This article is from Feb 28, 2021

சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தாரா ?

பரவிய செய்தி

இந்தியாவிலேயே சுதந்திரத்திற்காக போராடி 50 ஆண்டுகள் கொடும் சிறை தண்டனை, சித்திரவதைகள் அனுபவித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர்.

மதிப்பீடு

விளக்கம்

சாவர்க்கர் நினைவு நாளான பிப்ரவரி 26-ம் தேதி, இந்தியாவிலேயே சுதந்திரத்திற்காக போராடி 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர் மட்டுமே எனக் கூறி நினைவு அஞ்சலி பதிவுகளை பாஜகவினர், ஆர்எஸ்எஸ், வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்ததை பார்க்க முடிந்தது.

Facebook link | Archive link

உண்மை என்ன ? 

விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது உண்மையே. ஆனால், 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் எனக் கூறுவது தவறான தகவல்.

25-25 ஆண்டுகள் என சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு 1911-ம் ஆண்டில் இருந்து அந்தமான் சிறையில் இருந்த சாவர்க்கர் 1924-ம் ஆண்டில் பல்வேறு நிபந்தனைகள் உடன் விடுதலை செய்யப்பட்டதாக சாவர்க்கர் வாழ்க்கை குறித்து டெக்கான் ஹெரால்டு, நியூஸ்18 உள்ளிட்ட செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

நாசிக் மாவட்ட ஆட்சியர் கொலை வழக்கில் 1910-ம் ஆண்டில் டிசம்பர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது, மீண்டும் 1911 ஜனவரி 31ம் தேதி மீண்டும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அதே ஆண்டில் ஜூலை 11-ம் தேதி சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், 1921ம் ஆண்டு மே 21-ம் தேதி அந்தமானில் இருந்து ரத்னகிரி சிறைச்சாலைக்கு சாவர்க்கர் மாற்றப்பட்டு உள்ளார்.

பின்னர், எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது, ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என நிபந்தனைகளின் அடிப்படையில் 1924-ம் ஆண்டு ஜனவரி புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

1911 ஜூலை முதல் 1921 மே மாதம் வரை சுமார்  9 ஆண்டுகள் 10 மாதங்கள் அந்தமான் தீவு சிறையில் இருந்துள்ளார். பின்னர், 1924-ம் ஆண்டில் ரத்னகிரி இருந்து விடுதலையானதுடன் பார்க்கையில் தோராயமாக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து இருக்கிறார். ஆக, 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் எனக் கூறுவது பொய் என தெளிவாகிறது.

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜகவினர் தரப்பில் எழுந்த கோரிக்கை சர்ச்சையாகியது. அந்தமான் சிறையில் இருந்து பிரிட்டிஷ் அரசிற்கு சாவர்க்கர் பல மன்னிப்பு கடிதங்களை எழுதி இருந்தார் என விவாதங்கள் எழுந்த போது, அதற்கான தரவுகள், பதிவுகள் ஏதும் இல்லை என மத்திய கலாச்சார அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்து இருந்தார்.

அந்நேரத்தில், பிபிசி வெளியிட்ட கட்டுரை ஒன்றில், சாவர்க்கர் அந்தமான் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை மாதங்களுக்குள் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதியதாகவும், அங்கிருந்த 9 ஆண்டுகளில் 6 முறை மன்னிப்புக் கடிதங்களைக் கொடுத்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து  ஓய்வூதியம் பெற்றதாகவும் அந்த கட்டுரை விவரித்து இருந்தது.

முடிவு : 

நம் தேடலில், விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு 25-25 தனித்தனி ஆயுள் தண்டனை என 50 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால், அவர் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்ததாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல். அவர் தோராயமாக 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து இருந்துள்ளார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader