சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை இரவில் என பரவும் வீடியோ.. எங்கு எடுக்கப்பட்டது ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சத்தியமங்கலம் மற்றும் திம்பம் மலைப்பாதை இரவில் வாகன விளக்குகளால் ஒளிரும் காட்சி என 30 நொடிகள் கொண்ட கண்கவர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவி சந்திரன் என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியான இவ்வீடியோ 11 ஆயிரம் ஷேர்கள் மற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கண்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் – திம்பம் மலைப்பாதை என்றொரு இரவுக் காணொலி பார்த்தேன். லாஸ் ஏஞ்சலஸ் ஃப்ரீவே போலிருக்கு! தென்னிந்திய காடுகளின் உயிர்நாடியே இப்படியெனில் காட்டுயிர்களின் கதி என்னாகும்? இந்தப்பாதை 6 PM – 6 AM மூடப்பட்டே ஆகணும். பொருளாதாரத்தின் பெயரால் விதைநெல்லை அவித்துத் தின்கிறோம்.😞
— SKP KARUNA (@skpkaruna) June 22, 2021
இப்படி வாகனங்கள் சென்றால் காட்டுயிர்களின் கதி என்னவாகும், இந்த பாதை இரவு 6 முதல் பகல் 6 மணி வரை மூடப்பட வேண்டும் என்றும் ட்விட்டர் உள்ளிட்டவையில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ சத்தியமங்கலம் மற்றும் திம்பம் மலைப்பாதையில் எடுக்கப்பட்டது அல்ல. வீடியோ குறித்து தேடுகையில், 2020 மே 31-ம் தேதி channel malayali எனும் யூடியூப் சேனலில் நந்தி ஹில்ஸ் பகுதியில் எடுக்கப்பட்டதாக தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
நந்தி ஹில்ஸ் கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து 61 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த வீடியோ அதிகாலையில் எடுக்கப்பட்டது என குறிப்பிட்டு இருக்கிறார்கள். பகல் நேரத்தில் நந்தி ஹில்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஆகாய காட்சிகள் அடங்கிய வீடியோ 2018-ல் வெளியாகி இருக்கிறது.
NANDI HILLS ROAD, AT NIGHT. A spectacular drone shot of the lit up road winding down Nandi Hills. Captured by Mayank Tiwari. #Bengaluru #BengaluruAerial pic.twitter.com/2CPTd9Rbqb
— Rasheed Kappan (@kappansky) May 3, 2019
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நந்தி ஹில்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவை கேரளாவின் வயநாட்டில் எடுத்ததாகவும், தமிழ்நாட்டின் சத்தியமங்கலத்தில் எடுத்ததாகவும் தவறாக வைரல் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : இயற்கை சூழ்ந்த சத்தியமங்கலம் பண்ணாரி சாலையா ?| நம்ம ஊரு இல்லை !
இதற்கு முன்பாக, ஆஸ்திரேலியா நாட்டில் எடுக்கப்பட்ட சாலையின் புகைப்படத்தை சத்தியமங்கலம் பகுதியில் எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறாக வைரல் செய்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், சத்தியமங்கலம் மற்றும் திம்பம் மலைப்பாதை இரவில் என வைரல் செய்யப்படும் வீடியோ கர்நாடகாவின் நந்தி ஹில்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ. இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல. 2020 மே முதலே யூடியூப் சேனல்களில் இவ்வீடியோ இடம்பெற்று இருக்கிறது என அறிய முடிகிறது.