This article is from Aug 08, 2019

காஷ்மீர் விவகாரத்தில் சவூதி இளவரசரின் கருத்து என வைரலாகும் வீடியோ !

பரவிய செய்தி

காஷ்மீர் பிரச்சனையில் சவூதி இளவரசரின் கருத்து. அவரின் கருத்தை எப்படி வெளிப்படையாக எவ்வளவு அழகாக தெரிவிக்கிறார் என்பதை பாருங்கள்.

மதிப்பீடு

விளக்கம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாகவும், பாகிஸ்தானிற்கு எதிராகவும் சவூதி இளவரசர் பேசியதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கீழ்காணும் வீடியோ மற்றும் வாக்கியங்கள் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், ” காஷ்மீர் தொடர்பாக பொருத்தமான பேச்சாளராக பாகிஸ்தானை காணவில்லை. அவர்களுக்கு உரிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது இந்து நிலம் என நம்புகிறேன், அது மிகவும் சர்ச்சையானது. என்னுடைய நிலை காஷ்மீர் இந்து நிலம். இதனை அனைவரின் முன்பாகவும் தெரிவிக்கின்றேன் ” என பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் நுழைவதற்கு எதிராக அமைதியான தோரணையில் பேசி இருப்பார்.

சவூதி அரேபியாவின் இளவரசர் காஷ்மீர் விவகாரத்தில் தன்னுடைய கருத்தை பேசியுள்ளாரா என தேடுகையில், சமீபத்தில் வைரலாகும் வீடியோ பதிவை போன்று எங்கும் காண முடியவில்லை. மேலும், சவூதி இளவரசர் பாகிஸ்தான் நாட்டிற்கு எதிரான கருத்தை அளித்து இருந்தால் முதன்மை செய்திகளில் இடம்பெற்று இருந்திருக்கும்.

சமூக வலைதளத்தில் 1.02 நிமிட வீடியோ மட்டுமே பதிவிடப்பட்டு வைரலாகியதால், முழு வீடியோ குறித்தும் தேடினோம். வீடியோவின் ஓரத்தில் ARTH A Culture Fest என்ற வரிகளை காண முடிந்தது. அந்த வரிகளை கொண்டு தேடிய பொழுது வைரலாக வீடியோவின் முழு வீடியோவும் நமக்கு கிடைத்தது

யூட்யூப் தளத்தில் பிப்ரவரி 13-ம் தேதி ” Imam Tawhidi in conversation with Rajiv Malhotra on Inter-Faith Dialogues ” என்ற தலைப்பில் முழு வீடியோவும் வெளியாகி இருந்தது. Imam Tawhidi என்பவர் யார் என ஆராய்கையில், ஈரானில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஷியா முஸ்லீம் இமாம் என்பதை அறிய முடிந்தது.

பரந்த கொள்கை உடையவராக தோற்றம் கொண்ட இமாம் தவ்ஹிதி, இஸ்லாமிக் அடிப்படைவாதம் மற்றும் பாகிஸ்தானிற்கு எதிரான நிலை கொண்டவர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தன் ட்விட்டரில் ” பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மாநிலம் ” என பதிவிட்டது 12,000 லைக்குகள், 6 ஆயிரம் ரீட்விட்களை பெற்றது.

சமீபத்தில் மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.


பிப்ரவரி 2019-ல் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்வில் இமாம் தவ்ஹிதி கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய வீடியோவில் இருந்து ஒரு பகுதியை எடுத்து தவறாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக இதே வீடியோவையும், வரிகளையும் பிப்ரவரி மாதமும் இந்திய அளவில் சவூதி இளவரசரின் கருத்து என தவறாக பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader