சவுதி அரேபியாவில் அனைத்து முஸ்லீம்களுக்கும் யோகா கட்டாயமாக்கப்பட்டதாக பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
இஸ்லாமிய பிறப்பிடமான புனித சவூதி அரபியாவில் அனைத்து முஸ்லீம்களுக்கும் யோகா கட்டாயம்
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை பார்த்து வருகிறோம். பல்வேறு நாடுகளுக்கும் யோகா பயிற்சியை பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இஸ்லாமிய பிறப்பிடமான புனித சவுதி அரபியாவில் அனைத்து முஸ்லீம்களுக்கும் யோகா கட்டாயம் என இஸ்லாமிய பெண்கள் யோகா செய்யும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இஸ்லாமிய பிறப்பிடமான புனித சவூதி அரபியாவில் அனைத்து முஸ்லீம்களுக்கும் யோகா கட்டாயம் pic.twitter.com/IyZrCzS7BZ
— அமுதா இளவேனில் (@amuthaIlavenil) March 9, 2023
உண்மை என்ன ?
சவுதி அரேபியாவில் யோகா பயற்சி குறித்து தேடுகையில், ” சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் யோகாவை விளையாட்டு நடவடிக்கைகள் என்பதன் கீழ் பட்டியலிட்டு உள்ளது. இதன் மூலம் சவுதி குடிமக்கள் அரசாங்கத்திடம் இருந்து உரிமம் பெற்று பயிற்சி செய்ய அல்லது பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கிறது ” என 2017ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
2017ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி Saudi Gazette எனும் இணையதளத்திற்கு அரபு யோகா அறக்கட்டளையின் நிறுவனர் நெளஃப் அல்-மர்வாய் அளித்த பேட்டியில், ” வணிகப் பதிவுக்கான ” விளையாட்டு நடவடிக்கைகள் ” கீழ் யோகா கற்பித்தலை வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் பட்டியலிட்டு உள்ளது. இந்த நடவடிக்கையானது நாட்டில் யோகா கற்பிப்பதற்கும், பயிற்சி செய்வதற்கும் யார் வேண்டுமானாலும் விண்ணபிக்க அனுமதிக்கிறது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், அரபு யோகா அறக்கட்டளை 2010ம் ஆண்டு சவுதி யோகாச்சார்யா(சான்று பெற்ற ஆசிரியர்) நெளஃப் அல்-மர்வாய் என்பவரால் நிறுவப்பட்டது. சவுதி அரேபியாவில் 5 அங்கீகரிக்கப்பட்ட யோகா பள்ளிகள் உள்ளன என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2017ல் சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம், யோகா பயிற்சி பெறவும், கற்பிக்கவும் அனுமதி அளித்து இருக்கிறது. எனினும், யோகாவை கல்வி நிறுவனங்களில் அல்லது அமைப்புகளில் கட்டாயமாக்கியதாக எந்த செய்திகளிலும் குறிப்பிடவில்லை. இதையடுத்து, சமீபத்தில் சவுதி அரேபியாவில் யோகா பயிற்சி அளிப்பது குறித்து ஏதும் அறிவிப்புகள் வெளியாகியதா எனத் தேடினோம்.
2023 மார்ச் 3ம் தேதி வெளியான Siasat இணையதளத்தில், ” சவுதி அரேபியா கடந்த காலங்களில் வரலாற்று சாதனைகளை படைத்த விளையாட்டுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், வரும் மாதங்களில் யோகா பயிற்சிக்கு ஆதரவு அளிக்க முக்கிய பல்கலைகழகங்கள் உடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளது என பிப்ரவரி 28ம் தேதி ரியாத்தில் ” தாயக விளையாட்டை ஆதரிப்பதில் பல்கலைக்கழக விளையாட்டுகளின் பங்கு ” என்ற தலைப்பில் நடைபெற்ற மன்ற நிகழ்வில் சவுதி யோகா அமைப்பின் தலைவர் நெளஃப் அல்-மர்வாய் தெரிவித்து இருந்தார் ” என வெளியாகி இருக்கிறது.
2017 மற்றும் 2023ல் அரபு யோகா அறக்கட்டளையின் நிறுவனர் நெளஃப் அல்-மர்வாய் அளித்த தகவல்களே செய்தியாக வெளியாகி இருக்கிறது. அவ்வாறு வெளியாகும் செய்திகள் எதிலும் யோகா கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை. யோகா பயிற்சியை கற்பிக்க பல்கலைகழகங்கள் உடன் ஒப்பந்தமிட உள்ளதாகவே வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : சவுதி அரேபியா அரசு கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு அளிப்பதாக பரவிய தவறான செய்தி !
மேலும் படிக்க : சவூதியில் அரசக் குடும்பத்தினர் திருவாசகத்தை தலையில் சுமந்து செல்வதாக வதந்தி !
இதற்கு முன்பாக, சவுதி அரேபியா குறித்து இந்தியாவில் பரப்பப்பட்ட வதந்திகளின் உண்மைத்தன்மை குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், சவுதி அரபியாவில் அனைத்து முஸ்லீம்களுக்கும் யோகா கட்டாயம் என்ற அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. அது தவறான தகவல். சவுதி அரேபியாவில் விளையாட்டு நடவடிக்கைகள் கீழ் யோகா பயிற்சி அளிக்க மற்றும் பயிற்சி பெற அனுமதி மட்டுமே அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பல்கலைக்கழகங்கள் உடன் இணைந்து யோகா பயிற்சி அளிக்க ஒப்பந்தமிட உள்ளதாகவே செய்திகள் வெளியாகி இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.