சாமி சிலையை பாதுகாக்கும் பாம்பின் வைரல் வீடியோ| உண்மை என்ன ?

பரவிய செய்தி
சௌதி அரேபியாவில் நிலத்தை தோண்டும்பொழுது கிடைத்த சிலை அதை பாதுகாக்கும் நாகம். தமிழன்தான் உலகை ஆண்டான் என்பதற்கு மேலும் ஒரு அடையாளம், எடுத்துக்காட்டு.
மதிப்பீடு
விளக்கம்
சவூதி அரேபியா நாட்டில் நிலத்தை தோண்டும் பொழுது கிடைத்த சாமி சிலையை பாம்பு சுற்றிக் கொண்டு இருப்பதாக வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதையும், தமிழன் என்ற அடையாளத்தையும் இணைத்து பதிவிட்டு இருந்தனர்.
தச்சூர் கிராம ஊராட்சி என்ற முகநூல் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு பதிவான வீடியோ 16 ஆயிரம் ஷேர்கள், 5 லட்சம் பார்வைகளை பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
வைரல் வீடியோவை கவனித்தால் இரு பகுதியாக இருப்பதை அறியலாம். முதலில் பாறைகள் இருக்கும் பகுதியில் கனரக இயந்திரங்கள் மூலம் தோண்டப்படும் பொழுது அங்கிருக்கும் பாம்பு தோண்டப்படுவதை பார்த்து கொண்டிருக்கிறது. அடுத்த வீடியோவில், நேரடியாக சிலையின் மீது பாம்பு சுற்றி இருப்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
மேலும், வீடியோவிற்கு பின்னால் கேட்கும் ஆடியோ அரபி மொழியில் இருப்பதை போன்று உள்ளது. ஆனால் அப்பகுதியை சுற்றி இருப்பவர்கள் இந்தியர்கள் போன்று இருக்கின்றனர். அதிலும், காவி உடைகள் அணிந்தும் கூட இருக்கிறார்கள். வீடியோவில் கேட்கும் மற்றொரு குரல்கள் வேறு மொழியில் இருக்கின்றன.
உண்மை என்ன ?
வைரல் வீடியோ குறித்து யூடியூப் தளத்தில் தேடிய பொழுது, 5000 ஆண்டுகள், 1000 ஆண்டுகள் வருட பழமையான முருகன் சிலையை பாதுகாக்கும் நாகம் மற்றும் கர்வார் பகுதியில் சிவன் சிலையை பாதுகாக்கும் நாகம் என பல முரணான தலைப்புகளில் வீடியோக்கள் ஓராண்டிற்கு முன்பே வெளியாகி உள்ளன. இதில் இருந்து, இவ்வீடியோ எடுக்கப்பட்டது சவூதி அல்ல , இந்தியா என்பதை உறுதியாக கூற முடிகிறது.
வதந்தி :
2018-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி இந்தியா டுடே செய்தியில் இருந்து, ” மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள கன்னேர்வாடி பகுதியில் நிலத்தை தோண்டும் பொழுது சிவன் சிலை கிடைத்ததாகவும், அந்த சிலையை சுற்றி பாம்பு பாதுகாத்து வருவதாகவும் ஓர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன பிறகு அப்பகுதியில் பூஜை பொருட்கள் விற்பனை, பூக்கடை, பழக்கடை முளைத்தன. சிலர் அங்கு மைக் , ஸ்பீக்கர் எல்லாம் கட்டி பாடல்களை ஒலிக்க விட்டதாகவும், மேலும் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டாக பாட்டு பாடி இறைவனை வேண்ட ஆரம்பித்தனர். அந்த சிலையை ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரிகள் அது சிவன் சிலை அல்ல , சூரிய கடவுளின் சிலை எனத் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருந்த வீடியோவில் ஒருவர் அந்த பாம்பினை சிலையின் மீது விடும் காட்சி இடம்பெற்று இருந்ததாகவும், அதை வைத்து சாமி சிலையை பாம்பு பாதுகாக்கிறது என்ற தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பான செய்திகள், இந்தியா டுடே மட்டுமல்லாமல், பிசினஸ் ஸ்டான்டர்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி செய்திகளில் வெளியாகி இருக்கின்றன. அதற்கான லிங்க்களும் ஆதாரத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
முடிவு :
நமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து, ஒரு வீடியோவிற்கு பின்னால் எத்தனை தவறான செய்திகள் இருந்துள்ளன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
சவூதியில் சாமி சிலையை பாம்பு பாதுகாப்பதாக வைரலாக வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்டது. அதற்கும் தமிழனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அங்கு கிடைத்த சிலையின் மீது பாம்பினை வைத்து தவறான தகவல்களை பரப்பியதாக முன்னணி செய்திகளில் கடந்த ஆண்டே வெளியாகி இருக்கிறது.
சிலர் மக்களின் இறை நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்பதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.