சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என அண்ணாமலை பேசினாரா ?

பரவிய செய்தி
சவுதியை விட குஜராத்தில் விலை குறைவு. சவுதி அரேபியாவை விட பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவாக இருக்கிறது. தமிழக அரசும் அந்தளவிற்கு விலையை குறைக்க வேண்டும் – சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை
மதிப்பீடு
விளக்கம்
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என தமிழக பாஜகவினர் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை நடத்தினர். போராட்டத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலை, சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலைக் குறைவு எனப் பேசியதாக தந்தி டிவி சேனலின் நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.
மேலும், பெட்ரோலிய வளமிக்க நாடான சவுதி அரேபியாவின் விலையையும், குஜராத் மாநிலத்தின் பெட்ரோல் விலையையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
சென்னையில் பாஜகவினர் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் நேரலை வீடியோ தமிழக பாஜகவின் முகநூல் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது. ஒன்றிய அரசு போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் எனப் பேசிய அண்ணாமலை, சவுதி அரேபியாவின் பெட்ரோல் விலையுடன் குஜராத் மாநிலத்தை ஒப்பிட்டு பேசியதாக எதுவும் இடம்பெறவில்லை.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், தந்தி டிவி சேனலில் அப்படியொரு நியூஸ் கார்டு இடம்பெறவில்லை. ” சென்னை கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல பாஜக முயற்சி. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணி ” என்ற செய்தியையே தந்தி டிவி வெளியிட்டு இருக்கிறது.
இதுகுறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” இது போலியான நியூஸ் கார்டு ” என பதில் அளித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், சவுதி அரேபியாவை விட பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவாக இருக்கிறது. தமிழக அரசும் அந்தளவிற்கு விலையை குறைக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.