சவுதியில் காக்கைகளின் படையெடுப்பு என வைரலாகும் பழைய வீடியோ!

பரவிய செய்தி
சவுதி அரேபியாவில் காக்கைகளின் படையெடுப்பு ? என்ன நடக்குது இந்த பூமியில் வெட்டுக்கிளி அடுத்து காக்கை.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவை நோக்கி படையெடுத்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் விவசாயிகள் பெரும் பாதிப்பை கண்டு வருகிறார்கள். கண்ணில் படும் அனைத்தையும் உண்ணும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக அமைந்து உள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் காக்கைகள் படையெடுப்பு நிகழ்ந்து உள்ளதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. உலகத்திற்கு ஆபத்து நெருங்கி கொண்டிருக்கிறது, விசித்திரம் நிகழ்வதாக பேசத் தொடங்கியுள்ளது ஓர் கூட்டம்.
உண்மை என்ன ?
சவுதியில் நிகழ்ந்த காக்கைகளின் படையெடுப்பு என பகிரப்பட்ட வீடியோ உண்மையில் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது அல்ல, அமெரிக்காவில் நிகழ்ந்தது. அதுவும் சமீபத்தில் இல்லை.
வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற H mart கீ வார்த்தைகளை பயன்படுத்தி தேடும் பொழுது, காக்கைகள் படையெடுப்பு தொடர்பான செய்திகள் பல கிடைத்துள்ளன. மேலும், 2020 ஏப்ரல் 17-ம் தேதி viralhog எனும் யூடியூப் சேனலில் அதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
இந்த வீடியோவின் கீழே, ” 2016 டிசம்பர் 6-ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கர்ரோல்டோன் பகுதியில் நிகழ்ந்ததாக ” குறிப்பிட்டப்பட்டுள்ளது. 2016-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த காக்கைகளின் படையெடுப்பை கொரோனா வைரஸ், வெட்டுக்கிளிகள் படையெடுப்புக்கு பிறகு நிகழ்ந்ததாக பரப்பி வருகிறார்கள்.
அமெரிக்காவில் காக்கைகள் படையெடுப்பு தொடர்பான பல வீடியோக்கள், செய்திகளை உங்களால் காண முடியும். ஏனெனில், இது அவ்வபோது நிகழவேச் செய்கிறது. 2019-ம் ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தின் வால்மார்ட் வணிக வளாகத்தின் பார்க்கிங் பகுதியில் காக்கைகள் கூட்டமாய் அமர்ந்து இருக்கும் வீடியோ டெய்லிமெயில் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நமது தேடலில், சவுதி அரேபியாவில் காக்கைகளின் படையெடுப்பு என பகிரப்படும் வீடியோ அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 2016-ல் எடுக்கப்பட்டது. வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பிறகு நிகழ்ந்தவை அல்ல. தவறான வீடியோக்களை பகிர வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.