லண்டன் அருங்காட்சியகத்தில் தமிழர் சத்யராஜுக்கு மெழுகு சிலை..!

பரவிய செய்தி
லண்டன் அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
உலக புகழ்பெற்ற இலண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாகுபலி படத்தில் இடம்பெற்ற கட்டப்பா கதாப்பாத்திரத்தை மெழுகு சிலையாக வைக்க உள்ளனர்.
விளக்கம்
இலண்டனில் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலை வடிவமைப்பாளரான மேடம் டுசாட்ஸ் என்பரின் மூலம் மெழுகு சிலை பொருட்காட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. எனினும், 1924 ஆம் ஆண்டில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் சினிமா மற்றும் உணவகம் உள்ளிட்டவைகள் இடம்பெற்று புதுப்பொலிவுடன் உருவானது.
250 ஆண்டுகள் பழமையான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டன், பாங்காக், பெய்ஜிங், டெல்லி, ஹாங்காங், லாஸ் வேகாஸ், வாஷிங்டன் டி.சி, நியூயார்க், சிட்னி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நிறுவப்பட்டது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகத்தில் தலைவர்கள், சினிமா, விளையாட்டு, டிவி, இசை, கலை மற்றும் அறிவியல், வரலாறு போன்றவற்றில் புகழ்பெற்ற மனிதர்களின் முழு உருவ மெழுகு சிலை அமைக்கப்படும். இதில், இந்தியாவில் இருந்து மகாத்மா காந்தி, நரேந்திர மோடி, அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என அனைத்து விதத்திலும் நடிப்பில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர் நடிகர் சத்யராஜ். இயக்குநர் ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
கதையின் திருப்புமுனையான கட்டப்பா கதாப்பாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருப்பார். இரு பாகங்களால் வெளியான பாகுபலி திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.
“ கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் ” என்ற ஒற்றை கேள்வி தான் பாகுபலி-2 பாகத்தை உலகம் முழுவதும் பிரபலமடையச் செய்தது.
கட்டப்பா கதாப்பாத்திரத்தில் சிறந்து விளங்கியதற்கு சத்யராஜ் அவர்களுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய பெயர் கிடைத்தது. இந்நிலையில், சத்யராஜ் அவர்களுக்கு உலகளவில் பெருமை சேர உள்ளது.
இலண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சத்யராஜின் கட்டப்பா கதாப்பாத்திரத்தின் தோற்றத்தை மெழுகு சிலையாக வைக்க உள்ளனர். இந்தி நடிகர், நடிகைகளுக்கு மட்டும் அளித்து வந்த கௌரவம் தென்னிந்திய நடிகரான பிரபாஸின் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்கு கிடைத்தது.
தற்போது தமிழ் நடிகரான சத்யராஜ் அவர்களுக்கு கிடைத்த இக்கௌரவம் பெருமைக்குரிய ஒன்று. இந்த அறிவிப்பு வெளியாகிய பின் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.