சவூதி அனுப்பிய ஆக்சிஜன் டேங்கில் ரிலையன்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதா ?

பரவிய செய்தி

சவுதி அரேபியாவிலிருந்து வந்த ஆக்சிஜன் வண்டியை ரிலையன்ஸ் என்ற பெயரை மாற்றும் சங்கிகள் இது எல்லாம் ஒரு பொழப்பு.

Facebook link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் மருத்துவ ஆக்சிஜன் தேவைக்காக சவூதி அரேபியா நாடு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அனுப்பி வைத்தது. இந்நிலையில், சவூதி அரேபியா அனுப்பிய ஆக்சிஜன் டேங்கர்களில் ரிலையன்ஸ் என ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைக்கப்படுவதாக 12 நொடிகள் வீடியோ சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வைரல் செய்யப்படுகிறது.

Advertisement

உண்மை என்ன ?

இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆக்சிஜன் விநியோகம் ஏதும் செய்கிறதா எனத் தேடுகையில், ” பெருந்தொற்று தொடங்கிய 2020 மார்சில் இருந்து நாடு முழுவதும் 55,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை ரிலையன்ஸ் விநியோகம் செய்துள்ளதாக ” மே 1-ம் தேதி ரிலையன்ஸ் பவுண்டேசன் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

Twitter link | Archive link 

Twitter link | Archive link 

மற்றொரு ட்விட் பதிவில், ” மருத்துவ தர திரவ ஆக்சிஜன் உற்பத்தியை ஒரு நாளைக்கு 1000 மெட்ரிக் டன் வரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதிகரிக்கிறது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள உற்பத்தி மற்றும் போக்குவரத்தின் அளவை தனிப்பட்ட முறையில் முகேஷ் அம்பானி மேற்பார்வையிடுகிறார் ” எனக் கூறப்பட்டுள்ளது.

தி ஹிந்து செய்தியில், ” ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை ஒரு நாளைக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 1000 மெட்ரிக் டன் வரை உயர்த்தி உள்ளது. இது நாட்டின் மொத்த மருத்துவ தர திரவ ஆக்சிஜன் உற்பத்தியில் 11%க்கும் அதிகமாக உள்ளது. மார்ச் 2020-ல் இருந்து நிறுவனம் 55,000 மெட்ரிக் டன் மருத்துவ தர ஆக்சிஜனை பல்வேறு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

சவூதி அரேபியா, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 24 ஐ.எஸ்.ஓ கன்டெய்னர்களை இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை சவூதி அரம்கோ மற்றும் பிபி ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டன. இதனால் 500 மெட்ரிக் டன் கூடுதல் போக்குவரத்து கொள்ளளவு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கன்டெய்னர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன ” என நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கிறது.

வைரலாகும் வீடியோ குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின்(ஆர்ஐஎல்) செய்தித்தொடர்பாளர் ஆல்ட்நியூஸ் தளத்திற்கு அளித்த தகவலில், ” சவூதி அரேபியா, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 24 ஐஎஸ்ஓ கன்டெய்னர்களை இந்தியாவிற்கு விமானம் மூலம் அனுப்ப ஆர்ஐஎல் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த வாரத்தில் அவை அகமதாபாத் அல்லது ஜாம்நகர் விமான நிலையம் வழியாக ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தில் வழங்கப்பட்டன. வைரல் வீடியோவில், ஜாம்நகரில் உள்ள ஆக்சிஜன் ஆலைக்கு கன்டெய்னர் அனுப்பப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் உள்ள கன்டெய்னர் ஒன்றில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது ” எனக் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

சவூதி அரேபியா இந்தியாவிற்கு அளிப்பதாக கூறியது 80 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன். ஆனால், நாளொன்றிற்கு ஜாம்நகரில் உள்ள ஆக்சிஜன் ரிலையன்ஸ் உற்பத்தி ஆலையில் 0-1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் மட்டும் 15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை இலவசமாக வழங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்ததாக பிசினஸ் டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : அரபு நாடுகள் இந்தியாவிற்கு அளித்த ஆக்சிஜனை பிற பகுதிக்கு கொண்டு செல்லும் வீடியோவா ?

முடிவு : 

நம் தேடலில், சவுதி அரேபியாவிலிருந்து வந்த ஆக்சிஜன் வண்டியில் ரிலையன்ஸ் ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றுவதாக பரவும் வீடியோ தவறானது. ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் ஆக்சிஜன் ஆலைக்கு செல்வதற்கு முன் கன்டெய்னரில் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

கூடுதல் தகவல் :

சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட 80 மெட்ரிக்டன் ஆக்ஸிஜனை ரிலையன்ஸ் பெயரை மாற்றி வழங்கி வருவதாக தொடர்ந்து ஆக்சிஜன் டேங்கர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன.

மேலும் படிக்க : அரபு நாடுகள் இந்தியாவிற்கு அளித்த ஆக்சிஜனை பிற பகுதிக்கு கொண்டு செல்லும் வீடியோவா ?

சவூதி அரேபியாவில் இருந்து கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு ஆக்சிஜன் அனுப்பப்படும் புகைப்படங்கள் இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 24-ம் தேதியே பதிவிடப்பட்டுள்ளது. அந்த ஆக்சிஜன் டேங்க்களை பார்க்கவும்.

Archive link 

சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐஎஸ்ஓ கன்டெய்னர்கள்(ஆக்சிஜன்) விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படுவதாகவும், இந்தியா வரும் கன்டெய்னர்கள் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் ஆக்சிஜன் ஆலைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டியே அனுப்பப்படுகிறது என ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டேங்கர்களே சமூக வலைதளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button