியான தகவலில் இருந்து பெண் காவலர் ரேவதி 15 வருடங்களாக பணியில் உள்ளார் என அறிந்து கொள்ள முடிகிறது.

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 3 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகாவைச் சேர்ந்த ரேவதி ஐஏஎஸ் தேர்வில் 3-ம் இடம் பிடித்துள்ளதாகவும், அவரின் பெற்றோர்கள் தினக்கூலி வேலை செய்வதாக இதேப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.ஆனால், அதுவும் தவறான தகவலே.

Facebook link | archive link 

மேற்கொண்டு தேடுகையில், 2017 மார்ச் 26-ம் தேதி journalismpower.com enum தெலுங்கு இணையதளத்தில் வெளியான கட்டுரையில், ” ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட ரேவதி கல்லூரி படிப்பை முடிந்த பிறகு ஆந்திராவின் காவலர் தேர்வில் பங்கு பெற்று உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளனர். அந்த கட்டுரையில் ரேவதியின் மற்றொரு புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

ஆந்திராவில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து படித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளராக தேர்வாகிய ரேவதி என்ற பெண்ணின் புகைப்படத்தை சாத்தான்குளம் தலைமை பெண் காவலர் ரேவதி என தவறாக பரப்பி வருகிறார்கள். தலைமை பெண் காவலர் ரேவதி போலீஸ் காவலில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் தாக்கப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார் என ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : சாத்தான்குளம் குடும்பம் ஸ்டாலினுடன் இருப்பதாக வதந்தி புகைப்படம் !

முடிவு:

நம்முடைய தேடலில், சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் போலீஸ் காவலில் உயிரிழந்தது தொடர்பாக சாட்சி சொல்லிய தலைமை பெண் காவலர் ரேவதி என பரப்பப்படும் புகைப்படம் தவறானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader