This article is from Dec 28, 2018

சவூதியில் 3000 ஆண்டுகள் பழமையான ஹிந்துக் கோவிலா ?

பரவிய செய்தி

சவூதி அரேபியாவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன், விநாயகர் கோவில்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தோனேசியாவில் அந்நாட்டின் இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் பகுதியில் அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான ஹிந்து கோவிலின் பகுதிகள் மற்றும் சிலைகளே இவை.

விளக்கம்

பழங்கால இந்தியாவை ஆட்சி செய்த பேரரசர்கள் கடல் கடந்து தங்கள் ஆட்சியை விரிவுப்படுத்தினர். தமிழ் மன்னர்களும் கடல் கடந்து பல நாடுகளை தங்களின் ஆளுகைக்கு கீழே கொண்டு வந்தனர். அவ்வாறான நாடுகளில் இந்தோனேசியா நாடும் இருந்தது என அனைவரும் அறிந்து இருப்பர்.

” 2009-ம் ஆண்டில் டிசம்பர் 11-ம் தேதி இந்தோனேசியாவின் யோக்யகர்டா பிராந்தியத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் நூலகப் பகுதியில் பழமையான ஹிந்து ஆலயம் இந்தோனேசியாவின் Archaeological heritage preservation hall Yogyakarta-வின் அகழ்வாராய்ச்சி குழுவால் தோண்டி எடுக்கப்பட்டது “.

கிம்புலன் கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலில் நந்தி மற்றும் விநாயகர் சிலைகள் காணப்பட்டன. இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தின் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட இரு கோவில்களிலும் மேற்கூரைகள் இல்லை. அவற்றில் ஒன்று முக்கிய கோவில், மற்றொன்று perwara கோவில் ஆகும். முக்கியக் கோவிலில் சிவபெருமானின் லிங்க உருவம் கிடைத்துள்ளது.

பிற விநாயகர் சிலைகள் போன்று இல்லாமல் வடிவமைப்பில் வித்தியாசங்கள் காணப்படுவதால் இங்கு கிடைத்த விநாயகர் சிலை 9 அல்லது 10 நூற்றாண்டை சேர்ந்தவை என கணித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் கண்டெடுக்கப்பட்ட ஹிந்து கோவில்கள் 1000 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது. இஸ்லாமிக் பல்கலைக்கழகப் பகுதியில் அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டெடுக்கப்பட்ட கோவில், விநாயகர் சிலை, தோண்டி எடுக்கப்பட்ட பகுதி ஆகியவற்றை இணைத்த புகைப்படங்களே சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையானக் கோவில் என வதந்தியை பரப்பி உள்ளனர்.

இதேபோன்று இந்தோனேசியாவின் பண்டுல் பகுதியின் படுரேட்னோ கிராமத்தில் விநாயகர் சிலை, சிவன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை 1,000 அல்லது 1,100 ஆண்டுகள் பழமையானவை யோக்யகர்டா அகழ்வாராய்ச்சி குழு கணித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் கிடைத்த லிங்கத்தை வைத்து கீழடியில் கிடைத்த சிவ லிங்கம் என வதந்தி பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்க் : கீழடி ஆராய்ச்சியில் சிவலிங்க சிலை கிடைத்துள்ளதா ?

இந்தோனேசியாவில் 1000 ஆண்டுகள் பழமையான ஹிந்துக் கோயில்கள் பற்றிய செய்திகள் அந்நாட்டின் செய்தி தளங்களில் 2018 வரையில் இடம்பிடித்துள்ளன.

” இந்தோனேசியாவின் இஸ்லாமிக் பல்கலைக்கழகம் அருகே கண்டெடுக்கப்பட்ட ஹிந்துக் கோவில் மட்டுமின்றி Sambisari (1996), gebang (1937), Brong, 9 நூற்றாண்டைச் சேர்ந்த parambanan உள்ளிட்ட பல ஹிந்துக் கோவில்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டன “.

இந்தோனேசியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை சவூதியில் உள்ள 3000 பழமையான கோவில் என தவறாகவும், மிகைப்படுத்தியுள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader