சவுதி அரசர் வருகையின் போது பிரதமர் நேரு குடும்பம் காசி கோயிலைத் திரையிட்டு மூடியதாகப் பரவும் வதந்திகள் !

பரவிய செய்தி
நேரு குடும்பம் காசி கோயிலை திறை போட்டு மூடியதாம் சவுதி அரசர் வருகைக்காக. காங்கிரசு இந்துகளின் அடையாளங்களை மறைத்தது & அழித்தது. காழ்மீரில் இன படுகொலைக்கு அமைதியாக இருந்தது. தமிழகத்தில ஈவேரவின் பார்பன கருவருப்பு குறலுக்கு வாயை மூடி இருந்தது.
மதிப்பீடு
விளக்கம்
சவுதி அரசர் இந்தியாவிற்கு வந்தபோது, நேரு குடும்பம் காசி கோயிலைத் திரை போட்டு மூடியதாகக் கூறி 2 நிமிடம் 15 வினாடி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நேரு குடும்பம் காசி கோயிலை திறை போட்டு மூடியதாம் சவுதி அரசர் வருகைக்காக. காங்கிரசு இந்துகளின் அடையாளங்களை மறைத்தது & அழித்தது. காழ்மீரில் இன படுகொலைக்கு அமைதியாக இருந்தது. தமிழகத்தில ஈவேரவின் பார்பன கருவருப்பு குறலுக்கு வாயை மூடி இருந்தது. https://t.co/sjJiETcmxp
— S.N (Kshatriya – Brahmarishi Vishvamitra lineage) (@sr69432243) September 10, 2023
மேலும் இந்த வீடியோவில் நேரு இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து இந்துக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார், நேருவைத் தொடர்ந்து அவருடைய குடும்பமும் அவ்வாறே உள்ளனர் என்றுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவில் உள்ள தகவல்கள் குறித்துத் தேடியதில், ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் சவுதி மன்னர் 17 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஆனால், அப்போது கோயில்கள் மூடப்பட்டதாக எந்த செய்திகளும், ஆவணங்களும் இல்லை.
இது குறித்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடியதில் சவுதி மன்னரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு ஒன்று கிடைத்தது. அதில், 1955, நவம்பர் 27ம் தேதி அப்போதைய சவுதி மன்னர் முதல் முதலாக 17 நாள் பயணமாக இந்தியா சென்றார். அப்போது புது தில்லி, மும்பை, ஹைதராபாத், மைசூர், சிம்லா, ஆக்ரா, அலிகார் மற்றும் வாரணாசி போன்ற பல்வேறு நகரங்களுக்குச் சென்றார் எனக் குறிப்பிடப்பட்டு, புகைப்படம் ஒன்றும் உள்ளது. அதில் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் சவுதி மன்னர் உள்ளனர்.
#King_Saud paid a 17-day visit to #India,the first visit by a Saudi Monarch on the 27 /11/1955.During the visit, King Saud toured #Indian cities including #New_Delhi, #Mumbai, #Hyderabad, #Mysore, #Simla, #Agra, #Aligarh & #Varanasi. pic.twitter.com/6Aax9qA8Le
— الملك سعود (@kingsaud) August 23, 2019
மேலும் சவுதி அரேபிய இந்தியத் தூதரக அதிகாரப்பூர்வ தளத்திலும் சவுதி மன்னர் இந்தியா வந்தது தொடர்பான குறிப்புகளைக் காண முடிகிறது. அதே போல் ‘British Pathé’ யூடியூப் பக்கத்திலும் சவுத் பின் அப்துல் அஜிஸ் அல்-சௌத் இந்தியா வருகை பற்றி வீடியோவுடன் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
சவுதி மன்னர் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘kingsaud.org‘ என்னும் தளத்தில் உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ராம்நகர் கோட்டைக்கும் அவர் சென்றுள்ள படங்கள் அதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அக்கோட்டையில் துர்கா கோயில், சின்னமாஸ்திகா கோயில் மற்றும் தக்ஷின் முகி ஹனுமான் கோயில் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
1955ம் ஆண்டு சவுதி மன்னர் வந்த போது கோயில்கள் மூடப்பட்டதா என்பது குறித்துத் தேடியதில் அப்படி எந்த செய்திகளும், வரலாற்றுக் குறிப்புகளும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருந்த அன்றைய கால கட்டத்தில் (1952-1957) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஜன சங்கம் (தற்போது பாஜக) 3 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.
ஒரு வேலை சவுதி மன்னரின் வருகையின் போது இந்து கோயில்கள் திரையிடப்பட்டு மூடி இருந்தால் எதிர்க்கட்சிகள் நிச்சயம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற அவை குறிப்பை ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு கேள்வியும் விவாதமும் அதில் இடம்பெறவில்லை.
1955ல் சவுதி மன்னர் இந்தியா வந்தது உண்மை தான். ஆனால், இந்து கோயில்கள் எதுவும் திரையிட்டு மூடப்படவில்லை. இதிலிருந்து ஒரு தவறான தகவலைப் பரப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் படிக்க : முஸ்லீம்களையும், இந்துக்களையும் பிரிக்கும் முடிவை நானே எடுத்தேன் என நேரு ஒப்புக்கொண்டதாகப் பரவும் தவறான தகவல் !
இதற்கு முன்னர் நேரு குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : சாவர்க்கரின் சிறை அறை, நேருவின் சிறை வசதி எனப் பரப்பப்படும் தவறான ஒப்பீடு !
முடிவு :
நம் தேடலில், சவுதி மன்னர் இந்தியா வருகை தந்த போது பிரதமராக இருந்த நேரு இந்து கோயில்களைத் திரையிட்டு மூடியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. சவுத் பின் இந்தியா வந்த 1955ம் ஆண்டு அப்படி எந்த ஒரு சம்பவமும் நிகழவில்லை என்பதை அறிய முடிகிறது.