This article is from Jun 07, 2020

சவுதியில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும், ரூ30,000 வழங்கப்படுகிறதா ?

பரவிய செய்தி

அனைத்து மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை இலவசம், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது இந்திய ரூபாய் மதிப்பில் 30,000 வழங்கப்படும் – சவுதி அரசு

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

சவுதி அரேபியாவில் கொரோனா நோயாளிகளுக்கு எந்த மருத்துவமனையாக இருந்தாலும் சிகிச்சை இலவசம் மற்றும் குணமாகி வீடு திரும்பும் போது அவருக்கு இந்திய மதிப்பில் 30,000 ரூபாய் வழங்கப்படுவதாக ஓர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு லட்சங்களில் செலவு ஆகும் என வெளியான செய்தியால் இப்படியொரு பதிவு வைரலாகி வருகிறது. ஃபாலோயர்கள் தரப்பில் இதுகுறித்து கேட்கப்பட்டதால் இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

சவுதி அரேபியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறதா எனத் தேடுகையில், சவுதி அரேபியா இந்தியர்கள் உள்பட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ சேவையை இலவசமாக வழங்குகிறது என்று மேற்கு ஆசிய நாட்டின் இந்தியத் தூதர் சவுத் எம்டி அல்-சதி கூறினார் என 2020 ஏப்ரல் 25  எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

சவுதி அரேபியா நாட்டில் வைரஸ் பாதித்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பவர்களுக்கு சிகிச்சைக்கான செலவை சவுதி மன்னர் சல்மான் ஏற்றுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபீயா கூறியதாக மார்ச் 30-ம் தேதி அல்ஜசீரா எனும் செய்தி இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

சவுதி அரேபியாவில் அனைத்து மருத்துவமனையிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவை அந்நாட்டின் அம்மன்னரே ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ செய்திகள் பல கிடைத்துள்ளன. ஆனால், சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திருப்புவோருக்கு இந்திய மதிப்பில் 30,000 வழங்குவதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

மாறாக, கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஒருவருக்கு சவுதி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட பரிசு உடன் 1500 சவுதி ரியால் கொடுக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

Tweet Archive link 

ஆனால், கொரோனா வைரசில் இருந்து மீண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்ட கிட் உடன் பணம் வழங்குப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலை சவுதியில் உள்ள அசீர் மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளதாக அல் ரியாத் செய்தித்தாள் வெளியிட்ட ட்வீட் பதிவு, அரபு செய்திகளில் மே 18-ம் தேதி வெளியான செய்தியும் கிடைத்தது.

இந்த வைரல் வீடியோவை நம்பியே இந்திய மதிப்பில் 30,000 ரூபாய் அளிப்பதாக தவறாக பரப்பி வருகின்றனர்.

முடிவு : 

நம்முடைய தேடலில், சவுதி அரேபியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்தன. ஆனால், குணமாகி வீடு திரும்புவோருக்கு இந்திய மதிப்பில் 30,000 வழங்கப்படுவதாக கூறும் தகவல் தவறானது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader